Ad

செவ்வாய், 11 ஜூலை, 2023

கனவு - 101 | புதுக்கோட்டை - வளமும் வாய்ப்பும்!

கொரோனா பேரிடரின்போது அத்தியாவசியப் பொருள்கள் பல அபரிமிதமாகத் தேவைப்பட்டன. ஆனால், அவற்றைவிட அதுவரை இந்த இரு பொருள்களுக்குப் பெரிய அளவில் வரவேற்போ, தேவையோ அதிகம் ஏற்பட்டிருக்கவில்லை. ஒன்று, முகக்கவசம். மற்றொன்று, மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் கையுறை. புதுக்கோட்டை மாவட்டத்தின் வளங்களில் ஒன்றான மரவள்ளிக்கிழங்கை மதிப்புக்கூட்டல் செய்து, மருத்துவமனைகள், ஆய்வகங்களில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் கையுறை (Single Use Hand Gloves) தயாரிக்கலாம்.

நோய் தொற்றுகளிலிருந்து பாதுகாப்பதில், பிளாஸ்டிக் கையுறைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சந்தையில் அவைதான் அதிக அளவில் விற்பனையாகின்றன. ஆனால், பிளாஸ்டிக் கையுறைகள் எளிதில் மக்காது. அதனால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதோடு, பிளாஸ்டிக் மாசுபாட்டையும் உருவாக்கிவிடுகிறது. இதைத் தவிர்க்கும் வகையில் பிளாஸ்டிக் கையுறைகளுக்கு மாற்றாக, மக்கும் தன்மையுள்ள கையுறைகளை மரவள்ளிக்கிழங்கிலிருந்து உருவாக்கி, அதற்கான தொழிற்சாலையை, புதுக்கோட்டையில் நிறுவலாம்.

Tapioca Natural Hand gloves

தடிமனைப் பொறுத்து ஓரிரு வருடங்களிலேயே மக்கும் பிளாஸ்டிக்குகளை உருவாக்கும் தொழில்நுட்பத்தை `இகோபிளாஸ்’ (Ecoplas) என்று அழைக்கிறார்கள். புதுப்பிக்கத்தக்க பொருள்களைக்கொண்டு இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மக்கும் பிளாஸ்டிக் கையுறைகளை தயாரிக்கலாம் என்பதால் இதனுடன் மரவள்ளிக்கிழங்கு மாவைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இதிலுள்ள ஸ்டார்ச், செல்லுலோஸ் ஆகியவற்றைச் சேர்த்து மக்கும் பிளாஸ்டிக் கையுறையைத் தயாரித்து, விற்பனை செய்யலாம்.

புதுக்கோட்டை மாவட்டத்தில், சுமார் 140 ஏக்கர் பரப்பளவில் மரவள்ளிக்கிழங்கு பயிரிடப்படுகிறது. ஏக்கர் ஒன்றுக்கு 15 டன் வீதம் ஆண்டொன்றுக்கு ஏறக்குறைய 2,000 டன் அளவுக்கு விளைச்சல் கிடைக்கிறது. இதிலிருந்து குறிப்பிட்ட சதவிகிதத்தைப் பெற்று, மக்கும் பிளாஸ்டிக் கையுறைகளைத் தயாரித்து, 200 கையுறைகள்கொண்ட ஒரு பெட்டியை, சுமார் 200 ரூபாய் என விலை நிர்ணயம் செய்து, விற்பனை செய்தால் ஆண்டொன்றுக்குப் பல கோடி ரூபாய் அளவுக்கு வருமான வாய்ப்பைப் பெறலாம்.

புதுக்கோட்டையில் வளங்களில் ஒன்றான முந்திரிப் பருப்பிலிருந்து கேஷ்யூ ஃப்ரோஸன் டெஸர்ட் (Cashew Frozen Dessert) தயாரிக்கலாம். பால் சுவையைப்போலவே, முந்திரிப்பருப்பிலிருந்து பெறப்படும் முந்திரிப் பாலும் சுவையானது. இந்த முந்திரிப் பாலிலிருந்து பெறப்படும் தயிரைப் பயன்படுத்தி, ஐஸ்க்ரீம் போன்றே காணப்படும் ஃப்ரோஸன் டெஸர்ட்டை (Frozen Dessert) உருவாக்கலாம். பால் மற்றும் பால் சார்ந்த பொருள்களை உண்ணாமல் தவிர்ப்பவர்களுக்கு இது ஒரு மாற்று உணவுப்பொருளாக அமையும்.

மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் ஃப்ரோஸன் டெஸர்ட்டுகளில் பெரும்பாலானவற்றை வெஜிடபிள் ஆயிலிலிருந்து (Vegetable Oil) தயாரிக்கிறார்கள். இந்த வகை ஆயிலில் கொழுப்பும், கொழுப்பு அமிலங்களும் அதிக அளவில் இருப்பதால், அவை உடல் நலனுக்கு உகந்தவை அல்ல. ஆனால், முந்திரிப் பாலைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட 150 கிராம் ஃப்ரோஸன் டெஸர்ட்டில் கலோரிகள், கொழுப்பு, புரதம், கார்போஹைட்ரேட், சர்க்கரை, நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் உள்ளிட்டவை அடங்கியிருக்கின்றன.

Cashew Frozen Dessert

முந்திரியை நீரில் நன்கு ஊறவைத்து, நீரை வடிகட்டிய பின்னர் அதில் சிறிது நீர் சேர்த்து அரைத்தால் முந்திரிப் பால் கிடைக்கும். இத்துடன் தேவையான அளவுக்கு உப்பு, பாதாம் பருப்பு, வெண்ணிலா எக்ஸ்ட்ராக்ட் (Vanilla Extract) சேர்த்து, நன்கு அரைக்க வேண்டும். அரைத்த கலவையை வடிகட்டி, குளிரூட்டியில் (Freezer) சுமார் நான்கு மணி நேரம் வைத்தால் சுவையான கேஷிவ் ஃப்ரோஸன் டெஸர்ட் தயார். இத்துடன் உலர்ந்த திராட்சை, பழங்கள் போன்றவற்றையும் சேர்த்துக்கொண்டு சுவைக்கலாம். கேஷிவ் ஃப்ரோஸன் டெஸர்ட் பலரால் விரும்பி சாப்பிடப்படலாம் என்பதால், இதற்கான சந்தை வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, அதற்கான தொழிற்சாலையை புதுக்கோட்டை மாவட்டத்தில் நிறுவலாம்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் முந்திரி சாகுபடி சுமார் 13,000 ஏக்கர் பரப்பளவில் நடக்கிறது. ஏக்கர் ஒன்றுக்கு ஏறக்குறைய 95 டன் வீதம் ஆண்டொன்றுக்கு 12,35,000 டன் அளவுக்கு விளைச்சல் கிடைக்கிறது. இதிலிருந்து ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தைப் பயன்படுத்தி, கேஷிவ் ஃப்ரோஸன் டெஸர்ட் தயாரித்து, 150 கிராம் கொண்ட ஒரு பேக்கின் விலையை 400 என விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்தால், ஆண்டொன்றுக்கு, பல கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்டலாம்.

புதுக்கோட்டையில் சுமார் 70-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இயங்கிவருகின்றன. இத்தகைய கல்லூரிகளில் ஓரிரு கல்லூரிகளில் மட்டுமே தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பிரிவு இருக்கிறது. இது போதாது. பெரும்பாலான கல்லூரிகளில் தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பிரிவை உருவாக்குவது அவசியம். அப்போதுதான் மாணவர்களை வேலை தேடுபவர்களாக மட்டுமன்றி, வேலைகளை உருவாக்குபவர்களாகவும் மாற்ற முடியும்.

தொழில்முனைவு (Startup) குறித்த மனப்பான்மையை வளர்க்கவும், அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், படைப்பாற்றலை மேம்படுத்தவும், புதுமையான சிந்தனைகளை ஊக்குவிக்கவும் அதன் வழியே மேம்பட்ட திறன்களை வளர்த்தெடுக்கவும் உருவாக்கப்பட்டதே தொழில்முனைவு மேம்பாட்டுப் பிரிவு. இது சுருக்கமாக ஈடி செல் (ED Cell) என அழைக்கப்படுகிறது.

Entrepreneurship Development Cell

இதில் கருத்தரங்குகள் (Seminars), பயிலரங்குகள் (Workshops), உணவு விழா (Food Fest), இளம் தொழில்முனைவோருடன் உரையாடல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளின் வழியாக அவர்களது தொழில்முனைவு குறித்த ஆர்வம் மேம்படுத்தப்படுவதோடு, தகுதியான தொழில்முனைவோருக்கு தேவையான வழிகாட்டுதல் (Mentorship), நெட்வொர்க்கிங் வாய்ப்புகள் (Networking Opportunities), நிதியுதவி (Funding), பயிற்சித் திட்டங்கள் (Training Programmes) போன்றவையும் இந்த ஈடி செல் வழியாக வழங்கப்படும். இதன் வழியே வெற்றிகரமான தொழில்முனைவோரை உருவாக்கி, புதுக்கோட்டை மாவட்டத்தின் பொருளாதார மேம்பாட்டுக்கு வழியமைக்கலாம்!

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்

(MSME - Micro, Small and Medium Enterprises)

உலகம் முழுவதும் அசைவ உணவுகள்மீது நுகர்வோரின் தாக்கம் அதிகரித்துவிட்டதால், அதற்கேற்றாற்போல, ஆடு,கோழி, மீன் உள்ளிட்ட பல்வேறு வகையான உயிரினங்களை அதிக அளவில் உற்பத்தி செய்யவேண்டிய தேவை உற்பத்தியாளர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. அதன் விளைவாக, அவற்றை அதன் வகைக்கேற்ப வளர்க்கும் தொழிலும் சூடுபிடித்திருக்கிறது. குறிப்பாக, கோழி வளர்ப்பு என்பது இரும்புக்கூண்டால் அல்லது கூரையால் மூடப்பட்ட பண்ணைகளில் முட்டைக்காகவும், இறைச்சிக்காகவும் தனித்தனியே வளர்க்கப்படுகிறது. இவ்வாறு வளர்க்கப்படும் கோழிகள் பல்வேறு உடல், மனநல பாதிப்புக்கு உள்ளாவதோடு, பராமரிப்புச் செலவினங்களும் அதிகம் என்கின்றன ஆய்வுகள்.

குறிப்பாக, இரும்புக்கூண்டுகளில் அடைக்கப்படுவதால் கோழிகளின் இயல்புகளான சுற்றித் திரிதல், அழுக்கேறுதல், அடைகாத்தல் உள்ளிட்ட பல செயல்கள் தடைப்படுவதால் அவை மன அழுத்தத்துக்கு உள்ளாகின்றன. இயல்பாக ஒரு கோழி வளர 10 சதுர அடியிலிருந்து 20 சதுர அடி வரை தேவைப்படலாம். ஆனால், இவற்றில் 5 சதவிகித அளவுக்குக்கூட பண்ணைகளில் இடம் ஒதுக்காததால், நோய்த்தொற்றுக்கு உள்ளாகி, பொருளிழப்புக்கு உற்பத்தியாளர்கள் ஆளாகிறார்கள்.

ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகள், கூண்டுகளில் வளர்க்கப்படும் கோழிப் பண்ணைகளுக்குத் தடை விதித்திருக்கின்றன. மாற்றாக, திறந்தவெளிகளில் கோழி வளர்ப்பை (Free-Range Poultry Farming) ஊக்குவிக்கின்றன. திறந்தவெளி கோழி வளர்ப்பு என்பதும் ஒரு விவசாய முறையே. இயற்கையான சூழலில் கோழிகளின் இயல்பான நடத்தையை அனுமதிக்கும்போது, ஆரோக்கியமான இறைச்சி மற்றும் முட்டை கிடைக்கலாம். இவ்வாறு வளர்க்கப்படும் கோழிகளின் புரதம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் போன்ற ஊட்டச்சத்துகள் ஆகியவற்றை நுகர்வோருக்கு முழுமையாகக் கிடைக்கச் செய்யலாம்.

Free-Range Poultry Farming

புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 2,00,000 ஏக்கர் அளவுக்கு நெல் பயிரிடப்படுகிறது. அண்மைக்காலமாக, நெல் விளைச்சல் என்பது குறைந்துகொண்டேவருகிறது. பல இடங்களில் விளைச்சல் நிலங்கள் பயிரின்றி காய்ந்துகிடக்கின்றன. இத்தகைய இடங்களில் நெல் விளைச்சலுக்கு பதிலாக, திறந்தவெளி கோழிப் பண்ணைகளை உருவாக்கலாம். நுகர்வோர் மத்தியில் ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்வு, திறந்தவெளி கோழிப் பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு நல்ல சந்தை வாய்ப்பை உருவாக்கலாம்.

இந்த முறையில் தயாராகும் கோழிகள், ஆண்டுக்கு 350 முட்டைகள் வரை தருகின்றன. 6 முட்டைகள்கொண்ட ஒரு பாக்கெட்டின் விலை சந்தையில் 140 ரூபாய். ஒரு கிலோ கோழியின் விலை 475 ரூபாய் என விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்யப்படுகின்றன என்பதால், திறந்தவெளி கோழி வளர்ப்பின் வழியே ஆண்டொன்றுக்கு பல கோடி ரூபாய் அளவுக்கு வருமானத்தை அள்ளலாம்.

(இன்னும் காண்போம்)



source https://www.vikatan.com/business/economy/kanavu-series-by-suresh-sambandam-episode-101-pudukkottai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக