Ad

வியாழன், 14 ஜூலை, 2022

``பிரதமர் சொன்னபோது எனக்கு பேச்சே வரவில்லை” - ஜனாதிபதி வேட்பாளராக தேர்வானது குறித்து திரெளபதி முர்மு

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கும் திரெளபதி முர்மு தனக்கு ஆதரவு திரட்டுவதற்காக நேற்று மாலையில் மும்பை வந்தார். அவர் மும்பை விமான நிலையம் அருகில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கி இருந்தார். விமான நிலையத்தில் அவரை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் முர்முவை வரவேற்றனர். முர்முவுடன் பாஜக தலைவர்களில் ஒருவரான வினோத் தாவ்டேயும் வந்திருந்தார். முர்முவுக்கு பாரம்பரிய முறைப்படியும் வரவேற்பு கொடுக்கப்பட்டது. ஹோட்டலில் அவரை ஏக்நாத் ஷிண்டே அணி சிவசேனா எம்.எல்.ஏ.க்கள், பாஜக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் அரசுக்கு ஆதரவு கொடுக்கும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் சந்தித்தனர். அவர்கள் மத்தியில் முர்மு பேசுகையில் மிகவும் உணர்ச்சி வசப்பட்டார்.`` பாஜகவின் நாடாளுமன்ற குழு ஜனாதிபதி வேட்பாளருக்கான பெயரை உறுதி செய்தவுடன் பிரதமர் நரேந்திர மோடி எனக்கு போன் செய்தார். அவர் போன் செய்து எனக்கு தகவல் கொடுத்தவுடன் சிறிது நேரம் எனக்கு பேச்சே வரவில்லை. அவருக்கும், பாஜக-வுக்கும் நன்றி தெரிவித்தேன்” என்றார்.

தொடர்ந்து மராத்திய மன்னர் சத்ரபதி சிவாஜி, அம்பேத்கர், சாவித்ரிபாய் புலே ஆகியோர் இந்த சமுதாயத்துக்கு செய்த பணிகளை நினைவு கூர்ந்த முர்மு, பழங்குடி இனத்தில் இருந்து தான் வந்திருப்பதாகவும், அரசியலுக்கு வரும் முன்பு குழந்தைகளுக்கு கல்வி கற்றுக்கொடுத்தேன் என்றும் தெரிவித்தார்.

முர்முவிற்கு பாரம்பரிய வரவேற்பு

``நான் ஆளுநராக வருவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. அப்பதவி முடிந்த பிறகு பழங்குடியின குழந்தைகள் மற்றும் மக்களின் நலனுக்காக பாடுபட்டேன். நான் எந்த வித அரசியல் பின்னணியும் இல்லாதவள். அப்படி இருந்தும் கடின உழைப்பால் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

முர்முவுக்கு சிவசேனா ஆதரவு கொடுக்கும் என்று அதன் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்திருந்தார். அப்படி இருந்தும் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களுக்கு முர்முவை காண அழைப்பு விடுக்கவில்லை. அதோடு ஆதரவு கொடுக்கும்படி கேட்டு முர்மு, உத்தவ் தாக்கரேயின் மாதோஸ்ரீ இல்லத்தின் கதவை தட்டவும் இல்லை. ஆனால் கட்சி உடைந்துவிடக்கூடாது என்பதற்காக உத்தவ் தாக்கரே முர்முவிற்கு ஆதரவு கொடுப்பதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.



source https://www.vikatan.com/news/politics/when-pm-modi-told-me-that-he-had-chosen-me-as-the-presidential-candidate-i-was-speechless-murmu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக