Ad

ஞாயிறு, 24 ஏப்ரல், 2022

புதுச்சேரி: அமித் ஷாவுக்கு கறுப்பு கொடி காட்டிய காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள்; புறக்கணித்த திமுக

அரவிந்தரின் 150-வது பிறந்தநாள் விழா மற்றும் புதிய கட்டடங்களுக்கான அடிக்கல் நாட்டுவிழாவுக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று ஒருநாள் பயணமாக புதுச்சேரிக்கு வந்திருந்தார். அதையொட்டி கட்டாய இந்தித் திணிப்பு முயற்சி, புதுச்சேரி நிதி நிலையை சரி செய்யாதது, கல்லூரிகளில் சேர்வதற்கான கியூட் நுழைவுத் தேர்வு போன்ற மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் தினத்தன்று ஒருநாள் கறுப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தன கம்யூனிஸ்ட் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள். அதன்படி அமித் ஷா நேற்று புதுச்சேரிக்கு வந்திருந்த நிலையில், சாரம் அவ்வை திடலில் மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகள் சார்பில் கறுப்புக்கொடி காட்டும் போராட்டம் நடைப்பெற்றது.

மத சார்பற்ற கூட்டணி கட்சிகளின் ஆர்ப்பாட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் சலீம் தலைமையேற்று நடத்திய அந்த போராட்டத்தில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ராஜாங்கம், பிரதேச செயலாளர் பெருமாள் மற்றும் வி.சிக., ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அப்போது கறுப்புக் கொடிகளை ஏந்திப் பிடித்து போரட்டத்திற்கு வந்திருந்த அவர்கள் “திரும்பிப் போ திரும்பிப் போ… அமித் ஷாவே திரும்பிப் போ..” என்றும் “திணிக்காதே திணிக்காதே இந்தியை திணிக்காதே” என்று கோஷம் எழுப்பினர். போலீஸார் அவர்கள் வைத்திருந்த கறுப்புக் கொடிகளை பறித்ததைத் தொடர்ந்து இருதரப்பினருக்கும் வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.

அதேபோல கறுப்பு சட்டை அணிந்து வந்தவர்களையும் தடுத்து நிறுத்திய போலீஸார், கறுப்பு கொடிகளுக்கும், கறுப்பு சட்டைகளுக்கும் அனுமதியில்லை என்று கூறியதால் கைகலப்பு ஏற்படும் சூழல் உருவானது. அதையடுத்து கறுப்புக் கொடிகளை அவர்களிடம் இருந்து பறித்துக் கொண்ட போலீஸார், அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் நாராயணசாமி, “மாநில அரசின் வளர்ச்சிக்கு குந்தகம் விளைவித்து வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. புதுச்சேரியில் அவர் புதிதாக எந்த திட்டத்தையும் தொடங்கி வைக்கவில்லை. தற்போது அவர் அடிக்கல் நாட்டியிருக்கும் புதிய பேருந்து நிலையம் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு போன்றவை காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள்.

அவற்றிற்கு அடிக்கல் நாட்டுவதற்கு மட்டுமே அவர் புதுச்சேரிக்கு வந்திருக்கிறார். அமித் ஷாவின் வருகையால் புதுச்சேரிக்கு எந்தவித பயனும் இல்லை. அதனால்தான் அவரை திரும்பிப் போ என்று கோஷம் எழுப்பி போராட்டத்தில் இறங்கினோம்” என்றார். ”போராட்டத்திற்கு திமுகவுக்கு அழைப்பு விடுத்திருக்கிறோம். அவர்கள் கட்சித் தலைமையிடம் கேட்டு சொல்வதாக கூறியிருக்கிறார்கள்” என்று கூறியிருந்தது கம்யூனிஸ்ட் கட்சி. ஆனால் பிரதான எதிர்க்கட்சியான திமுக இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளாமல் கழன்று கொண்டிருப்பது பல்வேறு விமர்சனங்களையும், அந்த கட்சிக்குள்ளேயே சலசப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/opposition-parties-except-dmk-condemned-union-minister-amit-shahs-puducherry-visit

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக