சென்னை கிண்டி கத்திப்பாரா அருகே பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்று செயல்பட்டுவருகிறது. நேற்று மாலை, இந்த ஹோட்டலில் உள்ள பாருக்கு ஓர் இளைஞர் வந்திருக்கிறார். அவருக்கு வயது குறைவாக இருந்துள்ளது. அதுமட்டுமின்றி ஏற்கெனவே அவர் அதிக மது போதையில் இருந்திருக்கிறார். இதனால், மது அருந்த அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த அந்த நபர் அங்கிருந்த ஊழியர்களுடன் தகராறு செய்துள்ளார். தனக்கு அனுமதி மறுக்கப்பட்ட ஆத்திரத்தில் அந்த இளைஞர், தான் வந்த காரை வேகமாக இயக்கி ஹோட்டல் கேட் மீது மோதியிருக்கிறார். கார் மோதியதில் கேட் உடைந்து வாகனத்தோடு ரோட்டுக்கு வந்தது. சாலையில் காருடன் கேட் இணைந்திருந்ததால், வாகனங்கள் செல்ல முடியாமல் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படத் தொடங்கியது.
சம்பவம் அறிந்து வந்த காவல்துறையினர், காரில் அடிபட்டுக் கிடந்த இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், அந்த காரையும், கேட்டையும் சாலையிலிருந்து நீக்கி போக்குவரத்தைச் சரிசெய்தனர். ஹோட்டல் ஊழியர்கள் வழங்கிய புகாரில் அடிப்படையில், மருத்துவமனையிலிருந்து இளைஞரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அந்த காரை ஓட்டியது, முகப்பேர் பகுதியைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவன் என்பது போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஏற்கெனவே அளவுக்கு அதிகமான மது போதையில் இருந்ததாலும், வயது குறைவாக இருந்த காரணத்தினாலும், ஹோட்டல் ஊழியர்கள் அவரை பாருக்குள் மது அருந்த அனுமதிக்கவில்லை. அந்த ஆத்திரத்திலும், மது போதையிலும் இப்படிச் செய்திருக்கிறார். அந்த இளைஞரைக் கைதுசெய்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகிறார்கள்.
source https://www.vikatan.com/news/crime/chennai-denial-of-entry-into-the-bar-the-angry-youth-smashed-the-star-hotel-gate
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக