தீபாவளிக்கு என்ன புடவை வாங்கினீர்கள்? என்ன நிறம்?
வெள்ளையில் ஜரிகை போட்ட பட்டுப் புடவை.
உங்களுக்கு ரேஸுக்குப் போகும் பழக்கம் உண்டா?
ஒரே ஒரு முறை போயிருக்கிறேன். ரேஸ் ஆட அல்ல; ‘ஆயிரம் பொய்’ வெளிப்புறக் காட்சி ஒன்றை அங்கு படமாக்கினார்கள். அதற்காகப் போனேன்.
ராஜ்ஸ்ரீ, ஜெயஸ்ரீ, விஜயஸ்ரீ என்று பல ‘ஸ்ரீ’கள் இருக்கிறார்களே, நீங்களும் உங்கள் பெயரில் ஏன் ஒரு ‘ஸ்ரீ’யை சேர்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?
என் சொந்தப் பெயர் ரத்னகுமாரி. வாணிஸ்ரீ பிலிம்ஸ் என்ற தயாரிப்பாளர்களின் படத்தில் நடிக்கும் போதுதான் அவர்கள் என் பெயரை வாணிஸ்ரீ என்று சுருக்கி மாற்றி விட்டார்கள். அப்போது எனக்கு இந்தப் பெயர் பிடிக்கவே இல்லை. இப்போது... என்ன செய்வது?
குடும்பக் கட்டுப்பாட்டைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நம் நாட்டுக்கு மிக மிகத் தேவை என்று தான் நினைக்கிறேன்.
உங்களுக்கு சமையல் செய்யத்தெரியுமா? மைசூர் போண்டா செய்ய கடலை மாவு உபயோகிப்பார்களா? பயத்தம்மாவு உபயோகிப்பார்களா?
தெரியும்! இரண்டும் இல்லை. உளுந்தை அரைத்துத்தான் போண்டா செய்வார்கள். பயத்தம் மாவு, இஞ்சி எல்லாம் போட்டு ‘புணுக்குலு’ என்று போண்டா போன்ற ஒன்றை எங்கள் ஊர்ப்பக்கம் செய்வார்கள்!
இந்தியப் படங்களில் முத்தமிடும் காட்சிகளை அனுமதிக்கலாம் என்று ஒரு பேச்சு அடிபடுகிறதே. இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
என்னைப் பொறுத்த வரையில் நான் அதை வரவேற்கவில்லை. ஸ்விம்மிங் ஸூட்டையும், ஜீன்ஸையும் திரைப்படங்களில் நுழைய விட்டதே தவறு என்று நான் நினைக்கிறேன்.
உங்கள் பிறந்த தேதி, வருடம் நினைவிருக்கிறதா?
ஆகஸ்ட் மூன்றாம் தேதி. 1946ம் வருடம்
காதலுக்குப் பிறகு திருமணமா? திருமணத்திற்குப் பிறகு காதலா? இதில் எதை ஆதரிக்கிறீர்கள்?
நிச்சயமாக இரண்டாவதைத்தான்.
உடல் இளைக்க எது சிறந்த வழி?
சாப்பாட்டைக் குறைப்பதுதான்.
நடிகையர் திலகம் சாவித்திரியைப் போல நீங்கள் நடிப்பதாகச் சொல்கிறார்களே, அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ஆம்! நான் சாவித்திரியைப் போல நடிப்பதாகவும் சொல்கிறார்கள். மாலாசின்ஹாவைப் போல நடிப்பதாகவும் சொல்கிறார்கள். எனக்கென்று ஒன்றுமே இல்லையா?
அடுத்த மாதம் இதே தேதியில் நீங்கள் எந்த ஸ்டுடியோவில் இருப்பீர்கள் என்று உங்களால் ‘டக்’கென்று சொல்ல முடியுமா?
இன்றைக்கு என்ன தேதி? ஓ... மூன்றா...? அடுத்த மாதம் மூன்றாம் தேதி எந்த ஸ்டுடியோவிலும் இருக்கமாட்டேன். கே. பாலசந்தரின் டைரக்ஷனில் வளரும் ஒரு கலர் படத்திற்காக கோவாவில் இருப்பேன்.
உங்கள் வீட்டு போன் நெம்பர் என்ன?
இன்று வரை எங்கள் வீட்டிற்கு போன் கனெக்ஷன் வரவில்லை!
உங்களைப் பற்றி உங்கள் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் கேட்டால் என்ன சொல்லுவார்கள்?
ஓ.... நிறைய சொல்வார்கள்! கேட்டு ரகசியமாக எனக்கும் சொல்லுங்கள்!
சொந்தக் குரலில் பாடுவீர்களா?
வீட்டில்தான் பாடுவேன்! நான்கு பேர் கேட்டு கஷ்டப்படும்படி பாட மாட்டேன்!
கோவில்களுக்கோ அல்லது சினிமா தியேட்டர்களுக்கோ நீங்கள் யார் கண்களிலும் படாமல் போய் வந்தது உண்டா?
நாம் சாதாரணமாகப் போனால் யாரும் கண்டு பிடிக்கமாட்டார்கள். கொஞ்சம் மேக்கப் செய்து கொண்டு போனால்தான் கண்டு பிடித்து விடுவார்கள். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்கு நான் அடிக்கடி மேக்-அப் இன்றி போய் வருவேன். யாரும் கண்டு பிடிக்கவே மாட்டார்கள். சமீபத்தில் ‘அடிமைப் பெண்’ படத்திற்குப் போய் வந்தபோது ரசிகர்கள் என்னை அடையாளம் கண்டு பிடித்து, என் காரில் அன்பாக தாளம் போட ஆரம்பித்து விட்டார்கள்!
உங்களுக்கு எதைக் கண்டால் பயம்..? எலியா, கரப்பான்பூச்சியா...?
ஐயய்யோ! கரப்பான் பூச்சிதான்!
வர்த்தக ஒலிபரப்பு அளிக்கும் தேன் கிண்ணத்தில் எப்போது பங்கு பெறப் போகிறீர்கள்?
இது வரை பங்கு பெறவில்லை! இனி பங்கு கொள்ளக் கூடாது என்ற எண்ணமும் இல்லை!
நீங்கள் இதுவரை நடித்து வெளிவந்த படங்களில் உங்களுக்கு பிடித்த படம் எது?
எல்லாப் படங்களும் பிடித்தவை தான். ஆனால், தெலுங்கில் நான் நடித்த ‘பங்காரு பஞ்சரம்’ என்ற படத்தில் என் பாத்திரம் எனக்கு ரொம்ப பிடித்தமானது. அதுதான் தமிழில் ‘கை கொடுத்த தெய்வ’த்தில் சாவித்திரி அவர்கள் நடித்தது! உங்கள் வீட்டுக்குப் போன் வந்தபிறகு திடீரென்று டெல்லியிலிருந்து இந்திராகாந்தி அழைத்து “கலைத்துறைக்கு ஒரு மந்திரியாக உங்களைப் போடப்போகிறேன். வாணிஸ்ரீ, உடனே டெல்லிக்கு வாருங்கள்” என்று டெலி போனில் அழைத்தால் என்ன செய்வீர்கள்? “ராங் நம்பர் என்று சொல்லி வைத்து விடுவேன்...!
பேட்டி - பாலாபடங்கள் - சுந்தரம்
(கனவு கண்டேன் தோழி - வாணிஸ்ரீ என்ற தலைப்பில் 16.11.1969 தேதியில் ஆனந்த விகடன் இதழில் வெளியானது..)
source https://cinema.vikatan.com/tamil-cinema/an-exclusive-interview-vanisri
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக