Ad

ஞாயிறு, 24 ஏப்ரல், 2022

LSG v MI: `இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு!' மீண்டும் சொதப்பிய மும்பை; மீண்டும் சதமடித்த ராகுல்!

`தெய்வத்துக்கே மாறு வேஷமா... சாம்பியன்ஸ் இப்போ டேபிள் பாட்டமா!' என சோக இசையுடன்தான் இந்த சீசனைக் கடந்து கொண்டிருக்கிறது மும்பை இந்தியன்ஸ். முதல் 7 போட்டிகளையும் தோற்ற அணி என்ற மோசமான சாதனையுடன், `வித விதமாகத் தோற்பது எப்படி?' என ஆன்லைன் கிளாஸ் எடுக்க அனைத்து தகுதிகளுடனும் இன்று லக்னோவை சந்தித்தது மும்பை.

டாஸ் வென்று பௌலிங்கை தேர்வு செய்தது. கடந்த போட்டியில் தோற்றிருந்தாலும், மற்ற போட்டிகளை ஒப்பிடுகையில் சி.எஸ்.கேவுடனான தோல்வி கௌரவமான தோல்வி. அதனால், அதே XI உடன் களமிறங்கியது மும்பை. காயம் காரணமாக அவேஷ் கான் இல்லாமல் களமிறங்கியது லக்னோ.

LSG v MI

பாயின்ட்ஸ் டேபிளில் நான்காவது இடத்திலிருந்தாலும் வான்கடேவில் ஆடிய இரண்டு போட்டிகளையும் தோற்றிருந்தது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ். அந்த இரண்டு போட்டிகளிலும் முதல் பந்திலேயே நடையைக் கட்டியிருந்தார் ராகுல். வான்கடேவில் வழக்கம் போல் முதல் சில ஓவர்கள் பௌலர்களுக்கே சாதகமாக அமைந்தன. முன்னாள் மும்பை வீரரான குயின்டன் டி காக்கை இன்-ஸ்விங், அவுட்-ஸ்விங் என மாறி மாறித் திணறடித்தார் டேனியல் சாம்ஸ். முதல் ஓவரில் வெறும் 2 ரன்களையே விட்டுக்கொடுத்தார். அடுத்த ஓவரை கடந்த போட்டியில் அறிமுகமான ஹ்ரித்திக் ஷோக்கீனிடம் கொடுத்தார் ரோஹித். 'அனுபவமில்லாத ஸ்பின்னருக்கு பவர்பிளேவில் ஓவரா?' என்று சந்தேகம் நமக்கு எழ அனைத்தையும் தவிடு பொடியாக்கினார் ஷோக்கீன். ஆறு பந்துகளில் ஐந்து டாட் பால்கள்!

LSG v MI

மீண்டும் டேனியல் சாம்ஸ் வர, அடுத்த கியருக்கு மாறினார் ராகுல். ஒரு வழியாக ரன்கள் சேர ஆரம்பித்தன. எதிரணிகள் அஞ்சும் மும்பையின் ஒரே விக்கெட் டேக்கிங் பௌலரான பும்ராவை அழைத்துவந்தார் ரோஹித். அவர் எதிர்பார்த்தது போலவே டி காக் கேட்ச்சும் கொடுக்க, அதைக் கோட்டை விட்டார் திலக் வர்மா. அது சிக்ஸுக்கும் பறந்தது. மொத்த கேமராக்களும் திலக் வர்மாவை ஃபோகஸ் செய்யத் தயாராக இருந்தன. ஆனால், அடுத்த பந்தே ரோஹித்துக்கு கேட்ச் கொடுத்து அவுட்டானர் டி காக். அடுத்துக் களமிறங்கினார் மனிஷ் பாண்டே.

தோனி அதிரடியிலிருந்து மொத்தமாக மீண்டிருந்த உனத்கட் தனது முதல் ஓவரை மிகச்சிறப்பாக வீசினார். அப்படியே லக்னோ ரன்ரேட் சரியத்தொடங்கியது. மனிஷ் பாண்டே தனக்குத் தெரிந்த அனைத்து ஷாட்டையும் ஆடி பார்த்திருப்பார். ஆனால், எதுவுமே சரியாகப் பேட்டில் படவில்லை. ஒரு கட்டத்துக்கு மேல் அவுட்டாகவும் முடியாமல் ரன் அடிக்கவும் முடியாமல் மனிஷ் திணறுவதைத் தெளிவாகக் காண முடிந்தது. ரன்ரேட் ஆறுக்கும் கீழ் குறைந்தது. ஒன்பதாவது ஓவரின் இறுதி பந்தில் 'இது சரி வராது' என அடுத்த கியருக்கு மாறினார் ராகுல். மெரிடித், உனத்கட் ஓவர்களை பதம் பார்த்தது ராகுலின் பேட். சடசடவென ஸ்கோர் ஏறி 11 ஓவர் முடிவில் 82 ரன்கள் அடித்திருந்தது லக்னோ. அரைசதத்தைக் கடந்திருந்தார் ராகுல்

LSG v MI

அப்போது உள்ளே வந்தார் பொல்லார்ட். சற்றே மெதுவாக இருந்த பிட்ச் அவருக்குக் கைகொடுத்தது. அடித்து ஆட நினைத்த மனிஷ் பாண்டே 22(22) பெவிலியன் திரும்பினார். மீண்டும் சரியத் தொடங்கியது ரன்ரேட். தனிமனிதனாக ராகுல் போராட எதிர்ப்பக்கத்தில் இருந்த பேட்டர்கள் தடுமாறிக்கொண்டிருந்தனர். ஸ்டாய்னிஸ் ரன் எதுவும் எடுக்காமல் நடையைக் கட்டினார். குர்னால் பாண்டியா பொல்லார்டின் அடுத்த ஓவரில் வெளியேறினார். அடுத்த வந்த ஹூடாவும் வெகு நேரம் ராகுலுக்கு கம்பெனி கொடுக்கவில்லை. இப்படி மறுபுறம் விக்கெட் வீழ்ந்துகொண்டிருக்க அதிரடி ஆட்டத்தால் சதத்தை எட்டினார் ராகுல். இருந்தும் முதல் இன்னிங்ஸ் முடிவில் ராகுல் விரக்தியுடனே பெவிலியன் திரும்பினார். கடைசி மூன்று பந்துகளிலும் அவருக்கு ஸ்ட்ரைக் கிடைக்கவில்லை. இறுதியில் லக்னோ அடித்த 168-ல் 103 ரன்கள் அடித்தது ராகுல். பொறுப்பாகப் பேட் செய்தால் மும்பைக்கு இது எளிதான வெற்றி என்ற நிலையே இருந்தது.

இதே சீசனில் மீண்டும் மும்பையுடன் சதம் அடித்ததன் மூலம் பட்லர், கம்மின்ஸ் மற்றும் சிலர் அடங்கிய `மும்பைன்னா அடிப்போம்' குழுவில் முக்கியமானவராக உயர்ந்திருக்கிறார் ராகுல்!
கடந்த ஏழு போட்டிகளிலும் இஷனுக்கு முன்பே பெவிலியன் திரும்பிய ரோஹித் இன்று பெரிய இன்னிங்ஸ் ஆட வேண்டும் என்ற தீர்மானத்துடன் களமிறங்கியதை பார்க்க முடிந்தது. ஆனால், பவுண்டரிகளை ரோஹித் அடித்தாலும் அதை ஈடுகட்டும் வகையில் டாட் பால் வைத்தார் இஷன். இதனாலேயே பவர்பிளேவில் வெறும் 43 ரன்களையே அடித்தது மும்பை.
LSG v MI

எட்டாவது ஓவரை வீச வந்தார் லக்னோவின் முக்கிய ஸ்பின்னர் ரவி பிஷ்னாய். முதல் பந்தை வைடாக வீச அதையும் தேடிச் சென்று அடித்தார் இஷன் கிஷன். எட்ஜில் பட்ட அந்த பந்து கீப்பர் ஷூவில் பட்டு ஸ்லிப்பில் நின்ற ஹோல்டர் கைகளுக்குச் சென்றது. துரதிர்ஷ்டவசமான விக்கெட். ஏற்கெனவே அவுட் ஆஃப் பார்மில் இருக்கும் மனுஷனின் வாழ்க்கையில் இப்படியா விதி விளையாட வேண்டும். கடந்த போட்டிகளில் அவ்வப்போது ஸ்பார்க் தட்டிய டிவால்ட் ப்ரேவிஸ் அடுத்துக் களமிறங்கினார். ஏற்கெனவே நன்றாக ஆடிக்கொண்டிருந்த ரோஹித்துக்கு துணை நின்றாலே போதும் என்ற சூழல்தான். ஆனால் அடித்து அவுட்டானர். இன்னும் பொறுமை வேண்டும் பேபி ஏபிடி!

அடுத்து மும்பையின் நம்பிக்கை நாயகன் SKY என்ட்ரி. ரோஹித் - சூர்யகுமார் பார்ட்னர்ஷிப் அணியைக் கரையேற்றிவிடும் என நாம் நம்பிக்கைகொள்ள குர்ணால் பந்துவீச்சில் அவுட்டானர் ரோஹித். ரொம்ப நாள்களாக எதிர்பார்த்து வரும் அந்தப் பெரிய இன்னிங்ஸ் இன்றும் இல்லை. ஒரே ஆறுதல் இஷனுக்கு பின்பு அவுட்டானதுதான். 10 ஓவர் முடிவில் 59-3 எனத் தடுமாறிக்கொண்டிருந்தது. இந்த 60 பந்துகளில் 20 பந்துகளைப் பிடித்திருந்தது இஷன் கிஷன். அடித்தது வெறும் 8 ரன்கள். அவர் ஃபார்முக்கு வந்தால் மட்டுமே மும்பை பேட்டிங் டேக்-ஆஃப் ஆக வாய்ப்புகள் இருக்கின்றன.

LSG v MI

எப்படி ராகுலைத் தவிர்த்து மற்ற லக்னோ பேட்டர்கள் அனைவரும் தடுமாறினார்களோ அப்படியே மும்பை பேட்டர்களும் தடுமாறினர். சூர்யகுமார் யாதவ்வும் ஆயுஷ் பதோனியின் பந்துவீச்சில் அவுட்டாக மும்பை ரசிகர்களால் நிறைந்த வான்கடே, மயானம் போல அமைதியானது. சிலர் வீட்டுக்குக் கிளம்பவே தொடங்கிவிட்டனர். அப்படியிருந்த மைதானம் சில நிமிடங்களில் 'திலக்... திலக்' எனக் கோஷமிட்டுக் கொண்டிருந்தது. காரணம், ரவி பிஷ்னாய் வீசிய 14-வது ஓவரில் அவர் பறக்கவிட்ட சிக்ஸர்கள். மறுபுறம் பொல்லார்டும் இருக்க நம்பிக்கைத் துளிர்விட்டது ரசிகர்களுக்கு!

ஆனால், ஜெயிக்க ஒரு பெரிய ஓவர் மும்பைக்குத் தேவை. குறைந்தது 20 ரன்களாவது அந்த ஓவரில் அடிக்கப்பட வேண்டும். அடுத்த ஓவரை வீச வந்ததோ புதுமுக வீரர் மோஹ்சீன் கான். ஆனால், மும்பை எதிர்பார்த்த அந்த ஓவராக அது அமையவில்லை. சிறப்பாகப் பந்துவீசிய அவர் வெறும் ஐந்து ரன்களே விட்டுத்தந்தார். அடுத்து ஹோல்டர், 12 ரன்கள் அடிக்கப்பட்டாலும் மும்பை நினைத்த அந்த பெரிய ஓவராக அது அமையவில்லை. மீண்டும் மோஹ்சீன், அவரது கடைசி ஓவர் இது. இரண்டாவது பந்திலேயே பொல்லார்ட் சிக்ஸர் அடித்தார். இருப்பினும் அந்த பிரஷரில் வகுத்து வைத்திருந்த திட்டத்தின் படி சிறப்பாகப் பந்துவீசி அடுத்த நான்கு பந்துகளில் வெறும் 2 ரன்களை மட்டுமே விட்டுத்தந்தார். இப்படியே கடைசி வரை அந்த ஓவர் மும்பைக்குக் கிடைக்கவில்லை. வெறும் வைடு யார்க்கர்களிலேயே சமீராவும், ஹோல்டரும் மும்பையைக் கட்டுப்படுத்திவிட்டனர். கடைசி ஓவருக்கு முன்பே மும்பையின் கையிலிருந்து மேட்ச் தவறிவிட்டது. 36 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது லக்னோ.

LSG v MI
ஆவேஷ் கான் இல்லாமல் வென்றது ராகுலுக்கு இன்னும் நம்பிக்கைக் கொடுத்திருக்கும். இப்போது லக்னோ கவனம் செலுத்த வேண்டியது அதன் மிடில் ஆர்டரில்தான். ராகுலுக்கு துணை நிற்க இன்னொரு வீரர் நிச்சயம் அவர்களுக்கு தேவை!

மும்பையைப் பொறுத்தவரையில் இந்த சீசனில் ஒரு முழு அணியைக் களத்தில் இறக்குவதே ரோஹித்துக்குப் பெரும் பாடாக இருக்கிறது. பேட்டர்களின் மோசமான ஃபார்ம், தனது சொந்த ஃபார்ம், பும்ராவை தவிர ஸ்ட்ரைக் பௌலர்கள் இல்லாதது என ஏகப்பட்ட பிரச்னைகள். இதைத் தீர்ப்பதற்கு பெஞ்சிலும் மும்பைக்கு ஆள் இல்லை என்பது கவலையளிக்கும் விஷயம்.

அதற்காக அடுத்த ஏலம் வரை காத்திருக்கவா முடியும்?! ஒற்றை வீரரின் அற்புத ஆட்டம் கூட போட்டியை சில நேரங்களில் வென்று கொடுக்கும். அந்த வீரராக இருப்பீர்களா ரோஹித்?!


source https://sports.vikatan.com/ipl/lsg-v-mi-mumbai-continues-their-losing-streak-rahuls-century-sees-lucknow-home

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக