இரண்டு, மூன்று தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர், நகரங்களில் பகுதி வாரியாக பிரித்து மா.செ என மொத்தம் 144 புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்து, அவர்களை சென்னைக்கு அழைத்து அறிமுக கூட்டம் நடந்தியிருக்கிறது வி.சி.க. கூட்டத்துக்கு மகிழ்ச்சியாக வந்த புதிய மா.செ-க்களுக்கு பல கடினமான அசைமென்டுகளையும் கொடுத்திருக்கிறார் வி.சி.க தலைவர் திருமாவளவன். சென்னை கோயம்பேட்டில் உள்ள ஜெ.பி ஹோட்டலில் இரண்டாம் தளத்தில் நடந்த மா.செ கூட்டத்தில் நடந்தது என்ன?
புதிதாக நியமனமான 144 மா,செ-க்களும் முதல்முறை மா.செ-க்கள். அதில் 25 சதவீதம் பேர் 40 வயதுக்கு உட்பட்டவர்கள். 10 சதவீத பெண்களும் 10 சதவீத பட்டியல் சமூகம் அல்லாதோருக்கு பதவி வழங்கியுள்ளது விடுதலை சிறுத்தைகள் கட்சி. ஆண்டாண்டுகளாக ஆட்சியில் இருந்த, இருக்கும் கட்சிகளே ஒற்றை இலக்கில்தான் பெண்களை மாவட்ட செயலாளர்களாக நியமித்திருக்கும் நிலையில் வி.சி.க பெண்களுக்கு 10% சதவீதம் ஒதுக்கியிருப்பது ஆச்சரியம்தான்.
மாவட்டச் செயலாளர்கள் 144 பேர், மண்டல செயலாளர்கள் 21 பேர், மண்டல துணைச் செயலாளர்கள் 63 பேர், வடமண்டல தேர்தல் பணிக்குழு 12 பேர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முதன்மை செயலாளர்கள் என 247 பேர் மட்டுமே அரங்கத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். மா.செ கூட்டத்தில் எம்.பி ரவிக்குமார் முதலில் பேசினார். 20 நிமிடம் பேசிய அவர் தமிழ்நாடு அரசியலை தீர்மானிக்கும் இடத்தில் திருமாவளவன் இருப்பதாகப் பேசி பெருமிதமடைந்தார். அதனை தொடர்ந்து பேசிய திருமாவளவன் 2 மணி உரையாற்றியிருக்கிறார்கள்.
எச்சரித்த திருமாவளவன்
நம்மிடம் பேசிய கொங்கு மண்டல மா.செ-க்கள் சிலர் “கூட்டத்தில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க வீழ்த்தப்பட வேண்டும் என மெலோட்டமாக பேசினார் திருமா. ஆனால் 2026-இல் நாம் பலத்தை நிரூபிக்க வேண்டுமென்ற தொனியில் பல அறிவுரைகளை வழங்கினார். தேர்தல் ரீதியாக கட்சியை பலப்படுத்த பூத் அளவில் நிர்வாகிகளை நியமனம் செய்திட வேண்டும். அதே சமயம் கட்சியை அடிமட்டம் வரை கொண்டு சேர்க்கும் விதத்தில் கிளை நிர்வாகிகளை நியமித்திடுங்கள் என ஆணையிட்டார்.
தேர்தல் சமயத்தில் கூட்டணி கட்சிகளுக்கு அதரவாக அனைத்து மாவட்ட சிறுத்தைகளும் சீறிப்பாய வேண்டும். வரக்கூடிய தேர்தல்களில் அதிக எண்ணிக்கையில் தொகுதிகளை நாம் கேட்க வேண்டும் என்றால் பூத் வரை நாம் வலிமைபெற வேண்டும் ஆகவே பூத் கமிட்டி நிர்வாகிகளையும் கிளை அளவில் நிர்வாகிகளையும் ஆறு மாதத்துக்குள் கட்டமைக்க வேண்டும். உங்கள் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லையெனில் பதவி இருக்காது என்றவாறு எச்சரிக்கையும் விடப்பட்டது” எனச் சொல்லிவிட்டு சேரன் எக்ஸ்பிரஸை பிடிக்க கிளம்பினர் அந்த மா.செ-க்கள்.
நல்ல பெயரை வாங்க வேண்டும் பிள்ளைகளே!
நம்மிடம் பேசிய வட மண்டல மா.செ-க்களிடம் பேசியபோது “கட்சிக்காரர்கள் சிலர் சமூகத்தில் கட்சிக்கு அவப்பெயர்களை ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வருகிறது. புதிய மா.செ-க்கள் மிக கவனமாக செயல்பட வேண்டும். சமூகத்துடன் இணக்கமாகவும் நல்ல பெயருடனும் இருக்க வேண்டும் என கட்டளையிட்டாராம் திருமா. பதவியில் இருப்பவர்கள் இல்லாதவர்கள் என்றில்லாமல் கட்சியினருடன் நல்ல தொடர்பை ஏற்படுத்தி ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்” என்கிறார்கள்.
வட மாவட்டத்தில் கூடுதல் கவனம்!
”வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் வி.சி.க இரட்டை இலக்க எண்ணிக்கையில் போட்டியிடுவது கூட்டத்தில் பேச்சு அடிபட்டிருக்கிறது. அதற்கு மா.செ-க்களாகிய நீங்கள் தான் மாவட்ட அளவில் கட்சியை வலிமையாக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த தொகுதிகளில் பெரும்பாலானவையாக வட மாவட்ட தொகுதிகளை குறிவைக்கிறது வி.சி.க. ஆகவேதான் மா.செ கூட்டத்துக்கு வட மண்டல தேர்தல் பணிக்குழுவில் இருந்து 12 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அவர்களுக்கு பூத் கமிட்டி விவகாரங்களை அழுத்தமாக சொல்லியிருக்கிறார்கள்” என்றார்கள் கட்சி தலைமைக்கு நெருக்கமான சிலர்.
புதிய மா.செக்கள் மனம் வருந்தும் படியான சம்பவங்கள் சில நிகழ்ந்ததாகவும் சொல்கிறார்கள். `புதிய மா.செ-க்களுக்கு கட்சித் தலைவர் சான்றிதழ் வழங்குவார்’ என முன்பே அறிவித்திருந்த நிலையில், `திருமா டெல்லி விரைகிறார். சான்றிதழ் வழங்கும் ப்ளான் கேன்சல்’ என்றதும் வாடிபோயினராம் பலரும். மேலும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் புதிய மா.செ-க்களை அங்கே நிற்கக்கூடாது, இங்கே நிற்கக்கூடாதென, ஃபோனை கொடுங்கள், திருமா வருகிறார், பக்கத்தில் வரக் கூடாதென ஒரு பாடுபடுத்திவிட்டனர் என்கிறார்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிலர்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/vck-leader-tholthirumavalan-warns-partys-district-representatives-of-vck
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக