தூத்துக்குடி, சாந்திநகரைச் சேர்ந்தவர் முருகன். இவர், சிதம்பரநகரில் தங்க நகைப்பட்டறையுடன் இணைந்த நகைக்கடையை நடத்திவருகிறார். கடந்த 19-ம் தேதி இரவில் இவரது கடையின் பக்கவாட்டுச் சுவர் உடைக்கப்பட்டு, 5 கிலோ வெள்ளிப்பொருள்கள், இரண்டரை சவரன் தங்கநகைகள் திருடப்பட்டிருந்தன. திருடப்பட்ட நகை மற்றும் வெள்ளிப்பொருள்களின் மதிப்பு ரூ.5 லட்சம். இதையடுத்து முருகன், இது குறித்து தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீஸார் அந்தப் பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்தனர்.
அதில், நான்கு பேர்கொண்ட கும்பல் ஒன்று பைக்கில் வந்து சுவரை உடைத்து துணிப்பை ஒன்றில் கொள்ளையடித்தவற்றை தூக்கிச் சென்றது தெரியவந்தது. தொடர் விசாரணையில், தூத்துக்குடியைச் சேர்ந்த முனியசாமி என்ற குட்டி, சதீஷ் என்ற மோசஸ், சுடலையாண்டி, 17 வயது சிறுவன் ஆகிய நான்கு பேரைக் கைதுசெய்து அவர்களிடமிருந்து குப்பைமேடு பகுதியில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த கொள்ளையடிக்கப்பட்ட வெள்ளிப்பொருள்கள், தங்கநகையை மீட்டனர். விசாரணையில் அவர்கள் அளித்த வாக்குமூலம் போலீஸாரையே அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
``தூத்துக்குடியில நிறைய கோயில்கள்ல திருவிழா நடந்துட்டு வருது. இந்த திருவிழாக்கள்ல எங்க ஃபிரெண்ட்ஸ் சரக்கு அடிச்சுட்டு என்ஜாய் பண்ணிட்டு வர்றாங்க. ஆனா, எங்ககிட்ட சரக்கு அடிக்கக் கையில பணம் இல்லை. வீட்ல பணம் கேட்டா எதுக்குன்னு கேள்வி கேட்குறாங்க. என்ன செய்யலாம்னு யோசிச்சோம். இதனால ஒதுக்குப்புறமா இருந்த இந்த நகைக்கடையில கொள்ளையடிக்கலாம்னு திட்டம் போட்டோம். கடையோட பக்கவாட்டுச் சுவர், ஒரு சந்துப் பகுதியில இருந்ததை நோட்டமிட்டோம்.
அந்தச் சுவரும் அரிச்சு இடிஞ்சு விழுற மாதிரித்தான் இருந்துச்சு. கடையோட முன்பக்கக் கதவை உடைக்கிறதுக்கு பதிலா, அந்தப் பக்கவாட்டுச் சுவரை உடைச்சு கடைக்குள்ள நுழைஞ்சோம். சிசிடிவி கேமராவுல எங்க முகம் பதிவாகிடக் கூடாதுன்னு கேமராவைத் துணியால மூடினோம். ஆனா, பதற்றத்தில் கேமராவுல இருந்து துணி நழுவி கீழே விழுந்ததை நாங்க யாரும் கவனிக்கலை. ஆனா, அதே சிசிடிவி கேமராப் பதிவுகளைவெச்சே போலீஸ் எங்களைக் கண்டுபிடிச்சுட்டாங்க” என்றனர் அப்பாவியாக.
source https://www.vikatan.com/news/crime/shocking-confession-of-4-who-stole-5-kg-of-silver-in-thoothukudi
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக