ஆண்கள், பெண்கள், இளவயதினர், நடுத்தர வயதினர் எனப் பெரும்பாலானவர்களிடம் ஃபிட்னெஸ் குறித்த ஆர்வம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால், அந்த ஆர்வம் ஆரோக்கியம் என்பதிலிருந்து திசை தவறி, ‘ஒல்லியாக இருந்தால்தான் அழகு’, ‘மசிள் பில்டிங்’ (Muscle building) இருந்தால்தான் வசீகரம்’ என்கிற மனநிலையாக மாறிக்கொண்டிருப்பதுதான் கவலையைக் கூட்டுகிறது. எடைக் குறைப்பு அல்லது பாடி பில்டிங் முயற்சியில் உயிரிழப்புகள் வரை நடப்பதை கேள்விப்படும்போது, கவலை பல மடங்கு பெருகுகிறது.
சமூக வலைதளங்களில் புகைப்படங்கள், வீடியோக்கள் ஷேர் செய்யும் ஆர்வம் மற்றும் மோகத்தில் ஆண்கள் பலரும் சிக்ஸ் பேக் முயற்சியில் இறங்க, பெண்களோ எடைக்குறைப்பு முயற்சியில் இறங்குகிறார்கள். ஃபிட்னெஸ் என்பதை ஆரோக்கியமான வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், பயிற்சிகள் மூலம் அடைவதுதான் சரி. அதை விடுத்து, ‘க்ராஷ் டயட்’ (Crash Diet), ‘புரொட்டீன் பவுடர்’ (Protein Powder) என பக்க விளைவுகளுக்கு வாய்ப்புள்ள அபாயம் நோக்கியே பலரும் செல்கிறார்கள். ‘சைஸ் ஸீரோ’ மோகத்தில் பட்டினி அல்லது தேவையான உணவைச் சாப்பிடாமல் தவிர்க்கும் இளம்பெண்களும் இங்கே அநேகம்.
‘பாடி பில்டிங்’ என்கிற பெயரில் முரட்டுத்தனமான பயிற்சிகள் மற்றும் தவறான உணவு முறைகள் காரணமாக பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகி, அவற்றிலிருந்து மீளவே முடியாமல் தவிப்பவர்கள் நிறையவே இருக்கிறார்கள். தன்னுடைய எடைக் குறைப்பு முயற்சியை வீடியோக்களாக வெளியிட்டு வந்த சீனாவைச் சேர்ந்த சோஷியல் மீடியா இன்ஃபுளூயன்ஸரான 21 வயது பெண், அளவுக்குமீறி உடலை வருத்திக் கொண்டதால் சமீபத்தில் உயிரையே இழந்தார். தாய்லாந்தைச் சேர்ந்த பிரபல ஃபிட்னெஸ் இன்ஃப்ளூயன்ஸர், 30 வயதில் ‘அன்யூரிஸம்’ (Aneurysm) என்ற பாதிப்புக்கு உயிரைப் பறிகொடுத்தார். இதெல்லாம், ‘எடைக்குறைப்பு’ என்கிற விஷயத்தின் மீதே அச்சத்தைக் கூட்டுகின்றன.
டயட்டோ, பயிற்சிகளோ... அவை உடம்புக்குத் தண்டனையாக இருக்கக் கூடாது. மனதளவிலும், உடலளவிலும் பலம் கூட்டுவதாக மட்டுமே இருக்க வேண்டும். அந்த வகையில் பார்க்கும்போது குறுகிய காலத்தில் எடையைக் குறைக்க வேண்டும் என்கிற நோக்கமே தவறானதுதானே தோழிகளே!
நம் தினசரி வேலைகளைச் செய்யக்கூடிய சுறுசுறுப்போடு இருப்பது; துரித உணவுகள், சிகரெட், மது உள்ளிட்டவற்றைத் தவிர்ப்பது என உடம்பு குறித்த அக்கறையோடு இருப்பது மிகமிக அவசியமே. சரிவிகித உணவு, நடைப்பயிற்சி, தேவையான தூக்கம், நம்முடைய வேலைகளை நாமே செய்வது இதையெல்லாம் பின்பற்றினால் ஆரோக்கியம் நிரந்தரமே! அதுதானே நிரந்தர அழகும்கூட!
உரிமையுடன்,
ஸ்ரீ
ஆசிரியர்
source https://www.vikatan.com/health/fitness/nmkkullllee-5
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக