Ad

வெள்ளி, 28 ஜூலை, 2023

அடுத்து மும்பையில்... வேகமெடுக்கும் ’இந்தியா’ கூட்டணியின் அடுத்த மூவ் என்ன?!

மத்தியில் இருக்கும் மோடி ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்று பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ‘இந்தியா’ கூட்டணியைக் கட்டமைத்திருக்கின்றன. முதல் கூட்டத்தை பட்னாவிலும், இரண்டாவது கூட்டத்தை பெங்களூருவிலும் நடத்திய எதிர்க்கட்சிகள், மூன்றாவது கூட்டத்தை வரும் ஆகஸ்ட் 25, 26 ஆகிய தேதிகளில் மும்பையில் நடத்தவிருக்கின்றன.

பாட்னா எதிர்க்கட்சிகள் கூட்டம்

வெறுமனே கூட்டம் போட்டு விவாதிப்பது, கலைந்து செல்வது என்றல்லாமல், முக்கியமான முடிவுகளையும் அவர்கள் எடுத்திருக்கிறார்கள். ‘இந்தியா’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள நிதிஷ்குமார் முதல்வராக இருக்கும் பீகாரிலும், காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் கர்நாடகாவிலும் கூடிய எதிர்க் கட்சிகள், இந்த முறை ‘இந்தியா’ கூட்டணி ஆட்சியில் இல்லாத மும்பையில் கூடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மும்பை கூட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவும், சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியும் ஏற்பாடுகளைச் செய்கின்றன.

சிவசேனாவை உடைத்து, தேசியவாத காங்கிரஸை உடைத்து மகாராஷ்டிராவில் பா.ஜ.க அதிகாரத்தில் இருக்கும் நிலையில், அந்த மாநிலத்தின் தலைநகரில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் 26 கட்சிகளின் தலைவர்கள் கூடவிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இரண்டாவது கூட்டத்திலேயே தங்கள் கூட்டணிக்கு ‘இந்தியா’ என்று பெயர் வைத்து, ஆளும் தரப்புக்கு அதிரவைத்தவர்கள், மும்பை கூட்டத்தில் பல முக்கிய முடிவுகளை எடுக்கப்போகிறார்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

பெங்களூரு கூட்டத்தில் சோனியா காந்தி, ஸ்டாலின், மம்தா பானர்ஜி

மும்பை கூட்டத்தில் தங்கள் கூட்டணிக்கான குறைந்தபட்ச பொதுத்திட்டத்தை உருவாக்க இந்தியா அணி திட்டமிட்டுவருகிறது. அதற்காக, இந்தியா அணியில் இருக்கும் கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவும் அமைக்கப்படவிருக்கிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வைத் தோற்கடிப்பதே அவர்களின் முக்கிய நோக்கம். அதனால்தான், பல்வேறு முரண்டுபாடுகளைக் கொண்டிருந்தபோதிலும், இந்த கட்சிகள் ஓரணியில் திரண்டிருக்கின்றன.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர்களுக்கு எதிராக ஒவ்வொரு தொகுதியிலும் எதிர்க் கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது என்கிற உத்தி குறித்து இந்தியா அணி ஆலோசித்துவருகிறது. அது பற்றிய முக்கிய ஆலோசனை மும்பையில் நடக்கவிருக்கும் கூட்டத்தில் நடைபெறும் என்கிறார்கள்.

ராகுல் காந்தி

இது பற்றிய முடிவுகளை ஒரே கூட்டத்தில் எடுத்துவிட முடியாது என்றும், இரண்டு கூட்டங்களிலாவது இது பற்றி பேச வேண்டியிருக்கும் என்றும் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறியிருக்கிறார்.

‘இந்தியா’ என்று எதிர்க்கட்சிகள் கூட்டணியை பெயரை மோடி கடுமையாக விமர்சித்திருக்கிறார். இந்தியா என்ற பெயர் இந்தியன் முஜாகிதீன், கிழக்கிந்திய கம்பெனி, பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா ஆகிய பெயர்களிலும் இருக்கிறது என்று சாடினார் பிரதமர். இந்தியா என்ற பெயரே ஆளும் பா.ஜ.க-வை அச்சமடையச் செய்திருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் பிரதமரின் பேச்சு என்று எதிர்க்கட்சிகள் பதிலடி கொடுத்தன.

சீதாராம் யெச்சூரி

‘இந்தியாவின் விடுதலைக்காக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், இந்திய தேசிய ராணுவத்தை ஆரம்பித்தார். அது பிரதமர் மோடிக்கு தெரியுமா?’ என்று ட்வீட் செய்தார் சி.பி.எம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி. ‘இந்தியா’வுக்கு எதிராக மோடி பேசுகிறார் என்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் பேச ஆரம்பித்தனர். ‘இந்தியாவைக் காக்க இந்தியா அணியை உருவாக்கியிருக்கிறோம் என்றார் முதல்வர் ஸ்டாலின். இந்த நிலையில், ஆளும் பா.ஜ.க-வுக்கு அரசியல் ரீதியாக பல சவால்களை ஏற்படுத்தும் வகையில் மும்பை கூட்டத்தில் இன்னும் பல முடிவுகளை எடுப்போம் என்கிறார்கள் `இந்தியா’ அணி தலைவர்கள்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/what-is-the-next-move-of-india-opposition-alliance

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக