Ad

சனி, 29 ஜூலை, 2023

`ராமநாதபுரத்தில் மோடி போட்டியிட வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம், ஆனால்..!' அண்ணாமலை கூறுவதென்ன?

ராமநாதபுரத்திலிருந்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை `என் மண், என் மக்கள்' என்ற பாதயாத்திரையைத் தொடங்கியுள்ளார். ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் நேற்று மாலை சாமி தரிசனம் செய்த பிறகு, அங்கிருந்து பாதயாத்திரையாக நடந்து கேணிக்கரை வழியாக அரண்மனை பகுதியில் தன்னுடைய முதல் நாள் பாதயாத்திரையை நிறைவுசெய்தார். அதைத் தொடர்ந்து, பாதயாத்திரைக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனத்தில் ஏறி, பொதுமக்கள் முன்பு பேசினார். அப்போது அவர், `` 'என் மண், என் மக்கள்' யாத்திரையின் நோக்கம் என்பது தமிழகத்துக்கு இன்றைய காலகட்டத்துக்கு நம் மண்ணையும் மக்களையும் நேசிக்கக் கூடிய பாரதப் பிரதமர் மோடி தேவை என்பதை வலியுறுத்தவே.

அண்ணாமலை பாதயாத்திரையை தொடங்கி வைத்த அமித்ஷா

கடந்த 9 ஆண்டுகள் இந்தியாவின் பிரதமராக ஆட்சிக்கட்டிலில் இருக்கிறார். இந்த 9 ஆண்டுக்கால ஆட்சியில் தமிழகத்துக்கு மத்திய அரசு கொடுத்திருக்கும் நிதி மட்டும் ரூ.10.76 லட்சம் கோடி. எந்த மாநிலத்துக்கும் வராத நிதி தமிழகத்துக்கு வந்துள்ளது. ஏனெனில் பிரதமர் மோடி தமிழகத்தை கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார். உலகத்தின் மிகத்தொன்மையான நம் தாய்மொழியான தமிழில் பேசிக்கொண்டிருக்கிறேன். நம் தாய்மொழிக்கு ஒப்பற்ற மொழி இந்த உலகத்தில் வேறு எங்குமே இல்லை. ஆனால் கடந்த 2014-க்கு முன்பு வரை யாரும் இதை பற்றி சொல்லவில்லை. ஆங்கிலம் உள்ளிட்ட அயல்நாட்டு மொழியில் படிக்குமாறு கூறினர். பிரதமர் தமிழனாகப் பிறக்கவில்லை. ஆனால் தமிழை போற்றக்கூடிய மனப்பாங்கை அவரிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். தொடர்ந்து ஆட்சிக்கு வந்த நாள் முதல் உலகத்தின் தொன்மையான மொழி தமிழ்மொழி என்று போற்றி வருபவர்.

ஐ.நா சபையில் `யாதும் ஊரே யாவரும் கேளிர்' என ஆரம்பித்து நம் திருக்குறளை உலகம் முழுவதும் படிக்க வைக்க வேண்டும் எனச் சொல்லி வருகிறார். 100 மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட வேண்டும் என்று கூறி வருகிறார். தமிழ் கலாசாரத்தை பின்பற்ற வேண்டும் என்று சொல்கிறார். இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு தமிழனாக இல்லாத ஒரு தலைவன் இப்படி தமிழ்மொழிக்கு சீரும் சிறப்பும் சேர்த்தது கிடையாது. புதிதாக திறந்த நாடாளுமன்றத்தில் தமிழர்களின் கலாசாரத்தை மையப்படுத்தி செங்கோலை கொண்டு சென்றுள்ளார். தமிழகத்தில் 27 மாதங்களாக தி.மு.க-வின் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அவர்களும் `என் மண், என் மக்கள்' என்று சொல்கின்றனர். ஆனால் ஒரு குடும்பத்திற்காக. என் மக்கள் என்று முதல்வர் சொல்வது அவரின் குடும்ப மக்களுக்காக. என் மண் என்று சொல்வது அவரின் குடும்பத்தினர் சம்பாதித்த மண்ணிற்காக.

ராமநாதபுரத்தில் பொதுமக்கள் முன்பு பேசிய அண்ணாமலை

ஒரே ஒரு குடும்பத்திற்காக, ஒரே மகனுக்காக, ஒரே மருமகனுக்காக இங்கு ஒரு ஆட்சி நடக்கிறது. 2 அமைச்சர்கள்மீது அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது. ஓர் அமைச்சர் 41 கோடி ரூபாய் வைப்புநிதியாக கணக்கில் வராத பணத்தை வைத்துள்ளார். மற்றொரு அமைச்சரான செந்தில் பாலாஜியைக் காப்பாற்றுவதற்காக முதல்வர், அரசு இயந்திரம் என பாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். ஊழல் என்பது தமிழக அளவில் சாதாரண மக்கள் பேசும் அளவு நடந்து கொண்டிருக்கிறது. அனைத்திலும் ஊழல் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் 2024 தேர்தல் வருகிறது. பிரதமர் மோடியை மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர வைப்பதற்கு பொன்னான வாய்ப்பு வருகிறது.

மோடி ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். உங்கள் அன்பை பிரதமருக்கு கொண்டு சொல்வது எங்கள் பொறுப்பு, நீங்கள் விரும்பியதுபோல நடக்க வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம். ஆனால், அது உங்கள் கையில்தான் இருக்கிறது. நீங்கள்தான் எங்கள் பாதயாத்திரைக்கு வலுசேர்க்க வேண்டும். அதைப்பார்த்து மோடி இங்கே போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

மோடியை எதிர்த்து 17 பேர் சேர்ந்து ஒன்றாக கூட்டம் நடத்துகின்றனர். அந்த கூட்டத்துக்கு `இந்தியா' என பெயர் வைத்துள்ளனர். இந்தியா என்று சொல்வதற்கு தகுதி வேண்டும். அந்த கூட்டணியில் உள்ள நபர்கள் தமிழகத்தை தனி தமிழ்நாடாக பிரிக்க வேண்டும், காஷ்மீரை தனி நாடு என்று பேசுபவர்கள். அங்கிருக்கும் அனைவரும் ஊழல்வாதிகள். புலிக்குட்டியை பார்த்து பூனைக்குட்டி சூடுபோட்டு கொண்டதை போல, இந்தியாவை நேசிக்காதவர்கள் `இந்தியா' என்று பெயரை வைத்து கொண்டு சுற்றுகிறார்கள். எங்களுக்கு எந்நாளும் நரேந்திர மோடிதான் பிரதமர். ஆனால் அவர்கள் கூட்டணியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரதமர். அவர்களின் கனவு பலிக்காது. தமிழகம் முழுவதும் தேசியத்தை கொண்டு செல்வதுதான் இந்த யாத்திரையின் நோக்கம்.

இந்த மண்ணையும் மக்களையும் யாரும் சூறையாடக் கூடாது என்பதற்காகத்தான் 234 தொகுதிகளிலும் யாத்திரை பயணம் செல்கிறோம். மீண்டும் திராவிடர் கயவர் கூட்டம் நம்மை அண்டிப் பிழைத்து, நம்மிடம் உள்ள சொத்துகளை எல்லாம் பிடுங்கக் கூடாது என்பதற்காகத்தான் இந்த கடினமான பயணத்தை மேற்கொண்டுள்ளோம். அவர்களை அப்புறப்படுத்த 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் ஒரு வாய்ப்பாக வருகிறது. இந்த முறை 39 தொகுதிகளிலும், குறிப்பாக ராமநாதபுரம் தொகுதியில் முதல் தொகுதியாக அனுப்பி வைக்க வேண்டியது நம்கடமையாக கொள்ள வேண்டும். ஒரு தராசு தட்டில் சமமாக வைத்து மோடியை பார்க்கும் அளவிற்கு எந்த அரசியல்வாதிக்கும் தகுதி கிடையாது. மோடி என்பவர் அரசியல்வாதி கிடையாது. மக்களுக்காக சேவை செய்யும் சேவகர்" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/bjp-state-president-annamalai-speech-at-ramanathapuram-during-his-padayatra

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக