Ad

செவ்வாய், 18 ஜூலை, 2023

ஒன் பை டூ: ̀தேர்தலுக்காக ராணுவ வீரர்களைக் கொன்றது பா.ஜ.க!' - ஆ.ராசாவின் விமர்சனம் சரியா?

பழ.செல்வகுமார், மாநில துணைச் செயலாளர், சுற்றுச்சூழல் அணி, தி.மு.க

``உண்மையை உரக்கச் சொல்லியிருக்கிறார் ஆ.ராசா... புல்வாமா சம்பவம் நடந்த சமயத்தில் அன்றைய ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக், ‘என்னைப் பேசவிடாமல் வாயை அடைத்துவிட்டார்கள்’ என்று வெளிப்படையாகப் பேசியிருந்தார். இதிலிருந்தே ராணுவ வீரர்கள் மரணத்துக்குக் காரணம் யார் என்பது தெளிவாகத் தெரிகிறதே... தேர்தல் வந்துவிட்டால், பாகிஸ்தானுக்கு எதிராக வரிந்துகட்டும் மோடியும் அமித் ஷாவும், எல்லையில் சீனா நடத்தும் அத்துமீறல், தாக்குதல் குறித்து வாயே திறப்பதில்லை... ஏன்? காரணம், இவர்கள் பேசுவதெல்லாம் தேசத்தின்மீதான அக்கறையில் அல்ல... எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும், மதவாத அரசியலை நாடெங்கும் நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்காக ராணுவ வீரர்கள் உயிரிழப்பு மட்டுமல்ல, வேறெந்த எல்லைக்கும் செல்வார்கள். வேண்டுமானால் பாருங்கள், ஆ.ராசாவின் கருத்தையும், ‘ராணுவ வீரர்களை அவமதித்துவிட்டார்’ என்று திரிப்பார்கள் பா.ஜ.க-வினர். 2024 தேர்தலின்போது, தேசபக்தி என்ற பெயரில் மக்களைத் தூண்டி அவர்களின் வாக்குகளை அறுவடை செய்ய என்னவெல்லாம் செய்யப்போகிறார்கள் என நினைத்தால் இப்போதே அச்சம் மேலோங்குகிறது.’’

பழ.செல்வகுமார், நாராயணன் திருப்பதி

நாராயணன் திருப்பதி, மாநில துணைத் தலைவர், பா.ஜ.க

``மிக மோசமான, கண்டிக்கத்தக்க கருத்து. தூத்துக்குடியில் மக்களைத் தூண்டிவிட்டு 13 பேர் உயிரிழக்கக் காரணம் தி.மு.க-தான் என்று சொல்லலாமா... நெடுவாசல் தொடங்கி பல்வேறு போராட்டங்களைக் கிளப்பி, பதற்றமான சூழலை தமிழ்நாட்டில் உருவாக்கியது தி.மு.க-தான் என்று நாமும் பதிலுக்குக் கேள்விகளை எழுப்ப முடியும். எப்போதும் நேர்மையான பாதையில் அரசியலை முன்னெடுக்கும் கட்சி பா.ஜ.க. நாங்கள் எந்தக் காலத்திலும் தரம் தாழ்ந்து அபாண்டமான குற்றச்சாட்டுகளை முன்வைக்க மாட்டோம். ஆனால், கீழ்த்தரமான அரசியல்தான் தி.மு.க-வினரின் அடையாளம் என்பதை இந்தக் கருத்தின் மூலமாக மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார்கள். முன்பு தி.மு.க-வினர் அமைதிப்படையினரை இழிவு படுத்தினார்கள். இப்போது நாட்டுக்காகத் தங்களின் இன்னுயிர்களைத் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் மரணத்தைக் கொச்சைப்படுத்துகிறார்கள். அதுவும் முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர் இப்படியான ஒரு மலிவான கருத்தைச் சொல்லியிருப்பது, அவரின் மோசமான குணத்தைக் காட்டுகிறது. ஆ.ராசாவின் மோசமான, பொறுப்பற்ற பேச்சு 2024 மக்களவைத் தேர்தலில் அவர்களுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.’’



source https://www.vikatan.com/government-and-politics/politics/discussion-about-a-raja-comments-about-bjp

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக