Doctor Vikatan: என் உறவினர் மகனுக்கு 16 வயதுதான் ஆகிறது. உடல் பருமன் பிரச்னையும் இருக்கிறது. அவனைப் பரிசோதித்த மருத்துவர் அவனுக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதாகச் சொல்கிறார். இந்த வயதில் எல்லாம் ஹை பிபி வராது என்று சொல்லிக் கொண்டு அடுத்தகட்ட சிகிச்சை எதுவும் செய்யாமல் இருக்கிறார். உண்மையிலேயே டீன் ஏஜிலும் உயர் ரத்த அழுத்தம் வருமா.... அதற்கு சிகிச்சை அவசியமா...?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்.
டீன் ஏஜ் பிள்ளைகளுக்கும் உயர் ரத்த அழுத்தம் வரலாம் என்பது உண்மைதான். 12 முதல் 19 வயது வரையிலான பிள்ளைகளில் 25 பேருக்கு ஒருவர் என்ற கணக்கில் இந்த உயர் ரத்த அழுத்தம் வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை, இப்படி இள வயதில் யாருக்காவது உயர் ரத்த அழுத்தம் வந்தால், அதன் பின்னணியில் சிறுநீரகப் பிரச்னை போன்ற ஏதோ காரணம் இருந்தது. ஆனால், இன்று டீன் ஏஜ் ஹைப்பர் டென்ஷனுக்கு, அவர்களது மோசமான லைஃப்ஸ்டைலே முக்கிய காரணமாக இருப்பதைப் பார்க்கிறோம். உடலியக்கம் இல்லாத வாழ்க்கை, தவறான உணவுப்பழக்கம், உடல்பருமன் என பலதும் இதில் அடக்கம்.
இந்தப் பிரச்னையின் தீவிரத்தைப் பொறுத்து மருந்து, மாத்திரைகள் இருக்கின்றன என்றாலும், லைஃப்ஸ்டைலில் மாற்றங்கள் செய்வதே பிரதான சிகிச்சையாக இருக்கும். இன்றைய இளம் வயதினரின் உணவுப்பழக்கம் மிக மோசமானதாக இருக்கிறது. நண்பர்களுடன் அடிக்கடி வெளியில் சாப்பிடுவது, ஆரோக்கியமற்ற துரித உணவுகளைச் சாப்பிடுவது, ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடுவது, வீட்டில் சமைத்தாலும் சுவைக்காகவும் நிறத்துக்காகவும் செயற்கையான சாஸ் மற்றும் சுவையூட்டிகளைச் சேர்ப்பது போன்றவற்றைச் செய்கிறார்கள்.
இந்த சாஸ் மற்றும் சுவையூட்டிகள் அளவுக்கதிமாகப் பதப்படுத்தப்பட்டிருக்கும். அதிக உப்பும், சர்க்கரையும் சேர்க்கப்பட்டிருக்கும். இவை இரண்டுமே ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல.
இந்தத் தலைமுறையினரின் தூக்க சுழற்சியும் மிக மோசமாக மாறியிருக்கிறது. நள்ளிரவு வரை விழித்திருப்பது, குறைந்த நேரம் தூங்குவது என அந்தப் பழக்கமும் உயர் ரத்த அழுத்தத்துக்கு முக்கிய காரணம். 7 முதல் 8 மணி நேரத் தூக்கம் மிக மிக அவசியம். பள்ளி, கல்லூரிகளில் கொடுக்கப்படும் அழுத்தம், படிப்பு தொடர்பான ஸ்ட்ரெஸ் போன்றவையும் இன்னொரு காரணம். புகைப்பழக்கமும் மதுப்பழக்கமும் கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும். இவற்றின் பக்கவிளைவுகளில் உயர் ரத்த அழுத்தம் பிரதானமானது. இந்தப் பழக்கங்கள் கவனச் சிதறலையும் ஏற்படுத்தும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
எனவே உங்கள் நண்பருக்கு இந்த விஷயங்களை விளக்கிச் சொல்லி, அவரின் மகன் விஷயத்தில் மருத்துவர் சொல்பவற்றைக் கேட்கச் சொல்லுங்கள். 16 வயதுச் சிறுவனின் ஆரோக்கியம் என்பது அலட்சியப்படுத்தக்கூடியதல்ல. அது அவரது பிற்கால ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
source https://www.vikatan.com/health/doctor-vikatan-can-high-bp-affect-teens
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக