விருதுநகர் மாவட்டம், நல்லமநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ், தி.மு.க மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளராக உள்ளார். இவருடைய தாய்மாமா ராஜகோபால் (வயது 74), ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையம் அருகே நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் ராஜகோபால் குடும்பத்துக்குச் சொந்தமான ரூ.25 கோடி மதிப்பிலான சொத்துகளை சட்டவிரோதமாக ஜெயபிரகாஷ் அபகரிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
இதையறிந்த ராஜகோபால், தன்னுடைய மகள் ரேவதி மூலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையின்போது, ஜெயபிரகாஷ் அபகரிக்க முயன்ற சொத்துக்கு 13 பேர் வாரிசுகளாக இருப்பதாக கோர்ட்டில் ராஜகோபால் தரப்பில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜெயபிரகாஷ், தன்னுடைய தம்பி பாலாஜி மற்றும் மேலும் சில அடியாட்களுடன், தாய்மாமா ராஜகோபாலின் கடைக்குள் புகுந்து அவரைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறார். இதைத் தொடர்ந்து அவரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்ற முயன்றபோது அவர்களின் பிடியிலிருந்து தப்பிய ராஜகோபால், அருகேயுள்ள காவல் நிலையத்துக்குள் புகுந்து தஞ்சமடைந்திருக்கிறார். இதையடுத்து விஷயம் போலீஸாருக்குத் தெரியவரவும், தி.மு.க நிர்வாகி ஜெயபிரகாஷ், அவரின் தம்பி பாலாஜி மற்றும் உடன்வந்த நபர்களையும் எச்சரித்து போலீஸார் அனுப்பினர்.
மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக, ராஜகோபால் அளித்த புகாரின்பேரில், வழக்கு பதிவுசெய்த போலீஸார் சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். சினிமா பாணியில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் முதியவரைத் தாக்கி காரில் கடத்தமுயன்ற சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
source https://www.vikatan.com/crime/police-filed-case-against-a-dmk-cadre-who-try-to-kidnap-an-elder-man-in-a-dispute
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக