Ad

ஞாயிறு, 24 ஏப்ரல், 2022

புதுச்சேரி: ``காங்கிரஸ் ஆட்சியில் ஊழல்தான் நடைப்பெற்றது!” – அமித் ஷா குற்றச்சாட்டு

புதுச்சேரிக்கு வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கம்பன் கலையரங்கத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டார். அப்போது ரூ.362.91 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்து பேசிய அவர், “புதுச்சேரி மாநிலம் பல ஆன்மிகப் பெரியோர்கள், தியாகிகள் மற்றும் சுதந்திரப்போராட்ட வீரர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி.. குறிப்பாக தமிழ்க்கவிஞரான தேசியக்கவி பாரதியார், மகான் அரவிந்தர் வாழ்ந்த கர்ம பூமி. தேசப்பணியாற்றிய வி.வி.எஸ் அய்யர், ராமசாமி, பாரதிதாசன் ஆகிய சுதந்திரப் போராட்டத் தியாகிகளை இந்த பூமி வழங்கியிருக்கிறது.

உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி மக்களின் தீர்ப்பின் மூலம் முதல்வர் ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு சிறப்பாக நடைபெறுகிறது. புதுச்சேரி மாநிலம் சிறந்த மாநிலமாக வளர்ச்சி பெற அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படும். பிரதமர் மோடி வாக்குறுதியளித்ததைப் போல, பெஸ்ட் புதுச்சேரியை உருவாக்கிய பிறகே அடுத்த முறை மக்களை சந்திப்போம். இன்றைய விழாவில் பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தை புதுமை மற்றும் புதிய மாடலான வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு பல திட்டங்களை, தேசிய ஜனதா கூட்டணி அரசு தொடங்கியதிலிருந்தே செயல்படுத்தி வருகிறது.

புதுச்சேரியில் ஒருமுறை பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் மூலம் புதுச்சேரியில் 90-க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கான தொகை, 6 லட்சம் பயனாளிகளுக்கு நேரடியாக வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது. திறந்தவெளி கழிப்பிடமில்லாத பகுதியாக புதுச்சேரி உள்ளது. அனைவருக்கும் கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு, குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அனைவருக்கும் மருத்துவ காப்பீடு அட்டை வழங்கப்பட்டிருக்கிறது. மருத்துவமனைகளில் 99% பிரசவங்கள் நடக்கிறது. புதுச்சேரியில் 26 மெகா வாட் திறனில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்த உள்ளது. புதுச்சேரியில் கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஊழல் தான் நடைபெற்றது. தற்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சியின்போது, புதுச்சேரியில் ஏழைகளே இல்லை என்று பொய்ப்பிரசாரம் செய்தனர். பிரதமர் மோடி வாக்குறுதியளித்தபடி, பெஸ்ட் புதுச்சேரியை முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் தலைமையில் நிறைவேற்றுவோம் என்று மீண்டும் உறுதியளிக்கிறேன்” என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/in-puducherry-amith-shah-criticized-as-the-corruption-only-took-place-in-congress-regime

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக