Ad

திங்கள், 18 ஏப்ரல், 2022

இதுதாங்க டைரக்டர் டச்!

பொதுவாக திரைப்படங்களில் அந்தத் திரைப்பட நாயகன், நாயகி, இயக்குனர் ஆகியோரின் ரசிகர்களைக் கடந்து, காண்போர் அனைவருடைய மனத்தையும் தொடும் வகையில் காட்சியமைப்புகளைப் படைத்திடும் இயக்குனர்களின் சிந்தனையையே ’டைரக்டர் டச்’ என்பார்கள். அப்படியொரு டைரக்டர் டச் காட்சி இது.

ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் கே.வி.மகாதேவன் இசையில் சிவாஜி கணேசன், சாவித்திரி நடிக்க உருவான திரைப்படம் ‘திருவிளையாடல்’. திரைப்படத்தின் கதைப்படி நாரதர் வேடமிட்டவர் ‘ஞானப்பழம்’ என்ற பழத்தைக் கொண்டுவந்து தருவார். அந்தப் பழம் முருகன் வேடமிட்டவருக்கா, விநாயகர் வேடமிட்டவருக்கா என்ற கேள்வியெழும். உலகை முதலில் சுற்றி வருபவருக்கே ஞானப்பழம் என்று கூறிவிட, முருகன் வேடமிட்டவர் மயில் மீதேறி உலகைச் சுற்றி வரச் சென்றுவிடுவார். விநாயக வேடமிட்டவரோ சிவன்-பார்வதி வேடமிட்ட சிவாஜி-சாவித்திரியை சுற்றி வந்து ஞானப்பழம் பெற்றுக் கொள்வார். பழம் கிடைக்காத கோபத்தில் முருகன் அனைவரையும் விட்டு விலகிச் செல்வார். அன்னை-தந்தையும், இதர கடவுள்களும், விநாயக வேடமிட்டவரும் சமாதானப்படுத்த முயலும் நிலையில் யாரிடமும் எதற்காகவும் சமாதானம் ஆகாத நிலையில் கோபம் கொண்டு செல்வார் முருகன். அப்போது ஔவையாக வரும் கே.பி.சுந்தராம்பாள் முருகனை சமாதானப்படுத்த முயன்று தோற்ற நிலையில், தன்னுடைய கணீரென்ற குரலில் பாடுவார். அப்படி அவர் பாடி சமாதானப்படுத்த முயலும் பாடலைக் கேட்டும் சமாதானம் ஆகாமல் செல்வார் பாலகன் முருகன்.

கேபி.சுந்தராம்பாள்

‘ஆறுவது சினம் கூறுவது தமிழ் அறியாத சிறுவனா நீ?

ஆறுவது சினம் கூறுவது தமிழ் அறியாத சிறுவனா நீ?

மாறுவது மனம் சேருவது இனம் தெரியாத முருகனா நீ?

மாறுவது மனம் சேருவது இனம் தெரியாத முருகனா நீ?

ஏறு மயிலேறு ஈசனிடம் நாடு இன்முகம் காட்டவா நீ

ஏற்றுக்கொள்வான் கூட்டிச் செல்வேன்

என்னுடன் ஓடிவா நீ என்னுடன் ஓடிவா நீ...’

இந்தப் பாடல் வரிகளில் ‘ஆறுவது சினம் கூறுவது தமிழ்’ என்று பாடியவுடன் சட்டென நின்று பட்டெனத் திரும்பி பார்ப்பார் முருகன். கவியரசர் கண்ணதாசனுடைய மீதி வரிகளைத் தன்னுடைய குரலில் பாடி ஹம்மிங் செய்ய, கேவி.மகாதேவன் இசை முழங்க நின்று விடுவார்.

அத்தனை கடவுள்கள் கூறிய போதும் நிற்க மறுத்தவர் "கூறுவது தமிழ்" என்ற வார்த்தைகளைக் கேட்டவுடனே நகராமல் நின்று, ஔவையென வரும் கேபி.சுந்தராம்பாள் அவர்களிடம் ‘உமது தமிழுக்காகவே நின்றேன்’ எனப் பதில் கூறுவதுமாக காட்சிப்படுத்தி இருப்பார் இயக்குனரான ஏ.பி.நாகராஜன்.

கடவுள் மறுப்புக் கொள்கை தீவிரமாக முன்னெடுக்கப்பட்ட சூழலில் ‘கடவுளே தமிழ்’ என்ற மொழிக்காக நின்று விடுவதாக காட்சியை அமைத்து, கண்ணதாசனுடைய வரிகளுக்கு கேவி.மகாதேவன் இசையமைக்க, திரையில் ஔவையென வாழ்ந்த கேபி.சுந்தராம்பாள் அவர்களுடைய கணீர் குரலும், அந்தக் குரல் கேட்டு முருகன் வேடமிட்டவர் அப்படியே நின்றுவிட, முருகனை சமாதானப்படுத்த முயன்று தோல்வியடைந்த அத்தனை கடவுள் வேடமிட்டவர்களும் ஆச்சர்யமாக திரும்பிப் பார்க்கும்படியாகக் காட்சியமைத்திருந்தார் இயக்குனர்.

ஏ.பி.நாகராஜன்

இந்த நொடியில் அந்தக் காட்சியைக் கண்டாலும் நமது மெய் சிலிர்க்க வைத்த இயக்குனர் ஏபி.நாகராஜன் அவர்களுடைய இதயம் தொடும் இந்தக் காட்சி உண்மையான உன்னதமான உணர்வுபூர்வமான டைரக்டர் டச். வேண்டுமானால் நீங்களும் ஒருமுறை அந்த காட்சியினை கண்டு டைரக்டர் டச் என்பதை உணருங்கள் தோழர்களே!

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.



source https://cinema.vikatan.com/tamil-cinema/director-touch

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக