நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகிலுள்ள எருமாடு ஆழிஞ்சால் பகுதியைச் சேர்ந்தவர் தேவகி. 78 வயதான இவரின் செல்போனுக்கு மின்வாரியத்திலிருந்து சமீபத்தில் குறுஞ்செய்தி ஒன்று வந்திருக்கிறது. கடந்த இரண்டு மாதங்கள் மின்சாரம் பயன்படுத்தியதற்கு ரூபாய் 25 ஆயிரம் ரூபாய் கட்டணத்தை உடனடியாகச் செலுத்துமாறு அந்த குறுஞ்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
``மூன்று மின் விளக்குகள் மட்டுமே இருக்கும் வீட்டுக்கு 25 ஆயிரம் ரூபாய் கட்டணமா?” என அதிர்ச்சியடைந்த தேவகி, பலரிடமும் இது குறித்து முறையிட்டிருக்கிறார். இது குறித்து உள்ளூர் மின்வாரிய அலுவலர்கள் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். வேறு வழியின்றி 25,071 ரூபாயைக் கட்டணமாகச் செலுத்தியிருக்கிறார்.
இதைத் தொடர்ந்து, மின்வாரிய உயரதிகாரிகளிடம் புகார் அளித்தார். உடனே கூடலூர், பந்தலூர் மின்வாரிய செயற்பொறியாளர்கள் தேவகியின் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, மின்வாரிய ஊழியரின் பொறுப்பின்மை காரணமாக இந்தக் குளறுபடி நடந்திருப்பதை உறுதி செய்தனர். மின் கணக்கீட்டாளரை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்ததோடு, தேவகி செலுத்திய மின் கட்டணத்தைத் திரும்ப ஒப்படைத்தனர்.
இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய மின்வாரிய அதிகாரி ஒருவர், "இந்தப் பகுதியைச் சேர்ந்த மின் கணக்கீட்டாளர் ரமேஷ் முறையாக வந்து மின் பயன்பாட்டு அளவை கணக்கீடு செய்யாமல் இருந்திருக்கிறார். அவர்மீது துறைரீதியான நடவடிக்கை எடுத்திருக்கிறோம். தேவகி வீட்டிலிருந்து பழைய மின் மீட்டரை அகற்றி, புதிய டிஜிட்டல் மீட்டரைப் பொருத்தியிருக்கிறோம்.தேவகி செலுத்திய மின் கட்டணம் திரும்ப அவருக்கே வழங்கப்பட்டது" என்றார்.
source https://www.vikatan.com/news/tamilnadu/shocking-electricity-bill-in-nilgiris-action-taken-on-complaint
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக