Ad

சனி, 12 மார்ச், 2022

யூரோ டூர் 29: உலகையே மாற்றியமைத்த ஐரோப்பியத் தொழில்நுட்பங்கள், கண்டுபிடிப்புகள் மற்றும் நிறுவனங்கள்!

கடந்த 100 ஆண்டுகளில், தொழில்நுட்பம் நம் வாழ்க்கையை நிறைத்துவிட்டது. 21ம் நூற்றாண்டில் ஒரு வீட்டில் உள்ள மனிதர்களின் எண்ணிக்கையை விட அவ்வீட்டில் இருக்கும் தொலைப்பேசிகளின் எண்ணிக்கை கூடுதலாக இருக்கும் என்று எழுத்தாளர் சுஜாதா ஒரு தடவை கூறினார். இந்த 100 வருடங்களில் உலகைச் சுருட்டி சுருக்குப் பைக்குள் போட்டுவிட்ட பல அசத்தலான டெக்னாலஜிகளின் பிறப்பிடம் ஐரோப்பா. பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே பித்தாகரஸ், அரிஸ்டாட்டில், ஆர்க்கிமிடிஸ், நிக்கோலஸ் கோப்பர்னிக்கஸ், கலீலியோ கலிலி, சார்லஸ் டார்வின் போன்ற ஐரோப்பிய மேதைகள் இப்போதைய விஞ்ஞானிகளை எல்லாம் தூக்கிச் சாப்பிடும் அளவு பல அரிய கண்டுபிடிப்புகளை மேற்கொண்டனர். கார், ரேடியோ, அதிவேக ரயில்கள், மைக்ரோஸ்கோப், டெலஸ்கோப், ஆடியோ டேப், வீடியோ டேப், பிரஷர் குக்கர், டிவி, மோட்டார் சைக்கிள், ஆம்புலன்ஸ் சேவை என அறிவியலின் தாயகமான ஐரோப்பா உலகிற்கு அளித்துள்ள தொழில்நுட்பங்கள் அளவில்லாதவை.

ஐரோப்பா

கிட்டத்தட்ட 1500களிலேயே ஐரோப்பாவின் தொழில்நுட்பம் கணிசமான வளர்ச்சியைக் கொண்டிருந்தது என்றால் 21ம் நூற்றாண்டைப் பற்றிச் சொல்லவா வேண்டும்? ஜெட் வேகத்தில் முன்னேறிய ஐரோப்பியத் தொழில்நுட்ப மாற்றம் மேற்கு ஐரோப்பாவின் ஆழ்ந்த சமூக, அரசியல், மத மற்றும் அறிவுசார் எழுச்சிகளுடன் தொடர்பு கொண்டிருந்தது. விமானம், ராக்கெட், கிரகங்களுக்கு இடையேயான ஆய்வுகள், செயற்கைக் கோள்கள், எலக்ட்ரானிக்ஸ், அணுசக்தி, மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் என எல்லா துறைகளிலும் பல புதிய விஷயங்கள் கடந்த 100 ஆண்டுகளில் ஐரோப்பியர்களால் கண்டுபிடிக்கப்பட்டன.

மற்ற நாடுகளை விட ஐரோப்பா எப்படி இவ்வளவு தூரம் தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்கிறது என்ற கேள்விக்கான பதில் விரிவானது. அமெரிக்கா, சீனா மற்றும் வேகமாக வளர்ந்து வரும் ஏனைய ஆசிய நாடுகளை விடவும் ஐரோப்பாவின் அரசியல் அணுகுமுறைகள், புதிய தொழில்நுட்பத்திற்கான வரவேற்பு மற்றும் அங்கீகாரம், டிஜிட்டல் பொருளாதாரத்துக்கு வழங்கப்படும் முக்கியத்துவம், புதிய மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் மக்களின் மனநிலை, அவர்களின் திறந்த கலாசாரம், உறுதியான சட்டதிட்டங்கள், திறமைக்கான சன்மானம், மொத்த ஐரோப்பாவும் ஒற்றை அலகாக வளர வேண்டும் என்ற ஒருமித்த குறிக்கோள், அதன் புவியியல் அமைப்பு, இயற்கை வளங்கள், மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை எனப் பல காரணங்களைச் சொல்லலாம்.

1492 முதல் 1914க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் ஐரோப்பியர்கள் உலகின் 84 சதவிகிதத்தைக் கைப்பற்றினர், காலனிகளை நிறுவி, மக்கள் வசிக்கும் ஒவ்வொரு கண்டத்திலும் தங்கள் செல்வாக்கைப் பரப்பினர். ஐரோப்பியத் தொழில்நுட்பம் உலகெங்கும் பரவ ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தியமும் ஒரு காரணமாயிற்று. குறிப்பாகக் கடந்த 100 வருடங்களில் ஐரோப்பாவில் தொழில்நுட்பம் அசுரத்தனமான வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு இன்று பிரமாண்டமான சக்தியாக வளர்ந்து நிற்கும் ஒரு சில முக்கியமான ஐரோப்பியத் தொழில்நுட்பங்களையும், கண்டுபிடிப்புகளையும், நிறுவனங்களையும் கொஞ்சம் கலவையாக இந்த வாரம் பார்க்கலாமா...
World Wide Web

கணினித் தொழில்நுட்பத்தில் கலக்கும் ஐரோப்பா

ஸ்விட்சர்லாந்தின் ஜெனிவாவில் உள்ள ஒரு துகள் இயற்பியல் ஆய்வகத்தில் கணினி விஞ்ஞானியாக இருந்த சர் டிம் பெர்னர்ஸ் (Sir Tim Berners) 1989-ல் விஞ்ஞானிகள் தாங்கள் செய்த சோதனைகளிலிருந்து தரவை எளிதாகப் பகிர்ந்து கொள்ள ஒரு வழியைக் கண்டுபிடிக்க முயன்றதன் விளைவுதான் இன்று உலகமே சிக்குண்டிருக்கும் World Wide Web. ஐரோப்பா உலகுக்கு அருளிய முக்கியமான அருட்கொடை WWW. விஞ்ஞானிகளுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் இணையத்தைத் திறந்துள்ள உலகளாவிய வலையானது மக்கள் தகவல்களைப் பெறுவதற்கும், பகிர்வதற்கும், தொடர்புகொள்வதற்கும் மிகவும் எளிதான வகையில் உலகை இணைத்தது. சமூக வலைப்பின்னல் தளங்கள், வலைப்பதிவுகள், வீடியோ பகிர்வு மற்றும் பலவற்றின் மூலம் மக்கள் தங்கள் வேலைகளையும் எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ள ஒரு இலகுவான வழியைக் காட்டியது. கிட்டத்தட்ட அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டதன் பின்னர் மனிதக்குலத்தின் அடுத்த கட்ட சமூக, அறிவியல், மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காகக் கண்டுபிடிக்கப்பட்ட மிக முக்கிய விஷயமாக இதைச் சொல்லலாம். உலகமயமாக்கலுக்கு மிகப்பெரியளவில் இந்தக் கண்டுபிடிப்பு பயன்பட்டது.

சார்லஸ் பாபேஜ் | Charles Babbage

இன்டர்நெட்டை கண்டுபிடித்தது மட்டுமல்ல, அதைப் பயன்படுத்தும் கம்ப்யூட்டரையும் கண்டுபிடித்தது ஐரோப்பியர்தான். பிரிட்டனைச் சேர்ந்த சார்லஸ் பாபேஜ் (Charles Babbage) என்பவரால் 1822ல் டிஜிட்டல் நிரல் படுத்தக்கூடிய கணினி உருவாக்கப்பட்டது. கணிதவியலாளர், தத்துவஞானி, கண்டுபிடிப்பாளர், இயந்திர பொறியாளர் எனும் பல அவதாரங்களைக் கொண்ட சார்லஸ் பாபேஜின் பெயரில் கணினிகளுக்கான அறிவுசார் பங்களிப்புகளையும், நவீன கண்டுபிடிப்புகளையும் மேற்கொள்பவர்களைக் கௌரவிப்பதற்கான உயர்ந்த விருதைச் சர்வதேச சார்லஸ் பாபேஜ் சொசைட்டி (The International Charles Babbage Society) வழங்கி வருகிறது.

மருத்துவத்தில் ஐரோப்பா

முதல் உலகப்போரில் ஐரோப்பா சந்தித்த மிகப்பெரிய சவால் திடீர் திடீரென பரவிய நோய்கள். குறிப்பாக உலக யுத்தம் நடந்த காலப்பகுதியில் ஒரு சிறிய வெட்டு அல்லது கீறல் காரணமாகவே ரத்தத்தில் நச்சுத்தன்மை கலந்து, சீரியஸான நிலையில் பலர் ஐரோப்பிய மருத்துவமனைகளை நிரப்பினர். ஆனாலும் மருத்துவர்களால் அவர்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை. இதனாலேயே லட்சக்கணக்கில் உயிர்கள் பலியாகின. அக்காலகட்டத்தில் பரவலாகப் பரவிய நிமோனியா, வெட்டை நோய் (Gonorrhea), வாதக் காய்ச்சல் (Rheumatic Fever) போன்ற நோய்த் தொற்றுகளுக்குப் பயனுள்ள சிகிச்சை எதுவும் இருக்கவில்லை. இது போன்ற ஒரு நெருக்கடியான சமயத்தில்தான் மனித சமூகத்தின் மகத்தான ஒரு மருத்துவக் கண்டுபிடிப்பு ஐரோப்பாவில் கண்டுபிடிக்கப்பட்டது. 1940களில் இங்கிலாந்தைச் சேர்ந்த பேராசிரியர் அலெக்சாண்டர் ஃப்ளெமிங்கால் கண்டுபிடிக்கப்பட்ட பெனிசிலினின் அறிமுகம் மருத்துவத்துறையில் ஆன்ட்டிபயாட்டிக்ஸின் சகாப்தத்தை ஆரம்பித்து வைத்தது. “I did not find penicillin. Nature did it. I only found it by accident” என்று கூறிய ஸ்காட்டிஷ் மருத்துவர் - விஞ்ஞானி அலெக்சாண்டர் ஃப்ளெமிங்கின் கண்டுபிடிப்பு ஐரோப்பியருக்கு மட்டுமல்ல உலக மக்களுக்கே மிகப்பெரிய வரப்பிரசாதமாக மாறியது.

பேராசிரியர் அலெக்சாண்டர் ஃப்ளெமிங் | Professor Alexander Fleming

மருத்துவமும் தொழில்நுட்பமும் இணையும் போது மிகப்பெரிய சாதனைகள் நிகழ்த்தப்படுகின்றன. அது மனிதக்குலத்துக்கு மகத்தான பல பயன்களைப் பெற்றுக் கொடுக்கிறது. இன்று உலகின் சிறந்த நவீன மருத்துவ வசதிகளை ஐரோப்பா தன் மக்களுக்கு வழங்குகிறது. ஐரோப்பாவின் சிறந்த மருத்துவ சாதன நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட சில அற்புதமான கண்டுபிடிப்புகள் இன்று உலகெங்கும் கோடிக்கணக்கான மக்களின் உயிரைக் காக்க உதவுகிறது. வரலாற்றின் பக்கங்களைச் சற்று தூசி தட்டிப் பார்த்தால் மருத்துவத் துறையில் ஐரோப்பியரின் பங்கு மிக்கப்பெரிது.

1924-ல் ஜெர்மன் மனநல மருத்துவரான ஹேன்ஸ் பெர்கர் (Hans Berger) கண்டுபிடித்த முதல் மனித எலெக்ட்ரோ என்செபலோகிராம் (EEG), 1943-ல் ஹிட்லரின் நாஜி ஆக்கிரமிப்பில் நெதர்லாந்து சிக்குண்டு கிடந்த போது, கிடைத்த வளங்களைக் கொண்டு நெதர்லாந்து மருத்துவர் வில்லம் ஜோஹன் கோல்ஃப் (Dr. Willem Johan Kolff) உருவாக்கிய முதல் டயலைசர் (Dialyzer), இங்கிலாந்தைச் சேர்ந்த மருத்துவர் சர் காட்ஃப்ரே நியூபோல்ட் ஹவுன்ஸ்ஃபீல்ட் (Sir Godfrey Newbold Hounsfield) அவர்கள் 1971-ல் கண்டு பிடித்த சிடி ஸ்கேன் (CT Scan) என மருத்துவத்துறையில் ஐரோப்பியர்களின் பங்களிப்புகளைப் பட்டியல் போட்டுக்கொண்டே போகலாம்.

இன்றும் கூட உலகின் மிகப்பெரிய மருத்துவ சாதன நிறுவனங்களில் பெரும்பாலானவை ஐரோப்பிய நாடுகளில் இயங்குகின்றன. இரண்டு வருடங்களுக்கு முன் இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் கொரோனா வைரஸின் கடுமையான பாதிப்பைத் தொடர்ந்து பல ஐரோப்பிய மருத்துவ நிறுவனங்கள் வென்டிலேட்டர்கள், PPE (personal protective equipment) மற்றும் சுய பரிசோதனை கிட்கள் (Self Diagnostic Testing Kits) ஆகியவற்றின் தயாரிப்பில் அதிக கவனம் செலுத்துகின்றன. அது தவிர நோவார்டிஸ், Siemens Healthineers, Smith & Nephew, Draegerwerk, Coloplast, Novartis, Koninklijke Philips, Fresenius Medical Care, Koninklijke Philips போன்ற ஐரோப்பிய மருந்துக் குழுமங்கள் உலகுக்கே தரமான, நவீன மருத்துவ உபகரணங்களைத் தயாரித்து வழங்குகின்றன.

PPE

விமானப் போக்குவாரத்தில் ஐரோப்பா

இரண்டாம் உலகப் போரின் முடிவில், ஜெர்மனி உட்பட ஐரோப்பாவின் பல நாடுகள் தங்கள் வசம் ஏராளமான புதிய விமானங்களையும், நவீனத் தொழில்நுட்பத்துடன் கூடிய விமான நிலையங்களையும் வைத்திருந்தன. இவற்றை ஓர் ஆரம்பப் புள்ளியாகப் பயன்படுத்தி, போர் முடிவடைந்த 15 ஆண்டுகளுக்குள் ஐரோப்பாவின் பல விமான நிறுவனங்கள் சர்வதேச வணிக விமானப் போக்குவரத்தின் தலையெழுத்தையே நிர்ணயிக்கும் முக்கிய பங்கேற்பாளர்களாக மாறின.

1960-1961-களில் உலகின் தலைசிறந்த விமான நிறுவனங்கள் (பயணிகள் மற்றும் பயணம் செய்த மைல்களின் எண்ணிக்கையின் அடிப்படையில்) சோவியத் விமான நிறுவனமான Aeroflot, Air France, பிரிட்டிஷ் ஏர்வேஸ், Luftansa, ராயல் டச்சு ஏர்லைன்ஸ் (KLM), ஸ்காண்டிநேவிய ஏர்லைன்ஸ் சிஸ்டம் (SAS), இத்தாலிய விமான நிறுவனமான Alitalia போன்றவை சர்வதேச விமான சந்தையை ஆக்கிரமித்தன. ஐரோப்பாவில் இரண்டாம் உலக யுத்தத்துக்குப் பிறகு செழித்தோங்கிய பெரும்பாலான பயணிகள் விமான நிறுவனங்கள் அந்தந்த நாட்டின் அரசுக்குச் சொந்தமானவையாக இருந்தன. இந்த விமான நிறுவனங்கள் போரினால் வீழ்ந்த ஐரோப்பியப் பொருளாதாரத்தை மறுசீரமைப்பதில் மிகப்பெரிய பங்கு வகித்தன.

1972-ல் ஏரோஃப்ளோட் Tupolev Tu-104 விமானம்

சோவியத் அரசுக்குச் சொந்தமான விமான நிறுவனமான ஏரோஃப்ளோட், போருக்குப் பிறகு சோவியத் யூனியனை மறுகட்டமைப்பதில் பெரும் பங்கு வகித்தது. 1950-களில், ஏரோஃப்ளோட் கிழக்கு ஐரோப்பாவின் தலைநகரங்களிலிருந்து கிழக்கு சைபீரியாவின் தொலைதூர பகுதிகள் வரை தனது நீட்டிக்கப்பட்ட பாதைகளை விரிவுபடுத்தியது. மாஸ்கோ முதல் Vladivostok வரை நீண்ட சோவியத் ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் தனது Tupolev Tu-104 ஜெட் விமானங்களுடன் உலகின் திட்டமிடப்பட்ட பயணிகள் விமானச் சேவையை (regularly scheduled passenger jet service) அறிமுகப்படுத்திய முதல் விமான நிறுவனம் என்ற பெருமையை ஐரோப்பாவுக்குப் பெற்றுக் கொடுத்தது.

அதே போல BOAC (British Overseas Airways Corporation) மற்றும் BEA (British European Airways)-யினால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட பிரிட்டிஷ் விமானச் சேவை, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சர்வதேச விமானப் போக்குவரத்தில் ஆதிக்கம் செலுத்தியது. அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியனுக்கு அடுத்தபடியாக பிரிட்டிஷ் பயணிகள் விமானத் துறையானது உலகிலேயே மிகப் பெரியதாக இருந்தது. 1974-ல் BOAC மற்றும் BEA ஆகியவற்றின் இணைப்பால் பிரிட்டிஷ் ஏர்வேஸ் (British Airways) பிறந்தது. களத்தில் இறங்கிய மறு நிமிஷமே சிக்சர்களாக வெளுத்து வாங்கும் ஸ்டார் பேட்ஸ்மேன் போலப் புதிதாக ஆரம்பித்த பிரிட்டிஷ் ஏர்வேஸின் முதல் ப்ராஜக்ட்டே மாஸாக அமைந்தது. 1976-ம் ஆண்டு ஜனவரியில் ஆங்கிலோ-பிரெஞ்சு கூட்டமைப்பில் உருவான Concorde நிறுவனத்துடன் இணைந்து உலகின் முதல் அதிவேக சூப்பர்சோனிக் சேவையைத் தொடங்கியது. இன்று பிரிட்டிஷ் ஏர்வேஸ் உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பிரபலமான சர்வதேச விமான நிறுவனங்களில் ஒன்றாக வெற்றிகரமாக இயங்கி வருகிறது.

பிரிட்டிஷ் ஏர்வேஸ் | British Airways

1933-ல் உருவான ஏர் பிரான்ஸ் விமான நிறுவனம் ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா மற்றும் பிற பிரெஞ்சு காலனிகளுக்குப் பயணிகள் வழித்தடங்களின் விரிவான வலையமைப்பை உருவாக்கியது. தனது பிரெஞ்சு காலனிகள் தமக்கான சொந்த விமான நிறுவனங்களைத் தொடங்க ஏர் பிரான்ஸ் உதவியது. இரண்டாம் உலகப் போரின் போது, பிரெஞ்சு வணிக விமானத் தொழில் பல தனித்தனி ஆபரேட்டர்களாகப் பிரிந்து, பின்னர் ஜனவரி 1, 1946-ல் ஏர் பிரான்ஸ் என்ற பெயரில் மீண்டும் ஒன்றிணைக்கப்பட்டது. அதே ஆண்டின் இறுதியில், ஏர் பிரான்ஸ் விமான நிறுவனம் ஐரோப்பா முழுவதும் அதன் கணிசமான பயணிகள் சேவை வலையமைப்பை ஆரம்பித்தது.

முதலாம் உலகப் போரை முடித்த வெர்சாய்ஸ் உடன்படிக்கை ஜெர்மனியில் விமானப்படையைத் தடை செய்தது. அதனால் அதற்கு மாற்றீடாக, ஜெர்மன் சிவில் விமான நிறுவனமான Lufthansa 1926-ல் நிறுவப்பட்டு, ஜெர்மன் விமானப்படையான லுஃப்ட்வாஃப் விமானிகளுக்கு விமானப் பயிற்சியை அளித்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், முதல் ஜெர்மன் பயணிகள் சேவைகளை ஏப்ரல் 1955-ல் ஆரம்பித்த Lufthansa ஐரோப்பா முழுவதிலும் வேகமாக வளர்ந்து வரும் விமான நிறுவனங்களில் ஒன்றானது. இன்று உலகின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றான Lufthansa ஐரோப்பாவின் பகட்டான அடையாளம்.

உலகுக்கு முதல் சூப்பர்சோனிக் ஜெட்டை வழங்கிய ஐரோப்பா

பனிப்போருக்குப் பிந்தைய ஐரோப்பாவின் அசாத்தியமான சாதனைகளுள் ஒன்று ஒலியின் வேகத்தை விட வேகமாகப் பறக்கக் கூடிய கான்கார்ட் (Concorde) சூப்பர்சோனிக் ஜெட் விமானம். இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் கூட்டாக இணைந்து உருவாக்கிய கான்கார்ட் அதிவேக சூப்பர்சோனிக் விமானம் 1976 முதல் 2003 வரை சேவையிலிருந்தது. ஜூலை 2000-ல் பாரீஸிலிருந்து புறப்பட்ட ஏர் பிரான்ஸ் கான்கார்ட், புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளாகி விமானத்திலிருந்த 109 பேரும் கொல்லப்பட்டதோடு கான்கார்ட் சூப்பர்சோனிக் பயணிகள் விமானச் சேவை துரதிஷ்டவசமாக முடிவுக்கு வந்தது.

விபத்துக்குள்ளான கான்கார்ட் சூப்பர்சோனிக் ஜெட் விமானம்

உலகின் மிகப்பெரிய விமான உற்பத்தி நிறுவனத்தின் பிறப்பிடம் ஐரோப்பா

ஐரோப்பாவின் மற்றுமொரு அதிரடியான மெகா புராஜெக்ட், ஜெர்மனியும் பிரான்ஸும் இணைந்து உருவாக்கிய உலகின் மிகப்பெரிய ஏரோஸ்பேஸ் தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ் (AirBus) கம்பெனி. உலகின் மிகப்பெரிய விமானங்களை உருவாக்கும் ஏர்பஸ் நிறுவனத்தின் வளர்ச்சி வானைத்தாண்டிச் சென்றுவிட்டது. வணிக, சரக்கு விமானங்களோடு, ராணுவ விமானங்களையும் தயாரித்த ஏர்பஸ் நிறுவனம் தற்போது விண்வெளி வாகனங்களையும் ஒரு கை பார்க்கிறது. கமர்ஷியல் மற்றும் மின்னணு பாகங்கள் முதல் முழு தொலைத்தொடர்பு ரிலே இயங்குதளங்கள், அறிவியல் செயற்கைக்கோள்கள் மற்றும் குழு விண்கலங்கள் வரை அனைத்தையும் ஏர்பஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

ஒன்றரை லட்சம் ஊழியர்கள், 180 நாடுகளுக்கும் மேல் கிளைகள், 12,000க்கும் மேற்பட்ட நேரடி விநியோகஸ்தர்கள் எனத் தொடர்ந்து நாட் அவுட்டாக அடித்து ஆடுகிறது இந்த ஐரோப்பிய ஜாம்பவான்.

உலகை ஆளும் ஐரோப்பாவின் அடையாளங்கள்

என்னதான் சீனப் பொருள்கள் உலகின் மூலை முடுக்கெல்லாம் கொட்டிக் கிடந்தாலும் நீங்கள் பயன்படுத்தும் தரமான 10 பொருள்களைப் பட்டியல் இடச் சொன்னால் அதில் குறைந்தது முதல் ஐந்து இடங்களில் ஐரோப்பிய பிராண்ட்கள் இடம்பிடித்திருக்கும். தரம் என்ற விஷயத்தில் சிறிதும் சமரசம் செய்து கொள்ளாத ஐரோப்பிய உற்பத்திகள் இன்று மூன்றாம் உலக நாடுகளையும் தம் வசம் ஈர்த்துக் கொண்டுள்ளன.

ஸ்விட்சர்லாந்தின் Nestlé, ஜெர்மனியின் Adidas, பிரான்ஸின் Michelin, பின்லாந்தின் Nokia, டென்மார்க்கின் Carlsberg, நெதர்லாந்தின் Shell, ஆஸ்திரியாவின் Red Bull, ஸ்வீடனின் IKEA எனப் புகழ்பெற்ற ஐரோப்பிய உற்பத்திகளைப் பட்டியல் இட்டுக்கொண்டே போகலாம்.

சரி, இவ்வளவு முன்னேற்றம் எப்படிச் சாத்தியமானது? என்னதான் ஒரு நாட்டில் அறிவும், திறமையும், வளங்களும் இருந்தாலும் அவற்றைச் சரியான முறையில் ஒருங்கிணைத்து, கட்டுப்படுத்தி, ஊக்கப்படுத்தி, முறையாக நெறிப்படுத்தி, சரியான முறையில் நிர்வகிக்கத் தெரிந்த ஒரு நல்ல தலைவனால் மட்டுமே அதன் உச்சப் பயனைப் பெற முடியும்.

ஐரோப்பா | Europe
“Great leaders inspire their people to reach higher, dream bigger, and achieve greater” என்பார்கள். நல்ல தலைவன் தொலைநோக்குப் பார்வையோடு செயற்பட்டு தன் நாட்டையும் மக்களையும் அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்வான். அப்படிப்பட்ட மிகச்சிறந்த தலைவர்களின் கரங்கள் ஐரோப்பாவை அணைத்துக் கொண்டன. இன்று முன்னணியில் இருக்கும் ஐரோப்பாவின் வளர்ச்சியிலும், வெற்றியிலும், பின்னணியிலிருந்த, இருக்கும் சில முக்கிய தலைவர்கள் அடுத்த வார யூரோ டூரில்...

யூரோ டூர் போலாமா?



source https://www.vikatan.com/social-affairs/international/euro-tour-29-how-the-european-countries-changed-the-world-through-its-technology-and-inventions

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக