எதிர்க் கட்சிகளின் ‘இந்தியா’ அணி, ஆளும் பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி ஆகிய இரண்டும் பரபரப்பாக களமிறங்கியிருக்கின்றன. தற்போதைய நிலையில், இந்தியா அணியில் 26 கட்சிகள், என்.டி.ஏ-வில் 38 கட்சிகள் என இரு அணிகளிலும் மொத்தம் 64 கட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.
இவை தவிர, ஆந்திராவில் ஆட்சியில் இருக்கும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலங்கானாவில் ஆட்சியில் இருக்கும் பாரத் ராஷ்டிர சமிதி, ஒடிசாவில் ஆட்சியில் இருக்கும் பிஜு ஜனதா தளம், கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம், உ.பி-யில் பகுஜன் சமாஜ் கட்சி, அசாதுதீன் ஓவைசி தலைமையிலான ஏ.ஐ.எம்.ஐ.எம் என பல கட்சிகள் இரு அணிகளிலும் சேராமல், தனித்தனியாக இருக்கின்றன.
தற்போது இரு அணிகளிலும் இருக்கும் கட்சியில் அதே அணிகளில் நீடிக்குமா, அல்லது அணிகள் மாறுமா, அல்லது அணிகளிலிருந்து விலகுமா என்பதையெல்லாம் இப்போது கணிக்க முடியாது. ஆனாலும், தற்போதைய நிலவரப்படி இரு அணிகளில் எந்த அணிக்கு வாக்கு வங்கி அதிகம் என்பது பற்றி அரசியல் நோக்கர்கள் அலசிவருகிறார்கள்.
2014-ல் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில், பா.ஜ.க 282 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 44 இடங்களையும் பிடித்தன. 2009-ல் நடைபெற்ற தேர்தலுடன் ஒப்பிடுகையில், காங்கிரஸ் 162 இடங்களை இழந்திருந்தது. அதே நேரத்தில், பா.ஜ.க 166 இடங்களைக் கூடுதலாகப் பெற்றிருந்தது.
2019-ல் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில், பா.ஜ.க 303 இடங்களையும் காங்கிரஸ் கட்சி 52 இடங்களையும் பெற்றன. ஆனால், கடந்த தேர்தலின்போது இருந்த அரசியல் சூழல் இப்போது இல்லை. நாடாளுமன்றத்தில் 303 இடங்களுடன் பலமான கட்சியாக பா.ஜ.க இருந்தாலும், 10 மாநிலங்களில் மட்டுமே அது ஆட்சியில் இருக்கிறது. ஆகவே, கடந்த முறையைப் போலவே அதிக வாக்குகளை என்.டி.ஏ பெறுவது சாதாரணமான விஷயமல்ல.
இது குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியனிடம் பேசினோம்.
“2019-ல் நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க 303 இடங்களைப் பிடித்தது. அதே நேரத்தில், அப்போது பா.ஜ.க அரசுக்கு எதிரான மனநிலையும் இருந்தது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி., பெட்ரோல் - டீசல் விலை உயர்வு போன்ற பிரச்னைகள் காரணமாக, மோடி அரசு மீது மக்களுக்கு கோபம் இருந்தது. ஆகவே, விவசாயிகளுக்கு ரூ. 6,000 தருவதாக 2019 பிப்ரவரியில் மோடி அரசு அறிவித்தது. அதில், தேர்தலுக்கு முன்பாக ஒரு தொகையை பயனாளிகளுக்கு கொடுக்கவும் செய்தார்கள். மேலும், பொருளாதார அடிப்படையில் 10 சதவிகித இடஒதுக்கீடும் அப்போது கொண்டுவரப்பட்டது.
அப்போதுதான், புல்வாமாவில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது தாக்குதல் நடைபெற்று, ராணுவ வீரர்கள் மரணடைந்தனர். அதற்கு, பதிலடியாக பாகிஸ்தான் மீது ராணுவத் தாக்குதலை இந்திய அரசு நடத்தியது. அதைச் சொல்லி பிரதமர் மோடி வாக்கு கேட்டார். மோடியால் மட்டும்தான் இந்தியாவைக் காப்பாற்ற முடியும் என்று பா.ஜ.க-வினர் பிரசாரம் செய்தனர். இவையெல்லாம் சேர்ந்து, அந்த தேர்தலில் எதிர்பார்த்ததைவிட அதிகமான இடங்களில் பா.ஜ.க வெற்றிபெற்றது.
இப்போது, பா.ஜ.க ஆட்சிக்கு வந்து ஒன்பது ஆண்டுகள் ஆகின்றன. எனவே, நிச்சயமாக ஆட்சிக்கு எதிரான மனநிலை இருக்கும். பழைய வாக்கு வங்கி அப்படியே இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. முன்பு போல எல்லா மாநிலங்களிலும் அவர்களுக்கு ஆதரவு இருக்கிறது என்று சொல்ல முடியாது. குஜராத், உ.பி ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க அதிக இடங்களைப் பெறும்.
தற்போது, சமாஜ்வாடி கட்சியும் காங்கிரஸும் ‘இந்தியா‘ அணியில் இடம்பெற்றிருக்கின்றன. உ.பி-யில் சமாஜ்வாடி செல்வாக்கு மிகுந்த கட்சி. கர்நாடகா வெற்றிக்குப் பிறகு அங்கு காங்கிரஸின் செல்வாக்கு அதிகரித்திருப்பதாக அந்தக் கட்சி நிர்வாகிகள் கூறுகிறார்கள். ஒருவேளை அங்கு, சமாஜ்வாடியும் காங்கிரஸும் கூட்டணி சேர்ந்தால், அது பா.ஜ.க-வுக்கு கடுமையான போட்டியைக் கொடுக்க வாய்ப்பு இருக்கிறது.
அதுபோல, குஜராத்தில் பா.ஜ.க நல்ல செல்வாக்குடன் இருக்கிறது. அதே நேரத்தில், அங்கு ஆம் ஆத்மி 12 சதவிகிதம் வாக்குகளை வாங்கியிருக்கிறது. அங்கு, காங்கிரஸும் ஆம் ஆத்மியும் கூட்டணி அமைத்தால், பா.ஜ.க-வுக்கு போட்டியைக் கொடுக்க முடியும். ஒடிசாவில் நவீன் பட்நாயக் செல்வாக்குடன் இருக்கிறார். அவர் எந்த அணியிலும் இல்லை. எனவே, அந்த மாநிலத்தில் இந்தியா அணிக்கோ, என்.டி.ஏ-வுக்கோ பெரிய லாபம் இல்லை.
ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டியுடன் பா.ஜ.க-வுக்கு சுமூகமான உறவு இருக்கிறது. ஆனால், சந்திரபாபு நாயுடுவுடன் பா.ஜ.க கூட்டணி சேர்ந்துவிட்டால், ஜெகன்மோகன் ரெட்டி எதிரியாகிவிடுவார். அங்கு, பா.ஜ.க-வுக்கும் சந்திரபாபு நாயுடுவுக்கும் பெரிய வாக்கு வங்கி கிடையாது.
மகாராஷ்டிராவில் இரு அணிகளுக்கும் இடையே கடுமையான போட்டி இருக்கும். தமிழ்நாட்டில் இந்தியா அணி வலுவாக இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி இனிமேல் தான் தனது செல்வாக்கை நிரூபிக்க வேண்டும். கேரளாவில் கம்யூனிஸ்ட்டும், காங்கிரஸும் வலுவாக இருக்கின்றன. அங்கு, என்.டி.ஏ-வுக்கு பெரிய வாக்கு வங்கி கிடையாது. தெலங்கானாவில் காங்கிரஸுக்கும் ஆளும் பி.ஆர்.எஸ்-ஸுக்கும் இடையே கடும் போட்டி நடக்கிறது. பா.ஜ.க-வுக்கு அங்கு பெரிய வாக்கு வங்கி கிடையாது. கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி வலுவாக இருக்கிறது.
மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க செல்வாக்கு இழந்திருக்கிறது. அங்கு, காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி பலமாக இருக்கிறது. அங்கு, பா.ஜ.க பலவீனமாக இருக்கிறது. கடந்த முறை என்.டி.ஏ-வில் இருந்த அகாலி தளம் பின்னர் கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்டது. அது, மீண்டும் பா.ஜ.க கூட்டணிக்கு வருமா என்பது தெரியவில்லை. இமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி செல்வாக்குடன் இருக்கிறது.
வடகிழக்கு மாநிலங்களில் 25 தொகுதிகள் இருக்கின்றன. தற்போது மணிப்பூர் வன்முறையால் பா.ஜ.க-வுக்கு எதிர்ப்பு எழுந்திருக்கிறது. அங்கு கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழும் நிலையில், பொது சிவில் சட்டம் கொண்டுவரப்பட்டால், பா.ஜ.க எதிர்ப்பு அதிகரிக்கும் சூழல் இருக்கிறது” என்கிறார் ப்ரியன்.
ஜம்மு - காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று அங்கிருக்கும் கட்சிகள் அனைத்தும் வலியுறுத்திவருகின்றன. ஆனால், மத்திய அரசு அங்கு தேர்தலை நடத்தவில்லை. தோல்வி பயமா என்பது தெரியவில்லை. ஆனால், நாடாளுமன்றத் தேர்தலை நடத்தியே ஆக வேண்டும். அப்போது, பிரிவு 370 நீக்கம் போன்ற மத்திய பா.ஜ.க அரசின் நடவடிக்கைகளுக்கான விளைவுகள் தெரியவரும்.
2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது பா.ஜ.க வெற்றிபெறாது என்றார்கள். ஆனால், பல காரணங்களால் அது பெரும் வெற்றியைப் பெற்றது. அதுபோல, 2024-லும் பா.ஜ.க-வுக்கு சாதகமான சந்தர்ப்பமும் சூழலும் உருவானால், அதை பா.ஜ.க பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. மேலும், இரு கூட்டணியிலும் இடம் பெறாத கட்சிகளும் தேர்தலுக்கு பின் முக்கியத்துவம் பெறலாம் என்னும் நிலையும் தற்போது சொல்லப்படுகிறது.!
source https://www.vikatan.com/government-and-politics/politics/india-and-nda-which-alliance-is-having-bigger-vote-bank
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக