பங்கட்லால் கஜானன் மகராஜுக்கு நாணயங்களைக் காணிக்கை ஆக்கியபோது அவர் மறுத்து, "உன் உண்மையான பக்தியே போதும். நான் வியாபாரியல்ல. பணம் பெற்றுக்கொண்டு அருள் செய்ய. உன் பக்தியை மட்டுமே எப்போதும் சமர்ப்பணம் செய். அதையே நான் எதிர்பார்க்கிறேன்" என்று சொல்லி ஆசீர்வதித்து அனுப்பினார்.
இதுதான் சத்குருவின் உயர்ந்த குணம் மட்டுமல்ல அடையாளமும் கூட. காவி உடை தரித்தவர்கள் எல்லாம் குருவாகும் தகுதி பெற்றவர்கள் இல்லை. யார் ஷட்புரி எனப்படும் ஆறு பாவங்களில் இருந்தும் விடுபட்டவராக இருக்கிறாரோ அவரே சத்குரு ஆவார். அது என்ன ஆறு பாவங்கள்?
1. காமம், 2. கோபம், 3. பேராசை, 4. சலனம், 5. தற்பெருமை, 6. பொறாமை எனப்படும் இந்த ஆறுபாவங்களையும் விடுத்து பரம்பொருளை அறிந்து அவரை அடையும் வழியில் நம்மை நடத்த வல்லவரே சத்குரு. அப்படி உயர்ந்த ஞானமும் பக்தர்கள் மேல் கருணையும் கொண்டவராகத் திகழ்ந்த கஜானன் மகராஜ் மாபெரும் மகான் என்பதை ஷேக்காவ் கிராமம் விரைவிலேயே புரிந்துகொண்டது. அந்த ஊர் மக்கள் அவரை நடமாடும் தெய்வமாகப் போற்றினர். எப்போதும் ஏதேனும் பாடிக்கொண்டு, அங்கும் இங்குமாக நடந்துகொண்டு இருந்தாலும் அந்த ஊரில் உள்ளவர்களுக்கு அதன் மூலம் அருள்செய்துவந்தார் கஜானன். அந்த ஊரில் எந்த வீட்டுக்குள்ளும் சென்று வெளியே வரும் உரிமை அவருக்கு மட்டுமே இருந்தது. அதாவது அவர் வருகைக்காக மக்கள் காத்திருந்தனர்.
கஜானன் மகராஜின் புகழ் நாடெங்கும் பரவியது. காசியிலிருந்து ராமேஸ்வரம் தீர்த்த யாத்திரை செல்லும் பக்கிரி ஒருவர் கஜானன் மகராஜ் பற்றிக்கேள்விப்பட்டு அவரை தரிசனம் செய்ய வேண்டும் என்று விரும்பினார். ஆலயத்துக்கோ, மகான்களை சந்திக்கவோ, குழந்தைகள் வசிக்கும் வீட்டுக்கோ வெறும் கையுடன் செல்லக்கூடாது என்பது உலக நியதி என்பதை அந்தப் பக்கிரி அறிவார். ஆனால் கஜானன் மகராஜை சந்திக்கும்போது சமர்ப்பணம் செய்ய எதுவும் இல்லையே என்று வருந்தினார். அவரிடம் ஒரு ஹூக்கா மட்டுமே இருந்தது. அதை சமர்ப்பணம் செய்துவிடலாம் என்று நினைத்துக்கொண்டு புறப்பட்டார்.
கஜானன் மகராஜை தரிசனம் செய்ய அன்றைக்கு ஊர்மக்கள் திரண்டு நின்றனர். பக்கிரியும் முன்னால் சென்று அவரை நமஸ்காரம் செய்தார். ஊர் மக்கள் முன்னிலையில் ஹூக்காவை சமர்ப்பிக்கத் தயங்கி நின்றார். இதை மகராஜ் புரிந்துகொண்டார்.
"ஏன் தயங்குகிறாய்? எதைக் கொடுக்க வேண்டும் என்று விரும்பினாயோ அதைக் கொடு. நான் ஏற்றுக்கொள்கிறேன்" என்று சொல்லவும் பக்கிரி நெகிழ்ந்துபோனார். ஹூக்காவை எடுத்து ஒரு தட்டில் வைத்து,
"சுவாமி, இந்த ஏழை பக்கிரியிடம் வேறு எதுவும் இல்லை. மேலும் நீங்கள் அந்த சிவசங்கரனின் அவதாரம். எனவேதான் தயங்கினேன். மேலும் உங்களிடம் எதையும் மறைக்க முடியாது என்பதையும் தெரிந்துகொண்டேன்" என்று சொல்லி சமர்ப்பித்தார். கஜானன் மகராஜ் புன்னகையோடு அதை ஏற்றுக்கொண்டார்.
ஷேக்காவ் கிராமத்தில் ஜனாராவ் தேஷ்முக் என்னும் செல்வந்தர் வாழ்ந்துவந்தார். ஒரு நாள் அவருக்கு உடல் நிலை மோசமானது. வைத்தியர்கள் எவ்வளவு முயன்றும் பயனில்லை.
அப்போது அவர் குடும்ப நண்பர், பங்கட்லாலின் நண்பர். அவர் பங்கட்லாலினை அணுகி, "வைத்தியர்கள் கைவிட்டு விட்டார்கள். மரணம் ஜனாராவை நெருங்கிக் கொண்டிருக்கிறது. குருநாதரின் திருப்பார்வையோ அல்லது அவர் பாத அபிஷேகத் தீர்த்தமோ கிடைத்தால் ஜனராவ் தேஷ்முக் பிழைப்பார். அதற்கு உதவ முடியுமா?" என்று கேட்டார்.
பங்கட்லால் யோசித்தார். இந்த உலகில் மூன்று விதமான மரணங்கள் உள்ளன. ஒன்று, இயற்கையானது. மற்றொன்று தற்கொலை. மூன்றாவது விபத்து. இதில் கடைசி இரண்டையும் குருவருளும் திருவருளும் மாற்றும். ஆனால் இயற்கையான மரணத்தை குருவருள் மாற்றுமா? என்று யோசித்தார். ஆனாலும் எதையும் முடிவு செய்யத் தான் யார்? மேலும் குருபாத தீர்த்தமே மரணத்தை விரட்டும் மருந்து என்று நம்பும் இந்த மனிதரின் நம்பிக்கை எப்படிப்பட்டது? அந்த நம்பிக்கையே அற்புதம் செய்யும் என்று எண்ணிக்கொண்டார்.
அதற்கு பங்கட்லால், "இதில் நான் சொல்ல என்ன இருக்கிறது. மரணமேயானாலும் குருவருள் இருந்தால் வென்றுவிடலாம். குருநாதரிடம் விண்ணப்பம் செய்கிறேன்" என்று சொல்லி கஜானன் மகராஜிடம் விண்ணப்பம் வைத்தார். கஜானன் புன்னகையோடு தலையசைத்தார். அப்பொழுதே ஒரு குவளை நீர் எடுத்து கஜானனின் பாதத்தை நீராட்டினார். அப்போது கோடி புண்ணிய தீர்த்தத்தின் பலன் அந்த நீரில் நிறைந்தது.
அதை ஒரு குவளையில் ஊற்றிக்கொடுத்தார் பங்கட்லால். வீட்டுக்கு எடுத்துச் சென்ற நபர் அதை ஜனாராவுக்குக் கொடுத்தார். என்ன அதிசயம், அந்தத் தீர்த்தத்தைப் பருகிய அடுத்த நொடி ஜனாராவ் எழுந்து அமர்ந்தார். அடுத்த சில நாள்களில் அவர் உடல் தேறியது. கஜானன் மகராஜின் திருவடி மகிமைக்கு சாட்சியாக ஷேக்காவ் கிராமத்தில் அவர் நடமாடினார்.
குருவருள் தொடரும்
source https://www.vikatan.com/spiritual/gods/miracles-of-gajanan-maharaj
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக