Ad

புதன், 17 ஆகஸ்ட், 2022

``ஷிண்டே அணியில் சிக்கியுள்ள சிலர் எங்களை தொடர்பு கொண்டுள்ளனர்” - பற்ற வைக்கும் ஆதித்ய தாக்கரே?!

மகாராஷ்டிராவில் கடந்த மாத தொடக்கத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் சிவசேனா இரண்டாக உடைந்துள்ளது. அதிருப்தி கோஷ்டி தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒரு அணியும், உத்தவ் தாக்கரே தலைமையில் ஒரு அணியும் செயல்பட்டு வருகிறது. யாரின் அணி உண்மையான சிவசேனா என்ற போட்டி ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினரும் தேர்தல் ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றத்தை அணுகி இருக்கின்றனர். அதோடு இரு தரப்பினரும் தங்களின் செல்வாக்கை நிரூபிக்க பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அடிக்கடி இரு அணிகளும் மோதிக்கொள்கின்றன.

இதனிடையே, உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்தித்து பேசி வருகிறார். ஆதித்ய தாக்கரே நிருபர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், ``ஏக்நாத் ஷிண்டேயிடம் சிக்கிக்கொண்டுள்ள சிலர் எங்களை தொடர்பு கொண்டுள்ளனர். அமைச்சரவை விரிவாக்கத்திற்கு பிறகு அவர்கள் எங்களை தொடர்பு கொண்டு வருகின்றனர்.

எங்களது கதவு திறந்தே இருக்கிறது. யார் எப்போது வேண்டுமானாலும் எங்களிடம் வந்து சேரலாம். அங்கேயே இருக்க நினைப்பவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை சந்தியுங்கள். யார் உண்மையான முதல்வர் என்று இப்போது எல்லோருக்கும் தெரியும். அமைச்சரவை விரிவாக்கத்தில் மும்பையை சேர்ந்தவர்களோ, பெண்களோ அல்லது சுயேச்சைகளைகளோ இடம் பெறவில்லை” என்று ஆதித்ய தாக்கரே தெரிவித்தார்.

ஷிண்டே அணியில் இடம் பெற்று இருக்கும் எம்.எல்.ஏ.க்களில் பலர் அமைச்சர் பதவி கிடைக்காததால் மிகவும் அதிருப்தியில் இருக்கின்றனர். தற்போது முழு அளவில் அமைச்சரவை விரிவுபடுத்தப்படவில்லை. முழு அளவில் அமைச்சரவை விரிவுபடுத்தப்படும் போது வாய்ப்பு கொடுக்கப்படும் என்று கூறி அதிருப்தியாளர்களின் வாயை ஏக்நாத் ஷிண்டே மூடி இருக்கிறார். மற்றொரு பக்கம் அமைச்சரவையில் உள்துறை உட்பட முக்கிய துறைகள் அனைத்தும் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் அவர் முதல்வர் போன்று செயல்பட்டு வருவதாகவும் ஷிண்டே ஆதரவாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.



source https://www.vikatan.com/news/politics/some-people-caught-up-in-shiv-senas-shinde-faction-have-contacted-us-aditya-thackeray-says

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக