Ad

சனி, 29 ஜூலை, 2023

``விவசாயிகளை முன்னிறுத்தி, ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது!" - கரூரில் அமைச்சர் மனோ தங்கராஜ்

கரூர் மாவட்டம், குளித்தலை அருகேயுள்ள வல்லக்குளம், திருமலைநாதன்பட்டி, கிருஷ்ணராயபுரம், வரவனை, மஞ்சநாயக்கன்பட்டி உள்ளிட்டப் பகுதிகளில் ஆவின் பால் குளிர்விப்பு நிலையங்களை தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று துவக்கி வைத்தார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``அரசு துறை நிறுவனமான ஆவின் பால் நிறுவனத்தில் பல்வேறு முன்னெடுப்புகள் தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி, விவசாயிகளின் கால்நடை எண்ணிக்கையை பெருக்கி சீரான வருவாய் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விவசாயிகளை முன்னிறுத்தி ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

பேட்டியளிக்கும் மனோ தங்கராஜ்

கரூர் மாவட்டத்தில் மாடுகள் வளர்ப்பதற்கு நல்ல வாய்ப்புகள், சூழல்கள் இருக்கின்றன. எனவே, கரூர் மாவட்டத்தில் ரூபாய் ஒரு கோடியே 6 லட்சம் மதிப்பீட்டில் நான்கு குளிரூட்டப்பட்ட பால் நிலையங்கள் ஆவின் சார்பில் இன்று துவக்கப்பட்டுள்ளன. கரூர் தோரணக்கல்பட்டி பகுதியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில், கரூர் மாவட்டத்தில் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் ஆவின் நிறுவனத்தில் சுமார் 50,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட பால்பண்ணை அமைக்கும் பணி நடைபெற்று வருவதை ஆய்வுசெய்தோம். தமிழகத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்களுக்கு தினசரி வழங்கும் பாலின் தரத்தை நிர்ணயம் செய்து, அதற்கான விலையை வழங்கி வருவது நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. கூட்டுறவு சங்கங்களின்கீழ் செயல்படும் பால் கொள்முதல் நிலையங்களுக்கு போதிய இயந்திரங்கள் இதற்காக வழங்கப்பட்டுள்ளன.

அதேபோல், கரூர் மாவட்டத்தில் குறிப்பாக அனைத்து பால் கொள்முதல் நிலையங்களுக்கும் தரத்தை அளவீடு செய்யும் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் இது விரிவுபடுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் விரைவாக பயன்பெறும் வகையில் பால் கொள்முதல் நிலையங்களில் 10 நாள்களில் பண பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது. இது எந்த ஆட்சியிலும் முன்னெடுக்கப்படாத நடவடிக்கை என்பதால், விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பு ஆவின் நிறுவனத்துக்கு கிடைத்துள்ளது. தனியார் நிறுவனங்களுக்கு இணையாக போட்டி போட்டு தரமான பால் மற்றும் பால் உற்பத்தி பொருட்களை ஆவின் நிறுவனம் வழங்கி வருகிறது. தமிழகத்தின் பால் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சென்னையில் மட்டும் நடப்பு மாதத்தில் 50,000 லிட்டர் கூடுதல் பால் கொள்முதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பேட்டியளிக்கும் மனோ தங்கராஜ்

கடந்த இரண்டு மாத கால தொடர் நடவடிக்கையால் 3.5 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் அதிகரித்துள்ளது. பால் உற்பத்தியைப் பெருக்குவதற்கு கடனாக வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருகிறது. ஆவின் நிறுவனம், கலப்படமில்லாத 100 சதவீத சுத்தமான பாலை வழங்கி வருகிறது. ரசாயன கலப்புக்கு ஆவின் நிறுவனத்தில் வாய்ப்பில்லை. எனவே, விற்பனை சந்தையில் ஆவின் பால் தரத்திலும் விலையிலும் தனியார் பால் நிறுவனங்களுக்கு போட்டியாக உள்ளது. தீபாவளி பலகாரங்கள் விற்பனை செய்வதற்கு ஆவின் நிறுவனம் தயாராகி வருகிறது. தரமான பலகார வகைகள் சுத்தமான நெய்யில் வழங்குவதற்கு ஆவின் நிறுவனத்தில் எந்த தவறுகளும், குறைபாடுகளும் ஏற்படாத வகையில் தயாரிக்கப்பட்டு வருகிறது" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/governance/minister-mano-thangaraj-met-press-people-and-spoke-about-aavin-in-karur

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக