மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது மன்னம்பந்தல் என்ற இடத்தில் தமிழக ஆளுநர் செல்லும் போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், தி.க உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் சார்பில் ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன முழக்கமிட்டு கோஷங்கள் எழுப்பினர். அப்போது ஆளுநர் பார்வைக்கு போராட்டக்காரர்கள் படாத வகையில் காவல்துறை வாகனத்தை கொண்டு வந்து மறைத்து நிறுத்தினர். இதனால் போராட்டக்காரர்கள் கறுப்புக் கொடியை சாலையில் எறிந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்த விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையானது. ஆளுநரின் பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டதாக பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டியது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இது குறித்து மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுத போவதாக தெரிவித்ததோடு, கடிதமும் அனுப்பியது விவாத பொருள் ஆனது. அமித் ஷாவுக்கு அண்ணாமலை எழுதிய கடிதத்தில், ``தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. ஆளுநரின் கான்வாய் வாகனங்கள் மீது கற்கள், தண்ணீர் பாட்டில்கள் கறுப்பு கொடிகள் வீசப்பட்டது. இந்த தாக்குதலின் போது தமிழக காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் முக்கியத்துவம் அளித்து வன்முறையான போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் குறித்து விசாரிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்தும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, ``தமிழகத்திலேயே, மேதகு தமிழக ஆளுநர் மீது கற்களையும், கம்புகளையும் கொண்டு தாக்குதல் நடத்தியதும், தமிழகத்திற்குள்ளேயே தமிழக ஆளுநர் பயணிக்க முடியவில்லை என்பதும், தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு எவ்வளவு சீர்கேடு அடைந்துள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது.
தமிழக ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லை எனில், சாதாரண மக்களுக்கு இந்த விடியா அரசு எவ்வாறு பாதுகாப்பு அளிக்கும் என்ற கேள்வியும் எழுகிறது” எனக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
இதனிடையே, ஆளுநரின் வாகனம் மீது கற்கள் வீசப்படவில்லை என காவல்துறை தரப்பில் விளக்கம் அளித்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. ``ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு முன் மூன்று அடுக்கு இரும்புத் தடுப்பு பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டன. ஆளுநரின் கான்வாய் சென்ற நிலையில் கருப்புக் கொடிகளை அவர்கள் வீசியெறிந்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுப்புகள் அமைத்து கட்டுக்குள் வைத்திருந்தோம். அவர்களை பின்னர் கைதுசெய்து வாகனத்தில் ஏற்றினோம். கைது செய்யப்பட்டவர்கள் மீது மயிலாடுதுறை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது”என காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி விஸ்வேஷ் சாஸ்திரி தமிழக டிஜிபிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர், ``ஆளுநரின் வாகனம் சென்றபோது அங்கு கூடி இருந்தவர்கள் கார்களை நோக்கி கொடிகளை வீசினர். அதிர்ஷ்டவசமாக பாதிப்பின்றி ஆளுநரின் பாதுகாப்பு கான்வாய் கடந்து சென்றது. ஆளுநரின் வாகனத்தை நோக்கி கொடிகளை வீசியவர்கள் மீது சட்டப்பிரிவு 124-ன்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒருபக்கம், நீட் உள்ளிட்ட தீர்மானங்கள், மசோதாகளை ஆளுநர் ரவி கிடப்பில் போட்டுள்ளதால், ஆளுநர் சார்பில் வழங்கப்பட்ட தேநீர் விருந்தை ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் புறக்கணித்தது. மறுபக்கம், ஆளுநர் மயிலாடுதுறை மாவட்டம் சென்றபோது, கறுப்புக்கொடி போராட்டம் நடைபெற்றது. சில போராட்டக்காரர்கள் ஆளுநர் கான்வாய் வாகனங்கள் மீது கொடிகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் ஆளுநர் ரவி இரண்டு நாள் பயணமாக டெல்லி புறப்பட்டு செல்கிறார். டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை சந்திக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. தமிழகத்தில் பரபரப்பான சூழல் நிலவும் இந்த நிலையில், ஆளுநரின் டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
source https://www.vikatan.com/government-and-politics/politics/article-on-tamilnadu-governor-rn-ravi-new-delhi-visit-and-situation-in-state
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக