திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் யானை, மான், கேளையாடு, சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதன் காரணமாகவும் அடர்ந்த வனப்பகுதி என்பதாலும், பொதுமக்கள் அங்கு செல்வதற்கு வனத்துறை தடை தடைவிதித்திருக்கிறது.
இருப்பினும் கோடைக்காலங்களில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வனத்திலிருந்து வெளியேறி வருவதை வழக்கமாக கொண்டுள்ளன. குறிப்பாக தண்ணீருக்கு வழியின்றி யானைகள் அவ்வப்போது பழநி அருகே சாலைகளில் உலாவி வருகின்றன.
இந்த நிலையில், புளியமரத்து செட் அருகே வனப்பகுதியில் சவரிக்காடு பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் (27), பாச்சலூரைச் சேர்ந்த ராஜ் (37) ஆகிய இருவரும் சந்தேகப்படும் வகையில் சுற்றி வந்தனர். அப்போது அந்தப் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் அவர்களைப் பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். பிறகு தொடர் விசாரணை நடத்தியதில் அவர்கள் இருவரும் யானைத் தந்தம் கடத்தி வந்தது தெரியவந்தது.
மேலும், அவர்களிடம் இருக்கும் யானைத் தந்தத்தை விலைக்கு வாங்க 3 பேர் வந்ததும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து இருவரையும் கைது செய்த வனத்துறையினர், அவர்கள் மறைத்து வைத்திருந்த யானைத் தந்தத்தையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து யானைத் தந்தத்தை விலைக்கு வாங்க வந்த பாச்சலூரைச் சேர்ந்த முத்துவேலு (42), சிவலிங்கம் (46), அமரபூண்டியைச் சேர்ந்த ராஜேஷ்பிரபு(36) ஆகிய மூவரையும் கைது செய்து வேடசந்தூர் கிளை சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் பேசினோம். ``முத்துக்குமார் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு கிழங்கு எடுக்க காட்டிற்குள் செல்லும் போது, இந்தத் தந்தத்தை கண்டெடுத்துள்ளார். தற்போது வறுமையான நிலையில் இருக்கும் அவர் 35 செ.மீ நீளம் கொண்ட தந்தம் இருப்பது குறித்து அவர் உறவினரான ராஜிடம் கூறியுள்ளார். இவர்களுடைய உறவினர் முத்துவேலு தந்தத்தை விற்றுக்கொடுப்பதாகக் கூறி பழநி அடிவாரத்திற்கு வரச்சொல்லியுள்ளார். இதனால் முத்துக்குமார், ராஜ் இருவரும் பழநி அடிவாரம் வந்துள்ளனர். பதற்றத்தில் இருந்த அவர்களை கண்காணித்த போலீஸார் சந்தேகமடைந்துள்ளனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் நாங்கள் அவர்கள் இருவரையும் பிடித்து விசாரித்தோம். அப்போது அவர்கள் தந்தத்தை விற்றுக்கொடுக்கவும், வாங்கவும் வந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களையும் பழநி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் வைத்து பிடித்தோம். அவர்கள் மூவரும் யானை தந்த விற்பனையில் கைதேர்ந்தவர்கள் இல்லை. இருப்பினும் எப்படியாவது பெரிய விலைக்கு விற்றுவிடலாம் என்ற நோக்கில் வந்துள்ளனர். யானை தந்தமும் மிகவும் சேதமடைந்திருந்தது. இருப்பினும் அவர்கள் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டதால் அவர்கள் 5 பேர் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளோம்'' என்றனர்.
source https://www.vikatan.com/government-and-politics/crime/dindigul-forest-officials-arrested-5-in-ivory-smuggling-case
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக