தமிழக சட்டமன்ற தேர்தல் களம் பல்வேறு திருப்பங்களுக்கு இடையே அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்து கொண்டிருக்கிறது. சிறையில் இருந்து திரும்பிய வி.கே.சசிகலா தீவிர அரசியல் ஈடுபடுவார், அவரது வருகைக்குப்பின் அ.தி.மு.க-வில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு “அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கப் போகிறேன்” என்ற அவரது அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சிறையிலிருந்து வெளியில் வந்ததும் எந்தவித அசைவும் இல்லாமல் வீட்டிலேயே முடங்கியிருந்தவர் அப்படியே இருந்திருந்தால் யாருக்கும் இந்த அறிவிப்பு இந்தளவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்காது. ஆனால், பல்வேறு தடைகளுக்கு இடையே அ.தி.மு.க கொடி கட்டிய காரில் பெங்களூரிலிருந்து சென்னைக்கு 23 மணிநேரம் பயணித்ததன் மூலம், தான் தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக ஒரு பிம்பத்தை அவர் உருவாக்கியிருந்தார்.
அதுமட்டுமல்ல ஜெயலலிதா பிறந்தநாளன்று நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், டிராபிக் ராமசாமி ஆகியோரைத் தன்னுடைய இல்லத்தில் சந்தித்து எதிர்பார்ப்பைக் எகிறவிட்டார். இதனால் அவர் அரசியல் நகர்வு குறித்த பேச்சுகள் பரவலானது. இவ்வளவு பரபரப்பாக இயங்கியவர் திடீரென “அரசியல் இருந்து ஒதுங்குகிறேன்” என்று ஒரு அறிக்கையை வெளியிடுகிறார் எனும் போதுதான் அதன் பின்னணியை ஆராய வேண்டியிருக்கிறது.
Also Read: ஒதுங்கியிருக்கிறாரா, விலகியிருக்கிறாரா? - சசிகலா கடிதம் உணர்த்தும் 5 விஷயங்கள்
சசிகலாவின் இந்த அறிவிப்பு திடீர் என்று அவரது மனதில் உதித்ததாக இருந்திருக்காது. 2021 சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்றால் அ.ம.மு.க உடன் இணைய வேண்டும் என்று பா.ஜ.க மேலிடத்திற்கு வலியுறுத்தப்பட்டிருக்கிறது. அதனால்தான், சென்னை வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா தொகுதி உடன்பாட்டு பேச்சுவார்த்தையைவிட அ.தி.மு.க - அ.ம.மு.க இணைப்பு தொடர்பாகவே எடப்பாடி பழனிசாமியிடம் கறார் காட்டியதாக கூறப்பட்டது. ஆனால், “சசிகலா இல்லாமலேயே அ.தி.மு.க வெற்றி பெறும்” என்று கூறிய எடப்பாடி பழனிசாமியிடம் “இந்தத் தேர்தலில் வெற்றி பெற சசிகலா தேவை. அதற்கான வழிமுறைகளைச் செய்து, தேர்தலில் ஜெயிக்குற வழியைப் பாருங்க” என்று கடுகடுத்திருக்கிறார். ஆனாலும் வளைந்து கொடுக்காத எடப்பாடி பழனிசாமி. அ.ம.மு.க-வுடன் அ.தி.மு.க இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார். சசிகலாவுக்கும் அ.தி.மு.கவும் சம்பந்தமே இல்லை என்று அ.தி.மு.க அமைச்சர்கள் பலரும் கூறிவந்தனர்.
அ.ம.மு.க - அ.தி.மு.க இணைப்பு நடக்காவிட்டால் தேர்தலில் எதுவும் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காகவே “சசிகலா தற்போதைக்கு அரசியலில் இருந்து விலகி இருக்க வேண்டும். தேர்தல் முடிந்த பின்னர் கட்சியை மீட்க, எடப்பாடியை சமாளிக்க என்ன செய்யவேண்டும் அதை செய்துகொள்ளட்டும்” என்று இளவரசி மகன் விவேக் ஜெயராமனை அழைத்துப் பேசியுள்ளது பா.ஜ.க தரப்பு.
அதுமட்டுமல்ல, சிறையில் இருந்து வெளியில் வந்ததும் அ.தி.மு.க-விலிருந்து, ஒரு சில முக்கிய நிர்வாகிகளாவது தன்னை வந்து சந்திப்பார்கள் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தவருக்கு பெரிய ஏமாற்றமே மிஞ்சியது. மேலும், தற்போதைய அரசியல் சூழலில் அ.தி.மு.க-வுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா, நட்டா எனப் பலரும், காங்கிரஸின் ராகுல் காந்தி உள்ளிட்டோரும் தீவிரப் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு மத்தியில் தன்னுடைய குரல் எடுபடாது என்பதையும் நன்றாக உணர்ந்திருக்கிறார் சசிகலா. மேலும், தான் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு அதன்பின் அ.தி.மு.க தோல்வியடைந்தால் அந்தத் தோல்வியை அப்படியே தன்பக்கம் தள்ளிவிட்டு விடுவார்கள். இதனால் தனக்கு தற்போது மக்கள் மத்தியில் உள்ள அனுதாபம், வெறுப்பாக மாறிவிடும். அப்படியான வெறுப்பு மக்கள் மனதில் தோன்றினால் அது தன்னுடைய எதிர்கால அரசியல் நகர்விற்கு பெரிய பின்னடவைக் கொடுத்துவிடும். அதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்றும் சசிகலா யோசித்ததாக சொல்லப்படுகிறது.
எப்படியும் இந்தத் தேர்தலில் அ.தி.மு.க தோல்வி அடைந்துவிடும். இதன்மூலம், எடப்பாடி பழனிசாமி வலிமை இல்லாத தலைவர். தொண்டர்கள் மற்றும் மக்களிடம் அவருக்கு செல்வாக்கு இல்லை என்பது வெளிப்பட்டுவிடும் என்பதோடு சசிகலா தயவு இல்லாமல் பழனிசாமியால் முதல்வர் ஆகியிருக்க முடியாது என்ற விமர்சனமும் உண்மை என்றாகிவிடும். தேர்தல் தோல்விக்குப் பின்னர் தென்மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் எல்லாம் தானாக தன்னை வந்து சந்திப்பார்கள். அப்போது அ.தி.மு.க எந்த எதிர்ப்பும் இல்லாமல் தன் கைக்கு வரும் என்றும் சசிகலா கணக்குப் போட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இவற்றை எல்லாம் யோசித்துத்தான் சசிகலா “நம்முடைய பொது எதிரி தீயசக்தி என்று அம்மா நமக்கு காட்டிய தி.மு.கவை ஆட்சியில் அமர விடாமல் தடுத்து, விவேகமாக இருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் நிலவிட அம்மாவின் தொண்டர்கள் பாடுபட வேண்டும். நான் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி அமைய நான் என்றும் தெய்வமாக வணங்கும் அக்கா புரட்சித்தலைவி இடமும் எல்லாம் வல்ல இறைவனிடமும் பிரார்த்தனை செய்துகொண்டே இருப்பேன்” என அறிக்கை விட்டிருக்கிறார் என்கிறார்கள்.
எனவே மிகப்பெரிய அரசியல் கணக்கை ஓட்டிப் பார்த்துவிட்டுத்தான் சசிகலா இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்க வேண்டும்... மேலும் “அரசியலில் இருந்து விலகுகிறேன்... கட்சியில் இருந்து நீக்குகிறேன்” என்று அ.தி.மு.க-வில் அறிக்கை வெளியாவதும் மீண்டும் அவர்கள் கட்சியில் இணைந்து பணியாற்றுவதும் அ.தி.மு.க-விற்கு ஒன்றும் புதிய விஷயம் இல்லை. இந்த அறிக்கை கலாசாரத்தை தொடங்கி வைத்தவரே ஜெயலலிதாதான். ஜெயலலிதாகவே மாற நினைத்த சசிகலாவின் அறிக்கையும் உண்மையிலே அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கத்தானா என்பதை தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர்தான் நாம் தெரிந்துகொள்ள முடியும்.
கட்டுரை, படங்கள், தொகுதி பிரச்னை குறித்த வீடியோக்களை அனுப்ப க்ளிக் செய்க.... https://bit.ly/39BnZAJ

தமிழகத் தேர்தல் களம் அனல் தகிக்கத் தொடங்கிவிட்டது. தமிழகமெங்கும் சுழன்று செய்திகளை வழங்கிக்கொண்டிருக்கிறது விகடனின் நிருபர் படை. இந்தப் பணியில் நீங்களும் இணையத் தயாரா?
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்;
தேர்தல் தொடர்பான உங்கள் ஏரியா சுவாரஸ்யங்களோ, கள நிலவரங்களோ... அரசியல் கட்சி மீதான விமர்சனங்களோ அல்லது பார்வைகளோ... தொகுதிப் பிரச்னை, தலைவர்கள் பற்றிய நினைவுகள், தேர்தல் குறித்த நாஸ்டால்ஜியா நினைவுகள் ஆகியவையோ... எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். கட்டுரை, படங்கள், வீடியோ என எதிலும் கலக்கலாம். அனுப்ப வேண்டிய லிங்க்: https://bit.ly/39BnZAJ
உங்கள் பங்களிப்புகளுக்கு இங்கே களம் அமைத்துத் தருகிறது விகடன்.
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://ugc.vikatan.com/election/createarticle
source https://www.vikatan.com/government-and-politics/politics/is-bjp-and-edapadi-palanisamy-there-for-sasikalas-decision-behind
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக