என் வயது 26. கணவருக்கு 30. திருமணமாகி 4 ஆண்டுகளாக எங்களுக்கு குழந்தை இல்லை. மருத்துவர்கள் என்னையும் என் கணவரையும் பரிசோதித்துவிட்டு இருவரிடமும் குறைகள் எதுவும் இல்லை என்கிறார்கள். குறைகளே இல்லை என்றபோதும் ஏன் கருத்தரிக்கவில்லை?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மகப்பேறு மருத்துவரும், லேப்ராஸ்கோப்பி அறுவைசிகிச்சை நிபுணருமான ஆர். கார்த்திகா
குழந்தையின்மைக்கான பரிசோதனைகளில் எந்தப் பிரச்னையும் இருக்காது. ஆனாலும் கருத்தரிக்காது. இந்த நிலை கடந்த சில வருடங்களில் நிறைய தம்பதியரிடம் அதிகரித்து வருவதைப் பார்க்கிறோம். இதை `அன்எக்ஸ்ப்ளெயிண்டு இன்ஃபெர்ட்டிலிட்டி' (Unexplained Infertility ) என்று சொல்வோம்.
சாதாரணமாக குழந்தையின்மைக்கான பரிசோதனை என்று பார்த்தால் முதலில் செய்யப்படுவது ஸ்கேன். அதில் கருமுட்டை வளர்கிறதா, வளர்ந்து வெடிக்கிறதா என்பதைப் பார்க்க முடியும்.
அதேபோல கருக்குழாய்கள் இரண்டும் எந்த அடைப்புமின்றி இருக்கின்றனவா என்பதையும் ஸ்கேனில் பார்த்துக் கண்டறிய முடியும். கர்ப்பப்பையில் கட்டிகள் ஏதேனும் இருக்கின்றனவா என்பதும் பரிசோதிக்கப்படும்.
அடுத்து கணவருக்கான பரிசோதனைகள்... அதில் அவருக்கு விந்தணுக்களின் தரம் எப்படியிருக்கிறது என்பதை முதலில் பார்க்க வேண்டும். அணுக்களின் எண்ணிக்கை சரியாக இருக்கிறதா, அவற்றின் நகரும் தன்மை எப்படியிருக்கிறது என்பதெல்லாம் பரிசோதிக்கப்படும்.
இப்படி கணவன், மனைவி இருவருக்கும் செய்யப்படுகிற டெஸ்ட்டுகள் அனைத்திலும் எந்தப் பிரச்னைகளும் இல்லை, நார்மலாக இருக்கின்றன என்ற பட்சத்தில் இந்த நிலையை ``அன்எக்ஸ்ப்ளெயிண்டு இன்ஃபெர்ட்டிலிட்டி’’ என்று சொல்வோம்.
இதைத் தவிர சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு கருமுட்டை வளர்வதையும் வெடிப்பதையும் பரிசோதனையில் பார்க்க முடியுமே தவிர, அந்த முட்டையின் தரம் எப்படியிருக்கிறது என்று சொல்ல முடியாது.
அதேபோலதான் விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் நகரும் திறனைப் பரிசோதனையில் பார்க்க முடியுமே தவிர, அவற்றின் செயல்திறன் எப்படியிருக்கிறது என்பது தெரியாது. இந்த இரண்டும்கூட `அன்எக்ஸ்ப்ளெயிண்டு இன்ஃபெர்ட்டிலிட்டி’ நிலைக்கு காரணமாகலாம்.
இப்படி `அன்எக்ஸ்ப்ளெயிண்டு இன்ஃபெர்ட்டிலிட்டி' என்று உறுதிசெய்யப்பட்டவர்கள், ஐவிஎஃப் மாதிரியான செயற்கை கருத்தரிப்பு சிகிச்சைகளை முயற்சி செய்யலாம். அப்போது அவர்களுக்கு கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
source https://www.vikatan.com/health/healthy/doctor-vikatan-there-is-no-problem-for-both-husband-and-wife-what-are-the-reasons-for-not-getting-pregnant
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக