Ad

வெள்ளி, 15 ஏப்ரல், 2022

கழுத்துப் பகுதியின் கருமை ; டயாபட்டீஸ் வரப்போவதன் அறிகுறியா?

எனக்கு கடந்த சில மாதங்களாக கழுத்துப் பகுதியில் அடர்ந்த கருமைப் படலம் தென்படுகிறது. அதை கவனித்த ஒரு நண்பர் அது டயாபட்டீஸ் வருவதற்கான அறிகுறி என்கிறார். ப்ரீ டயாபட்டீஸ் நிலையாக இருக்கும், இப்போதே விழித்துக்கொண்டால் அது டயாபட்டீஸாக மாறாமலிருக்கும் என்கிறார். சருமத்தின் கருமைக்கும் சர்க்கரைநோய்க்கும் என்ன தொடர்பு?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்

நீங்கள் குறிப்பிட்டிருப்பதையும் உங்கள் நண்பரின் கணிப்பையும் வைத்துப் பார்க்கும்போது இது Acanthosis nigricans என்ற பிரச்னையாக இருக்கலாம் என்று தெரிகிறது. ரத்தத்தில் இன்சுலின் அளவு அதிகரிப்பதால் ஏற்படுவது இது. குடும்ப பின்னணியில் யாருக்காவது சர்க்கரைநோய் இருந்தாலோ, நீங்கள் உடல் பருமனுடன் இருந்தாலோ, உங்களுக்கு பிசிஓடி எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பாதிப்பு இருந்தாலோ, இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் இருந்தாலோ இப்படி ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

உடலியக்கமே இல்லாதவர்களுக்கும், அதிக அளவு கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை உண்பவர்களுக்கும்கூட இந்தப் பிரச்னை வரலாம். ஹார்மோன் சமநிலையின்மை, ஹைப்போதைராய்டு பாதிப்பு, அட்ரீனல் சுரப்பியில் ஏதேனும் பாதிப்பு, வேறு பிரச்னைகளுக்காக ஸ்டீராய்டு மருந்துகள் எடுத்துக்கொள்வதன் விளைவு என இந்தப் பிரச்னைக்கு வேறு சில காரணங்களும் இருக்கக்கூடும்.

சர்க்கரை நோய்

கழுத்தைச் சுற்றி, தொடைப் பகுதிகள் அக்குள், நெற்றியின் பக்கவாட்டுப் பகுதிகள், முழங்கைகள், முழங்கால்கள் போன்ற பகுதிகளில் அடர்நிறத்தில் வெல்வெட் போன்ற கரும்படலமாக சருமம் மாறுவது இதன் அறிகுறி. அரிதாக சிலருக்கு சிலவகை புற்றுநோய்களின் அறிகுறியாகவும் இப்படி சருமம் தடித்து கருத்துப்போகலாம்.

உங்களுடைய பிரச்னை என்ன என்பதை மருத்துவரால் நேரில் பார்த்துதான் உறுதிசெய்ய முடியும். சரும மருத்துவரையோ, ஹார்மோன் மருத்துவரையோ நேரில் சந்தித்து ஆலோசனை பெறுங்கள்.

செல்வி ராஜேந்திரன்

மருத்துவர் உங்களைப் பரிசோதித்துவிட்டு, நீரிழிவுக்கான HbA1c பரிசோதனை, சாப்பாட்டுக்கு முன், சாப்பாட்டுக்குப் பின் சீரம் இன்சுலின் அளவுகள், கொலஸ்ட்ரால் அளவுகள், ரத்த அழுத்தம் போன்றவற்றுக்கான பரிசோதனைகளைச் செய்யச் சொல்வார். தைராய்டை உறுதிசெய்யும் 'தைராய்டு ஃபங்ஷன் டெஸ்ட்'டும, ஹார்மோன் பரிசோதனைகளும்கூட பரிந்துரைக்கப்படலாம்.

கருமையாக மாறிய சருமப் பகுதியைத் தேய்க்காதீர்கள். அது அந்த இடத்தை மேலும் கருமையாக்கும். சரும மருத்துவரின் பரிந்துரையில் க்ரீம், லோஷன், சன்ஸ்கிரீன் உபயோகிக்கலாம். லேசர் மற்றும் பீல் சிகிச்சை போன்றவற்றில் தேவையானதைத் தெரிந்துகொண்டு சிகிச்சை எடுக்கலாம்.



source https://www.vikatan.com/health/healthy/is-dark-patch-in-neck-sign-of-diabetes

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக