Ad

செவ்வாய், 19 ஏப்ரல், 2022

LSG vs RCB: டு ப்ளெஸ்ஸி 96, ஹேசல்வுட் 4 விக்கெட்... எல்லாம் ஓகே, கோலி எப்போ ஃபார்முக்கு வருவார்?

`யப்பா கார்த்தி நீ ரொம்ப நல்லவன்பா, உனக்கு இன்னும் கொஞ்சம் நல்லது நடந்திருக்கலாம்' என ரிதம் படத்தில் ஒரு வசனம் உண்டு. நம்மூர் பையன் தினேஷ் கார்த்திக்கிற்கு அப்படியான நல்லது வெகு விரைவில் நடந்துவிடும் போல. கடந்த போட்டியில், அவர் ஆடிய ஆட்டத்தைப் பார்த்துவிட்டு ஏபி டி வில்லியர்ஸ் முதல் பல முன்னணி வீரர்கள் டிகேவைப் பாராட்டி வருகிறார்கள்.

ஆனாலும் அப்படியானதொரு நல்லதுகூட விராட் கோலிக்கு நடந்துவிடாது போலும். யாரேனும் விக்கெட் எடுத்தால் மட்டும், திருவிழாவுக்குள் நுழைந்த குழந்தை போல குதூகலமாகிவிடுகிறார். ஃபீல்டிங் என்பதைக் கடந்து, பேட்டிங்கில் இனி அந்தப் பழைய பன்னீர்செல்வத்தை பார்க்கவே முடியாதோ என்று சொல்கிற நிலைக்கு விராட் கோலி நம்மை வரவைத்துவிட்டார். சரி, இன்றைய போட்டியில் என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.

டாஸ் வென்ற லக்னோ ஜெயன்ட்ஸ் என்ன செய்தது தெரியுமா? மற்ற அணிகளைப் போலவே சேஸிங் செய்ய தீர்மானித்தது. அதே அணிதான் என்றார் ராகுல்.

LSG vs RCB
லக்னோ ஜெயன்ட்ஸ் பிளேயிங் XI: ராகுல், டி காக், மணிஷ் பாண்டே, தீபக் ஹூடா, ஆயூஷ் படோனி, மார்கஸ் ஸ்டானிஸ், ஜேசன் ஹோல்டர், க்ரூனால் பாண்டியா, அவேஷ் கான், சமீரா, ரவி பிஷ்னாய்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு XI: டு ப்ளெஸ்ஸி, அனுஜ் ராவத், விராட் கோலி, மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக், சுயாஷ் பிரபுதேசாய், சபாஷ் அஹமது, ஹசரங்கா, ஹேசல்வுட், ஹர்ஷல் படேல், முகமத் சிராஜ்

ராவத்தும், டு பிளெஸ்ஸியும் ஓப்பனிங் இறங்கினார்கள். முதல் ஓவரிலேயே பெங்களூருக்கு இரட்டை அதிர்ச்சி காத்திருந்தது. சமீரா வீசிய பந்தை மிஸ் டைம் செய்த ராவத், மிட் ஆஃபில் நின்றுகொண்டிருந்த ராகுலிடம் கேட்ச் கொடுத்தார். கோலி உள்ளே நுழைந்தார். சமீராவின் பந்தை கோலி விலகி அடிக்க முயல தீபக் ஹூடா அதை கேட்ச் பிடித்தார். கோல்டன் டக். வந்த வேகத்தில் வெளியேறினார் கோலி. டூ டௌனில் உள்ளே வந்தார் மேக்ஸி. இரண்டு விக்கெட் போன நிலையில், முழுப் பொறுப்பும் கேப்டனின் பேட்டுக்கு வந்தது. அதற்கேற்ப ஆடி அசத்தினார் டு ப்ளெஸ்ஸி.

முதல் ஓவரில் இரண்டு விக்கெட் எடுத்த சமீராவின் ஓவரா என்பது போல, அந்தத் தடயத்தை மொத்தமாய் அழித்துவிட்டார் மேக்ஸி. எக்ஸ்ட்ரா கவரில் ஒரு பவுண்டரி, மிட் ஆனில் ஒரு பவுண்டரி என அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள். என்னடா இது சமீராவுக்கு வந்த சோதனை என இப்போது பாரடா என் ராஜதந்திரத்தை என்பதாக லெந்த்தை குறைத்து பந்தை வீசினார். 'இதுவும் எம்முடைய திருவிளையாடலே' என்பதாக நின்ற இடத்தில் இருந்தெ அதை ஸ்கொயர் லெக் பக்கம் சிக்ஸருக்கு விளாசினார். ஒரே ஓவரில் 19 ரன்கள். க்ருணால் வீசிய பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க முயன்றார் மேக்ஸி. ஆனால், அதை சரியாக மிடில் செய்யவில்லை. அதை அட்டகாசமாக கேட்ச் பிடித்தார் ஹோல்டர். பவர்பிளே முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 47 ரன்கள் எடுத்து தத்தளித்தது பெங்களூரு.

LSG vs RCB

பிஷ்னாய் பந்தில் ஒரு சிக்ஸ் அடித்த திருப்தியில், பிரபுதேசாயும் வந்த வேகத்தில் கிளம்பினார். டு ப்ளெஸ்ஸியும், சபாஷ் அஹமதும் ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்வதோடு நில்லாமல், அவ்வப்போது பவுண்டரி அடித்து ரன்ரேட் குறையாமல் பார்த்துக்கொண்டார்கள். ரவி புஷ்னாயின் பந்தில் லாங் ஆன் பக்கம் ஒரு சிக்ஸ் அடித்து நாற்பது பந்துகளில் அரைசதம் கடந்தார் டு ப்ளெஸ்ஸி.

ஹோல்டர் வீசிய பந்தை கவர்ஸில் நின்றுகொண்டிருந்த ராகுலிடம் அடித்தார். அவருக்கு சிங்கிள் ஓடவும் மனமில்லை. ஆனாலும் சபாஷ் ஓட ஆரம்பித்துவிட்டார். பிறகென்ன சபாஷ் ரன் அவுட். நன்றாகச் சென்றுகொண்டிருந்த போட்டியில், மீண்டும் விக்கெட் விழ ஆரம்பித்தது. டு ப்ளெஸ்ஸி பவுண்டரிகளில் டீல் செய்துகொண்டிருக்க, வந்த வேகத்தில் ஒரு சிக்ஸர் அடித்தார் தினேஷ் கார்த்திக்.

டு ப்ளெஸ்ஸி ஐபிஎல்லில் தன் அதிகபட்ச ஸ்கோரான 96ஐ மிஞ்சுவார் என நினைத்திருந்த சமயத்தில் அதே 96 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். 20 ஓவர் முடிவில் ஆறு விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது பெங்களூரு.

டி காக்கும், ராகுலும் ஓப்பனிங் இறங்க, சிராஜ் முதல் ஓவரை வீசினார். ராகுலின் இரண்டு பவுண்டரிகளுடன் முதல் ஓவரில் 9 ரன்கள். மேக்ஸ்வெல் ஓவரில் பெரிதாக ரன் எதுவுமில்லை. ஹேசல்வுட்டின் ஓவரில், டி காக் பந்தைத் தொட முயல அது அவுட்சைட் எட்ஜாகி மேக்ஸ்வெல்லிடம் கேட்ச் ஆனது. அதே பந்தைப் பிடிக்க தினேஷ் கார்த்திக்கும் தாவினார். ஆனால், கேட்ச் பிடித்ததும் 'சொன்னேன் பார்த்தியா' என்பது போல ஹேசல்வுட்டும், மேக்ஸியும் சமிக்ஞை செய்துகொண்டார்கள். அடுத்து வந்த மணிஷ் பாண்டே புல் ஷாட் அடிக்க முயல, அது பேட்டின் மிடிலில் ஹெவியாக அடி வாங்க ஸ்கொயர் லெக்கில் நின்றுகொண்டிருந்த ஹர்ஷல் படேல் சுலபமாக கேட்ச் பிடிக்கும் நிலைக்குச் சென்றது. சிராஜ் ஓவரில் க்ருணால் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் அடிக்க, பவர்பிளே இறுதியில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 44 ரன்கள் எடுத்திருந்தது லக்னோ.

LSG vs RCB | கோலி

ஹர்ஷல் படேல் ஸ்லோவாக லெக் சைடு செல்லும்படியாக பந்தை வீச, அதைத் தொட்டோமா இல்லையா என தெரியாத டோனில் அடித்தார் ராகுல். தினேஷ் கார்த்திக் கேட்ச் பிடித்தாலும், அம்பயர் கமுக்கமாக நிற்க, அப்பீல் செய்தது பெங்களூர். பந்து பேட்டைக் கடந்த போது அல்ட்ரா எட்ஜில் சில மாற்றங்கள் தெரிய ராகுல் அவுட் என அறிவிக்கப்பட்டார். பத்து ஒவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 83 ரன்கள். இன்னும் 60 பந்துகளில் 99 ரன்கள் தேவை. ஓவருக்கு சராசரியாக 10 ரன்கள்.

தேவைப்படும் ரன்ரேட் அதிகமென்பதால் க்ருணால் அதிரடியாக ஆடத் தொடங்கினார். 5 பவுண்டரி, 2 சிக்ஸர் என மிரட்டிக்கொண்டிருந்த க்ருணால், மேக்ஸி பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார். ஆயூஷ் படோனி அவுட்டானதும், க்ரீஸில் இருந்தது ஸ்டாய்னிஸும் ஹோல்டரும். திரைத் தீப்பிடிக்கும் மோடுக்குச் சென்றது லக்னோ படை. 12 பந்துகளில் 34 ரன்கள் எல்லாம் எளிதாக எட்டிவிடுவார்கள் என்றே பலரும் நினைத்திருந்தனர். ஆனால், எல்லாவற்றையும் மாற்றியது ஹேசல்வுட்டின் அந்த அட்டகாசமான ஓவர்.

ஸ்டாய்னிஸ் பந்து வருவதற்கு முன்பே இடதும் வலதுமாக நகர, ஹேசல்வுட் கிட்டத்தட்ட ஒய்டாக ஒரு பந்தை வீசினார். ஸ்டாய்னிஸ் உட்பட நம் எல்லோருக்குமே அது ஒய்டோ எனச் சந்தேகம் வந்தாலும், அம்பயரோ வாயிற்காவலன் போல அசையாமல் நின்றார். இதெப்படி ஒய்டு இல்லை என்கிற கடுப்பிலேயே அடுத்த பந்தை சந்தித்த ஸ்டாய்னிஸ் ஹேசல்வுட்டின் சாமர்த்தியமான பந்துவீச்சால் போல்டானார். திட்டிக்கொண்டே அங்கிருந்து நகர்ந்தார் ஸ்டாய்னிஸ்.

LSG vs RCB

ஆட்டத்தின் 19வது ஓவரில் வெறும் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து முக்கியமானதொரு விக்கெட்டை வீழ்த்துவதெல்லாம் வேற லெவல். கடைசி ஓவரில் 31 ரன்கள் தேவை. ஹர்ஷல் படேல் ஓவரில் இரண்டு சிக்ஸர் மட்டுமே ஹோல்டரால் அடிக்க முடிந்தது.

பெங்களூர் 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது.

பேட்டிங்கில் 96 ரன்கள் அடித்து மேன் ஆஃப் தி மேட்ச் வென்ற டு ப்ளெஸ்ஸி, பௌலிங்கில் 4 விக்கெட் வீழ்த்திய ஹேசல்வுட் இருவருமே சென்னை அணிக்கு ஆடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


source https://sports.vikatan.com/ipl/ipl-2022-rcb-reaches-the-2nd-place-on-the-table-after-beating-lsg

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக