புதுக்கோட்டை மாவட்டத்தில், நாம் தமிழர் கட்சி சார்பில், பல்வேறு இடங்களில் கட்சிக்கொடி ஏற்றும் நிகழ்வுகள் நடைபெற்றது. இதில், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். முன்னதாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சீமான், ``பா.ஜ.க-வில் இணைவதற்கு ஹெச்.ராஜா எத்தனை முறை அழைத்தாலும் `வாய்ப்பில்லை ராஜா..' என்பதுதான் என்னுடைய பதில். அவர் அன்போடு அழைத்தாலும், நட்பு என்பது வேறு, அரசியல் நிலைப்பாடு என்பது வேறு. அவர் என்னை அழைப்பதை, எங்களது வளர்ச்சியைக் காட்டுவதாகத்தான் நாங்கள் பார்க்கிறோம். `தமிழ் தேசியம் வெற்றி பெறாது, தோற்றுப்போகும்' என்று திருமாவளவன் சொல்வதற்கு எந்த உரிமையும் இல்லை. தமிழ் தேசியம் குறித்து அவரிடமிருந்துதான் நாங்கள் கற்றுக்கொண்டோம். அவரது மாணவர்கள் நாங்கள். அவர் தோற்றுப்போனதால், நாங்களும் தோற்றுப்போவோம் என்பது தவறான பார்வை. எப்போதும், ஆசிரியர்களால் ஓடி வெற்றி பெற முடியாது. மாணவர்களால்தான் வெற்றி பெற முடியும்.
வெற்றி பெற்றுக் காட்டுவோம். தமிழக அரசிடம் யாரும் ரூ.1,000 உரிமைத் தொகை கொடுங்கள் என்று கேட்கவில்லை. அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ.1,000 உதவித் தொகை என்று தேர்தலுக்கு முன்பாக அறிவித்துவிட்டு, இப்போது விதிமுறைகளை விதிக்கின்றனர். இது மிகப்பெரிய கொடுமை. டி.ஐ.ஜி விஜயகுமார் மன அழுத்தத்தின் காரணமாகவே உயிரிழந்திருக்கிறார். 6 மாதங்கள் விடுமுறை கேட்டிருக்கிறார், கொடுக்கவில்லை. அந்த அழுத்தத்தின் காரணமாக உயிரிழந்திருக்கிறார். இது போன்ற ஒரு சம்பவம் மீண்டும் நடக்காமல் இருக்க, காவல்துறையினருக்கு சுழற்சிமுறையில் விடுமுறை அளிக்க வேண்டும்.
பேனா சிலை கடற்கரையில் அமைக்கப்பட்டால், கண்டிப்பாக அதனை உடைத்தெறிவோம். அதில், எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. சென்னை சிறுவன் கை இழந்த விவகாரத்தைப் பொறுத்தவரை, சுகதாரத்துறை அமைச்சரின் பதில், பொறுப்பற்ற ஆணவமான பதில். இழப்பீடு கொடுத்து வருத்தம் தெரிவிக்க வேண்டும். இனிமேல் இதுபோன்று நடக்காது என்று உறுதி கொடுக்க வேண்டும். அதே நேரத்தில் அரசு மருத்துவர்கள் திறமையற்றவர்கள் என்று சொல்லவில்லை. இந்த விவகாரத்தில், மருத்துவர்களின்றி செவிலியர்கள்தான் மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்ததாகக் கூறுகின்றனர். அதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரத்தைப் பொறுத்தவரை ஜனநாயகப் படுகொலை என்றுதான் சொல்ல வேண்டும். கலைஞருக்கு ஒரு `பராசக்தி' என்றால், மாரி செல்வராஜுக்கு ஒரு `மாமன்னன்' என்றுதான் சொல்ல வேண்டும். இதில், எங்கு உதயநிதி வருகிறார். கதை எழுதியவருக்குத்தானே முதல் உரிமை கொடுக்க முடியும். இதுபோன்ற பட்டியலின மக்கள் பிரச்னைகளைப் பேசும் படங்கள் இன்னும் நிறைய வர வேண்டும். கிருஷ்ணசாமி இதுபோன்ற படங்கள் வரக் கூடாது என்று சொல்வதற்கு அவருக்கு என்ன தார்மீக உரிமை இருக்கிறது. `தேவர் மகன்' படம் வரும்போது எதிர்த்தது, `விருமாண்டி' படம் வரும்போது அந்த படத்திற்கு `சண்டியர்' என்ற பெயரை வைக்க விடாமல் தடுத்ததும், `கொம்பன்' படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததும் இவர்தான். இதெல்லாம் தேவையற்றது" என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/ntk-chief-co-ordinator-seeman-met-press-and-spoke-about-various-things
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக