கடந்த அக்டோபர் 3-ம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம், லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் நடந்த விவசாயிகள் பேரணியின்போது, ஐந்து பேர் கார் ஏற்றிக் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களில், நான்கு விவசாயிகளும், ஒரு பத்திரிகையாளரும் அடக்கம். இதைத் தொடர்ந்து நடந்த கலவரத்தில், மேலும் நான்கு பேர் உயிரிழந்தனர்.
லக்கிம்பூர் கேரியில் நடந்த இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தில், விவசாயிகள்மீது மோதிய மூன்று கார்களும் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன், ஆஷிஷ் மிஸ்ராவுக்குச் சொந்தமானவை.
எனவே, இது தொடர்பான வழக்கில் ஆஷிஷ் மிஸ்ரா உட்பட 13 பேர் கைதுசெய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, ஆஷிஷ் மிஸ்ரா ஜாமீன் வழங்கக் கோரி மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் ஜனவரி 10-ம் தேதியன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 21-ம் தேதி பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆஜராகி, நேற்று இரவு லக்கிம்பூர் கேரி வழக்கின் சாட்சிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அதனால் இவ்வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரணை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கையை முன்வைத்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி, வழக்கு வரும் செவ்வாய்க்கிழமை விசாரணைக்குப் பட்டியலிடப்படும் எனத் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, விவசாயிகளின் குடும்ப உறுப்பினர்கள் தாக்கல் செய்த மனுவை மார்ச் 15 ஆம் தேதி விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டது.
இந்த சம்பவம் பாஜக -வுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது நடந்த சட்டமன்ற தேர்தலில் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் பாஜக பெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
source https://www.vikatan.com/government-and-politics/politics/supreme-court-to-hear-plea-challenging-bail-to-ashish-mishra-on-march-15
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக