ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனை என்னவாகும்?!
கடந்த மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது கர்நாடக மாநிலத்தில் பேசிய ராகுல் காந்தி, `எல்லா திருடர்களின் பெயரும் மோடி என்றே முடிவது ஏன்?’ என்று விமர்சித்தார். இது தொடர்பாக குஜராத் பாஜக எம்.எல்.ஏ. புர்னேஷ் மோடி, மோடி சமூகத்தை ராகுல் காந்தி அவதூறாக பேசி விட்டார் என்று கூறி சூரத் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ராகுல் காந்தியை குற்றவாளி என அறிவித்ததுடன் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தது. இதையடுத்து, ராகுல் காந்தி எம்.பி. பதவியிலிருந்து நீக்கப்படுவதாக மக்களவைச் செயலகம் அறிவித்தது.
இதனை எதிர்த்து கடந்த ஏப்ரல் 3-ம் தேதி சூரத் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். மேலும், தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி ஒரு மனுவும், மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வரும்வரை, குற்றவாளி என்று அறிவித்த நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி மற்றொரு மனுவும் தாக்கல் செய்தார். இந்த இரண்டு மனுக்களையும் விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கியது. இதையடுத்து தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்யக் கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் மீதான தீர்ப்பு இன்று வெளியாகவுள்ளது.!
source https://www.vikatan.com/government-and-politics/politics/latest-tamil-news-live-updates-dated-on-07-07-2023
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக