விழுப்புரம், மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலில் பட்டியல் சமூக மக்கள் சாமி தரிசனம் செய்வதற்கு மாற்று சமூக மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் 7-ம் தேதி, இந்த கோயிலுள்ளே சாமி தரிசனம் செய்வதற்கு சென்ற பட்டியலின இளைஞர், மாற்று சமூகத்தினரால் தாக்கப்பட்டதை தொடர்ந்து பூதாகரமான இந்த கோயில் விவகாரம், இன்று வரை தீர்வு காணப்படாமல் நீடித்து வருகிறது. இரு தரப்பிடமும், மாவட்ட நிர்வாகம் பலகட்ட அமைதி பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூக முடிவு எட்டப்படாமல் இருந்து வருகிறது.
இந்த நிலையில்தான், மேல்பாதி கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவி வருவதாகவும், இரு தரப்பும் போராட்டம் நடத்த இருப்பதாவும்; ஒரு தரப்பினர் அனுமதியின்றி ஆலய பிரவேசம் செய்ய இருப்பதாகவும், அதனை மற்றொரு தரப்பு பலமாக எதிர்க்க இருப்பதாகவும் மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீஸாருக்கு ரகசிய தகவல் சென்றுள்ளது. எனவே, சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படலாம் என கருதிய அப்போதைய விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், 145-வது சட்டப்பிரிவின் படி, கடந்த ஜூன் 7-ம் தேதி திரௌபதி அம்மன் கோயிலை பூட்டி 'சீல்' வைத்தார். மேலும், ஜூன் 9-ம் தேதி இருதரப்பினரும் தனது அலுவலகத்தில் ஆஜராகி, உரிய ஆவணங்களுடன் எழுத்துப்பூர்வ பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
அதன்படி, இருதரப்பினரும் ஆஜரான அந்த விசாரணை கூட்டத்திலும் சுமூக முடிவு எட்டப்படாமல் போகவே, மறு விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில்தான், கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் இடமாறுதல் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தின் புதிய கோட்டாட்சியராக பிரவீனாகுமாரி பொறுப்பேற்றார். இந்த மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் விவகாரம் குறித்து, துறை சார்ந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்த அவர், இரண்டாம் கட்ட விசாரணை ஜூலை 7-ம் தேதி நடைபெறும் என்றும், மாற்று சமூக தரப்பில் குறிப்பிட்ட சிலர் ஆஜராகும்படி சம்மன் மூலம் அழைப்பு விடுத்திருந்தார்.
அதன்படி, 7-ம் தேதி நேரில் ஆஜரான மாற்று சமூக மக்கள் தரப்பினரிடம், கோயில் விவகாரத்தில் தற்போதைய நிலைப்பாடு குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அப்போது, 'கோயில் பூட்டி சீல் வைக்கப்பட்ட உத்தரவை ரத்துசெய் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தங்கள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டு விசாரணையில் உள்ளது' என்பதனைப் பற்றிய தகவலை மாற்று சமூகமக்கள் தரப்பினர் முன்வைத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பட்டியலின மக்களுக்கான தரப்பு விசாரணையை நேற்றைய தினம்(10.07.2023) விழுப்புரம் கோட்டாட்சியர் நடத்தினர். கோயில் விவகாரத்தில் தங்களுடைய நிலைப்பாட்டை கோட்டாட்சியரிடம் தெரிவித்த பட்டியலின மக்கள் தரப்பினர், வெளியே வந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
பட்டியலின மக்கள் தரப்பு வழக்கறிஞர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கோயிலுக்குள் நுழைவது சம்பந்தமான பிரச்னையில், `சட்டப்படி அவர்களிடம் பேசி சுமூகமாக கோயிலுக்குள் அழைத்துச் செல்வது என முடிவு செய்திருக்கிறோம். அதை விரைவில் செய்து காட்டுகிறோம்’ என உறுதி அளித்திருக்கிறார் கோட்டாட்சியர். 'வரும் ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் எங்களை கோயிலுக்குள் அழைத்துச் செல்லுங்கள்' என அவரிடத்திலே நாங்கள் கோரிக்கை விடுத்திருக்கிறோம்.
ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் எங்களைக் கோயிலுக்குள் அழைத்துச் செல்லவில்லை என்றால், சாதியின் பெயரால் எங்களை இழிவுபடுத்தும் இந்து மதத்தினை விட்டு வெளியேறுவது என முடிவு செய்திருக்கிறோம். அதுமட்டுமின்றி, 1-ம் தேதி முதலே பட்டியலின மக்கள் குடியிருப்பு பகுதிகளில் கருப்பு கொடி ஏற்றுவது எனவும் முடிவு செய்திருக்கிறோம்" என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/the-sc-people-of-melpathi-said-that-if-they-are-not-allowed-inside-the-temple-they-will-leave-hindu-religion
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக