Ad

செவ்வாய், 26 ஏப்ரல், 2022

செல்லூர் ராஜூ-க்கு வந்த சோதனை... மாநகர செயலாளர் பதவிக்கு 4 பேர் போட்டி - இது மதுரை அதிமுக பாலிடிக்ஸ்

அ.தி.மு.க உட்கட்சித் தேர்தல் தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. கிளைக்கழக, ஒன்றியக்கழக நிர்வாகிகளுக்கான தேர்தல் நடந்து முடிந்த நிலையில் மாவட்ட செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனுகளை பெற்று வருகிறார்கள்.

செல்லூர் ராஜூ

உட்கட்சித் தேர்தல் என்பது நடந்தாலும் தலைமை விரும்புகின்ற நபர்களே மாவட்ட செயலாளர்களாக அறிவிக்கப்பட்டு வந்தனர். இதனால் பெரும்பாலான மாவட்ட செயலாளர்களுக்கு எதிராக யாரும் போட்டியிடுவதில்லை. தங்களுக்கு எதிராக யாரும் போட்டியிடாத நிலையையே பல மாவட்ட செயலாளர்கள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில்தான் மதுரை மாநகர செயலாளர் பதவியில் 10 வருடங்களுக்கும் மேலாக இருந்து வரும் செல்லூர் ராஜூவை எதிர்த்து முன்னாள் எம்.எல்.ஏக்கள் எஸ்.எஸ்.சரவணன், ராஜாங்கம், முன்னாள் மண்டலத் தலைவர் சாலைமுத்து, ஜெ. பேரவை நிர்வாகி மாரிச்சாமி ஆகியோர் போட்டியிட மனு செய்தனர்.

எஸ்.எஸ்.சரவணன்

முன்னாள் அமைச்சர் வளர்மதி, சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் கந்தன், பெரும்பாக்கம் ராஜசேகரன் ஆகியோர் மதுரை மாநகர தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் தனக்கு எதிராக யாரும் மனு அளிக்க மாட்டார்கள் நம்பிக்கையில், நேற்று சட்டமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ள சென்னை சென்ற செல்லூர் ராஜூ, தனது மருமகன் மூலம் வேட்பு மனுவை அளித்தார். அதன் பின் தனக்கு போட்டியாக 4 பேர் விண்ணப்பித்துள்ள தகவல் கேட்டு அதிர்ச்சியாகிவிட்டாராம்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் செல்லூர் ராஜூ கட்டுப்பாட்டிலுள்ள 4 தொகுதிகளில் அவர் மட்டும் வெற்றி பெற்றார். மற்ற 3 தொகுதிகளில் அவர் கவனம் செலுத்தவில்லை என்ற புகார் கட்சியினரால் எழுப்பப்பட்டு வரும் நிலையில் அவருக்கு எதிராக முக்கிய நிர்வாகிகள் களம் இறங்கியுள்ளனர்.

இது குறித்து நம்மிடம் பேசிய செல்லூர் ராஜூவின் எதிர் கோஷ்டியினர், "அவரையும் அவருக்கென்று ஒரு ஆதரவாளர் கூட்டத்தை மட்டும் வளர்த்து கட்சியை அழித்து விட்டார். கட்சியில் காலம் காலமாக உழைத்தவர்களையும், மூத்தவர்களையும் புறக்கணித்து வந்தவர், கடந்த சட்டமன்றத் தேர்தலின்போதும், மாநகராட்சித் தேர்தலின்போதும் பல சீனியர்களை புறக்கணித்தார். அதனால்தான் அவரை மாற்ற வேண்டுமென்று முடிவெடுத்துவிட்டோம்.

செல்லூர் ராஜூ

அதுமட்டுமில்லாமல் கட்சித் தேர்தலுக்கான விண்ணப்பங்களை கட்சி அலுவலகத்தில் வாங்க வேண்டும், அல்லது வேறு மண்டபத்தில் வைத்து வாங்க வேண்டும். ஆனால், செல்லூர் ராஜூவின் தனிப்பட்ட அலுவலகத்தில் விண்ணப்பம் வாங்குகிறார்கள். தேர்தல் பொறுப்பாளர்களுடன் செல்லூர் ராஜூவின் மருமகனும் மனுக்களை வாங்குகிறார்கள். இது குறித்து தலைமைக்கு புகார் செய்ய உள்ளோம்" என்று கொந்தளிக்கிறார்கள்.

செல்லூர் ராஜூ தரப்போ, ``உட்கட்சித் தேர்தல் தலைமைக்கழக பொறுப்பாளர்கள் முன்னிலையில் நேர்மையாக நடைபெற்று வருகிறது. கட்சி உறுப்பினர் யார் வேண்டுமானாலும் எந்த பதவிக்கும் போட்டியிடலாம். இதுதான் ஜனநாயகம் " என்கின்றனர்.

மதுரை மாநகர அதிமுக

அதிமுகவை பொறுத்தவரை மாவட்ட செயலாளர் எனும் கட்சி பதவி என்பது அதிகாரமிக்கது. அதனால்தான் இணை ஒருங்கிணைப்பாளராக இருக்கும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பதவிக்கு மனுதாக்கல் செய்து கைபற்றி இருக்கிறார்.

இந்த நிலையில் செல்லூர் ராஜூக்கு எதிராக மாநகர செயலாளர் தேர்தலில் 4 பேர் மனுதாக்கல் செய்திருப்பதால், முடிவு என்ன என்பதை அறிய அனைத்து தரப்பினரும் ஆர்வமாக இருக்கிறார்கள்.



source https://www.vikatan.com/news/politics/admk-inter-party-election-four-cadres-nomination-against-sellur-raju

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக