Doctor Vikatan: என் தோழியின் ஆண் குழந்தைக்கு 2 வயதாகிறது. அவனுக்கு ரத்தம் உறையாத பிரச்னை இருப்பதாக மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள். இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு உண்டா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ரத்தவியல் மற்றும் ரத்தப்புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அருணா.
ரத்தம் உறையாத தன்மையால் ஏற்படுவது 'ஹீமோஃபீலியா' எனப்படும் ஒருவித பிரச்னை. ஆண்களை மட்டுமே பாதிக்கக்கூடிய நோய் இது. இது தவிர மூட்டுகளில் ரத்தம் சேரும் 'ஹீம்ஆர்த்ரோசிஸ்' என்றொரு பாதிப்பும் உண்டு. லேசாக அடிபட்டால்கூட ரத்தக்கட்டு ஏற்படும்போதும், பல் பிடுங்குவது, ஆணுறுப்பு முன்தோல் நீக்க அறுவைசிகிச்சை மாதிரியான எளிமையான சிகிச்சைகளின்போதும் ரத்தம் உறையாமல் வெளியேறுவதைப் பார்த்துதான் பெரும்பாலும் இந்த நோய் கண்டுபிடிக்கப்படுகிறது.
பெரும்பாலும் ஒரு வயதிலோ, இரண்டு வயதிலோ இந்தப் பிரச்னை தெரிய வரும். இதை 'தீவிர ஹீமோஃபீலியா' என்கிறோம். ஃபேக்டர் 8 அல்லது ஃபேக்டர் 9 என்கிற குறிப்பிட்ட புரதக்குறைபாடு காரணமாக பிறவியிலேயே இந்தப் பிரச்னை பாதிக்கிறது. இந்தப் பிரச்னைக்கு இன்று நல்ல சிகிச்சைகள் உள்ளன. ரத்தத்தை உறையச் செய்கிற நவீன மருந்துகள் பரவலாகக் கிடைக்கின்றன.
இது தவிர தட்டணுக்கள் குறைவதால் ஏற்படுகிற 'இம்யூன் த்ராம்போசைட்டோபீனியா' (Immune thrombocytopenia) என்கிற பிரச்னை திடீரென பாதிக்கலாம். உடலில் ஏற்படுகிற சாஃப்ட்வேர் பிரச்னை போன்றது இது. அதாவது குறிப்பிட்ட காலம்வரை உடல் சீராக இயங்கிக் கொண்டிருந்திருக்கும். திடீரென ஏற்பட்ட வைரஸ் தொற்று காரணமாக வைரஸுக்கும் தட்டணுக்களுக்குமான குழப்பம் நிகழ்ந்து, உடலானது வைரஸை அழிப்பதற்கு பதிலாக தட்டணுக்களை அழிக்கத் தொடங்கும் . குழந்தைகளை பாதித்தால் இந்தப் பிரச்னை வந்த ஒரு வருடத்துக்குள் சரியாக 80 சதவிகிதம் வாய்ப்புகள் உண்டு. அதுவே பெரியவர்களைப் பொறுத்தவரை பாதிப்பு குணமாக சில வருடங்கள் ஆகலாம்.
இவை தவிர பிறவியிலேயே பாதிக்கிற இன்னொரு பிரச்னை, புரதச்சத்துக் குறைபாடு காரணமாக வரும் 'வான் வில்லிபிராண்டு' (Von Willebrand disease) எனப்படும் நோய். இதில் பல் துலக்கும்போது ரத்தக்கசிவு, மூக்கிலிருந்து ரத்தக்கசிவு, பீரியட்ஸின்போது அதிக ரத்தக் கசிவு, மலம் கழிக்கும்போது ரத்தக்கசிவு போன்றவை இருக்கலாம். இதற்கும் ரத்தத்தை உறையச் செய்கிற மருந்துகள் இன்று கிடைக்கின்றன. எனவே உங்கள் தோழியின் குழந்தைக்கு ஏற்பட்டிருப்பது எந்த மாதிரியான பாதிப்பு என்று பார்த்து அதற்கேற்பதான் மருத்துவர் சிகிச்சைகளைப் பரிந்துரைத்திருப்பார். கவலை வேண்டாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
source https://www.vikatan.com/health/doctor-vikatan-can-blood-clotting-problem-also-affect-the-newborn-baby
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக