முதியவர்களுக்கு கோடையும் சரி... குளிர் காலமும் சரி பல தொல்லைகளைத் தரக்கூடியவையே. குளிர் காலத்தில் இருமல், சளித் தொல்லைகள் அதிகம் ஏற்படும். வெயில் காலத்தில் தோலில் சிறு சிறு வேனல் கட்டிகள் ஏற்படும். அதிக வியர்வை, களைப்பு, நாக்கு வறட்சி மற்றும் தூக்கமின்மை போன்ற பல தொல்லைகள் வரலாம். பருவ நிலையை நம்மால் மாற்ற முடியாது. ஆனால், அதற்கேற்றார்போல நாம் சில வாழ்க்கை வழிமுறைகளை மாற்றி அமைத்துக் கொண்டாலே எல்லா பருவத்தையும் இனிய பருவமாக அனுபவிக்க முடியும்.
கோடைக் காலத்தில் ஏற்படும் பிரச்னைகள்
தோல் சார்ந்த தொல்லைகள்
சூரிய ஒளியில் உள்ள யு.வி (Ultra violet ray) கதிர்கள் தோல் மேல் தொடர்ந்து படும்போது தோல் நிறம் சிவக்கும், தோல் அரிக்கும் அல்லது தடித்துப்போகும். அதிகமாக வியர்த்துக் கொட்டும். அதனால் உடலில் அரிப்பு தோன்றும். சில நேரங்களில் வியர்வையில் நாற்றம் இருக்கும். முதுகு மற்றும் பல உடற்பாகங்களில் வியர்க்குரு தோன்றும். உடலின் பல பகுதிகளில் வேனல் கட்டிகள் எனப்படும் சிறுசிறு கொப்புளங்கள் தோன்றும். முக்கியமாக நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இவை அதிகம் வர வாய்ப்புண்டு. முகத்தில் உள்ள முகப்பரு அதிகரிக்க வாய்ப்புண்டு. தோல் வனப்பு குறைந்து, சுருக்கம் ஏற்படும். உடலில் பூஞ்சைக் காளான் நோய்த் தொற்று ஏற்படலாம். அது அக்குள் மற்றும் இடுப்புப் பகுதியில் அதிகமாகத் தோன்றும்.
கெண்டைச்சதைப் பிடிப்பு (Cramps)
வெயில் காலத்தில், அதிகமாக உடற்பயிற்சி செய்த பின்பு காலில் உள்ள ஆடுசதையில் அதிகமாக வலி உண்டாகும்.உப்பு கலந்த தண்ணீரைக் குடித்தால் வலி உடனே சரியாகிவிடும். இத்தகைய தொல்லை வருபவர்களுக்கு சிறிது உப்பை உணவில் சேர்த்துக் கொண்டால் சதையில் வலி ஏற்படுவதைத் தடுக்க முடியும்.
உஷ்ண பலவீனம் (Heat exhaustion)
இறுக்கமான உடை அணிந்து கொண்டு, வெயில் காலங்களில் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு, உடலில் சூடு அதிகரிக்க வாய்ப்புள்ளது. உடல் பலவீனம், மயக்கம், மயக்க நிலையில் கீழே விழுதல் போன்ற தொல்லைகள் ஏற்படலாம். இவர்களை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தி, உடைகளைத் தளர்த்தி, குளிர்ந்த தண்ணீரால் உடல் முழுவதும் ஒத்தடம் கொடுக்க வேண்டும். மின்சார விசிறி மூலம் சூட்டைத் தணிக்கலாம் அல்லது குளிர்சாதன அறையில் சற்று ஓய்வு எடுக்கச் செய்ய வேண்டும். உப்பு கலந்த தண்ணீரை குடிக்கக் கொடுக்கலாம். தேவைப்பட்டால் ஊசி மூலம் திரவத்தைச் செலுத்தலாம்.
உஷ்ண மயக்கம் (Heat Syncope)
வெயிலில் வெகு நேரம் நின்றிருந்தாலோ, உடற்பயிற்சி செய்தாலோ சிலருக்கு திடீரென்று மயக்கம் ஏற்பட்டு கீழே விழும் வாய்ப்புண்டு. இவர்களை தரையில் படுக்க வைத்து சிறிது உப்பு கலந்த பழச்சாறு அல்லது மோர் அருந்தினால் பூரண குணம் விரைவிலேயே அடைந்து விடுவார்கள்.
வருமுன் காப்போம் என்பதற்கு இணங்க கோடையை குளிராக்க சில முன் எச்சரிக்கைகளை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம்.
வெயிலின் தாக்கத்தை குறைக்க...
-
கோடையில் அதிகம் வெயிலில் செல்ல முடியாது. ஆகையால், அது ஆரம்பிப்பதற்கு முன்பே உதாரணமாக நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் உள்ளவர்கள் கோடை வருவதற்கு முன்வு தக்க மருத்துவ ஆலோசனை பெறுதல் அவசியம். ஏனெனில், வெயிலில் அதிகம் அலைய முடியாது.
-
கோடையிலும் உடற்பயிற்சி அவசியம். காலை 8:00 மணிக்குள்ளும், மாலை 5 - 7 மணிக்குள்ளும் உடற்பயிற்சியை முடித்துக் கொள்வது நல்லது.
-
வெயிலில் அதிகம் இருந்தால் வைட்டமின் டி கிடைக்கும் என்று எண்ணி மொட்டை வெயிலில் நின்று மயக்கமடைய வேண்டாம்.
-
கோடைகாலத்தில் பகல் நேரத்தில் வெளியே செல்வதைத் தவிர்ப்பது நல்லது. முக்கியமான வேலைகள் இருந்தால் அதிகாலை அல்லது மாலை வேளைகளில் செல்லுமாறு பார்த்துக் கொள்ளுங்கள். குடை, குளிர் கண்ணாடி, தண்ணீர் பாட்டில் போன்றவற்றை உடன் எடுத்துச் செல்ல மறக்காதீர்கள்.
-
முடிந்தளவுக்கு காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே செல்ல வேண்டாம்.
-
வெளியே போவதற்கு முன்பு தண்ணி, சிறிது உப்பு கலந்த மோர் அல்லது பழச்சாறு அருந்துவது நல்லது.
-
குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் அல்லது வேறு ஏதாவது திரவமோ ஒரு நாளைக்குத் தேவைப்படும். இதய நோய் அல்லது சிறுநீரக நோய் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி தேவையான நீரை அருந்தலாம்.
-
முதியவர்களுக்கு வெயில் அதிகம் இருந்தாலும், தாகம் அவ்வளவாக எடுக்காது. அதனால் போதிய தண்ணீர் குடிக்க மாட்டார்கள். வீட்டில் உள்ளவர்கள் முதியவர்களை போதிய தண்ணீரைக் குடிக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
-
முதியவர்களுக்கு, சருமத்தில் ஈரப்பதம் குறைவாக இருக்கும். கோடைகாலத்தில் சரும வறட்சி மேலும் அதிகமாக வாய்ப்பு உண்டு. எனவே குளித்த பிறகு தவறாமல் மாய்ஸ்சுரைசர் பூச வேண்டும். மேலும் 30 பி.எப். கொண்ட சன் ஸ்கிரீன் கிரீம் பயன்படுத்துங்கள்.
-
தர்பூசணி, இளநீர், ஆரஞ்சு போன்ற பழரசங்களை அதிகமாக எடுத்துக் கொள்ளலாம். நன்னாரி சர்பத் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். பதனீர் கோடையில் உடலுக்கு மிகவும் நல்லது.
-
மசாலா அதிகம் உள்ள உணவைத் தவிர்க்கலாம் அல்லது குறைக்கலாம். உதாரணம்: அசைவ உணவு. கஞ்சி கம்பு, திணை ஆகியவற்றில் செய்த கஞ்சி, உடல் சூட்டைக் குறைக்க வல்லது, எளிதில் செரிக்கவல்லது.
-
செயற்கைப் பானங்களை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.
-
மின் விசிறி, ஏர்கூலர், குளிர் சாதனப் பெட்டி ஆகிய உபகரணங்களைத் தேவைக்கேற்ப உபயோகிக்கலாம்.
-
நீங்கள் வசிக்கும் பகுதியை குளிர்ச்சியாக வைத்திருங்கள். காலை வேளைகளில் அறையின் ஜன்னல்களை மூடி வைக்க வேண்டும். இதன் மூலம் அதிகப்படியான வெப்பம் உள்ளே வருவதைத் தடுக்கலாம்.
-
ஏ.சி. பயன்படுத்துபவர்கள், அது கிருமிகள், தூசிகள் இல்லாமல் சுத்தம் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.
-
படுக்கை அறையில் வெட்டிவேர்க் கொடியைத் தண்ணீரில் நனைத்து தொங்கவிட்டால் அறை குளிர்ச்சியாக இருக்கும்.
-
லேசான பருத்தியிலான அல்லது கதர் ஆடைகளை அணிவது நல்லது.
-
காலையிலும் இரவிலும் குளித்தால் உடல் சூடு குறையும்.
-
கண்கள் மிகவும் சூடாக இருந்தால் வெள்ளரிக்காய் நறுக்கி கண்கள் மேல் சிறிது நேரம் வைத்திருந்தால் கண் சூடு குறையும்.
-
வேர்க்குரு அதிகம் இருந்தால் கேலமைன் கீரிமை உடலுக்குத் தடவலாம். அரிப்பு அதிகமாக இருப்பின், மருத்துவரைக் கலந்து அதற்குத் தேவையான மாத்திரைகளைச் சாப்பிடலாம்.
வெயில் அதிகம் அதிகம் என்று புலம்புவதால் பயன் ஏதுமில்லை. மேற்கொண்ட வழிமுறைகளை தவறாமல் கடைப்பிடித்து வந்தால், கோடை வந்தால் ’வரட்டும் போடா’ என்கிற மனநிலையில் அதை ஒரு குளிர்ச்சிப் பருவமாக மாற்றி அமைக்க முடியும்!
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
source https://www.vikatan.com/lifestyle/summer-tips-for-senior-citizens
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக