Ad

ஞாயிறு, 15 மே, 2022

ஒருவருக்கு ஒரு பதவி; குடும்பத்தில் ஒருவருக்கே சீட்; பாதயாத்திரை... 2024-க்கு தயாராகும் காங்கிரஸ்!

ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், 2024-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வியூகம் அமைக்கவும், அதிருப்தியில் இருக்கும் முக்கியத் தலைவர்களைச் சமாதானப்படுத்தவும், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல்களை எதிர்கொள்ளவும், நிர்வாக ரீதியாக புதிய முடிவெடுக்கவும் நிர்வாகிகளுடன் கட்சி மேலிடம் ஆலோசனை மேற்கொண்டுவருகிறது.

இந்த ஆலோசனையில் காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் பாதயாத்திரை, பொதுக்கூட்டங்கள் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. வேலையில்லாத் திண்டாட்டத்தை முன்னிறுத்தி காங்கிரஸ் நாடு தழுவிய பாதயாத்திரை மேற்கொள்ளும். இந்த திட்டம் 'ஜன் ஜாக்ரன் அபியான் 2.0'-ன் ஒரு பகுதியாகும். இதுதொடர்பான ஆலோசனையை திக்விஜய் சிங் வழங்கினார்.

சோனியா காந்தி

இந்த திட்டம் குறித்து மிக நீண்ட விவாதம் நடைபெற்றது. மேலும், நாடு முழுவதும் உள்ள மக்களுடன் இணைவதற்கான ஆலோசனையாக இளைஞர் குழு இதேபோன்ற திட்டத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்த திட்டத்தின் சாரம்சம், வேலையில்லாத் திண்டாட்டம் தொடர்பாகக் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை காங்கிரஸ் பாதயாத்திரை நடத்த வேண்டும் என்றும் ராகுல் காந்தி உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் அவ்வப்போது அந்த நிகழ்வுகளில் பங்கேற்பார்கள் என்றும் திட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

காங்கிரஸ் - பாஜக

இதுதொடர்பாக தனியார் நிறுவனத்திடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர், ”இந்தத் திட்டம் கிட்டத்தட்ட இறுதியானது. நாடு முழுவதும் இந்த யாத்திரையைக் காங்கிரஸ் நடத்த உள்ளது. பொதுக்கூட்டங்கள் நடத்தவும் முன்மொழியப்பட்டுள்ளது. மக்களுடன் நேரடியாக இணைவதற்கான நடவடிக்கையாகக் காங்கிரஸ் இதைக் கருதுகிறது” எனக் கூறினார்.

இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், ``கட்சியில் ஒரு குடும்பத்திற்கு ஒரு பதவி என்ற விஷயத்தை கொண்டு வரவேண்டும் என விரும்புகிறேன். மூத்த தலைவரோ, இளம் தலைவரோ கட்சியில் யாராக இருந்தாலும் மக்களிடம் நேரடியாக செல்ல வேண்டும். வியர்வை சிந்தாமல் எதுவும் நடக்காது. மக்களிடம் செல்வதுதான் இருக்கக்கூடிய ஒரே வழி” என்றார்.

ராகுல் காந்தி - காங்கிரஸ்

பின்னர், ஒரு நபருக்கு ஒரு பதவி, குடும்பத்தில் ஒருவருக்கு தான் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு என்ற விதி காங்கிரஸில் ஏற்று கொள்ளப்பட்டது. இந்த விதியின்படி, கட்சியில், ஒரே குடும்பத்தின் இரண்டாவது உறுப்பினர் தேர்தலில் போட்டியிட விரும்பினால், அவர்கள் 5 ஆண்டுகள் தீவிர அரசியலில் இருந்திருக்க வேண்டும் என்கிறார்கள்.



source https://www.vikatan.com/news/politics/congress-plans-padyatras-from-kashmir-to-kanyakumari-to-raise-unemployment-issue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக