லட்சுமி ராமச்சந்திரன், மாநிலப் பொதுச்செயலாளர், காங்கிரஸ்
“வழக்கம்போல வாய்க்கு வந்ததையெல்லாம் பேசியிருக் கிறார். இந்த முறை பேசும்போது, `25 வருடங்களில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும்’ என்று பேசியிருக்கிறார். இவர்தான் கடந்த 2017-ம் ஆண்டு பேசும்போது, ‘ஒவ்வோர் ஆண்டும் இரண்டு கோடி இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும். 75-வது சுதந்திர தினம் கொண்டாடும்போது அனைத்து இந்தியர்களுக்கும் எல்லா வசதியுடனும்கூடிய வீடு வழங்கப்படும். விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும். புல்லட் ரயில் கொண்டுவரப்படும்’ என்றெல்லாம் பேசியிருந் தார். எல்லாம் சொல்வதோடு சரி; அதைச் செய்ய எந்த முன்னெடுப்பும் செய்வது கிடையாது. இந்தியாவை அதல பாதாளத்தில் தள்ளியிருக்கிறார்கள். பல்லாயிரம் கோடி கடன் வாங்கியவர்களை வெளிநாடுகளுக்குத் தப்பிக்க விட்டிருக்கிறார்கள். நாட்டின் சொத்துகள் அனைத்தையும் பெருமுதலாளிகளுக்குக் கொடுத்துக்கொண்டிருக்கும் இவர்களுக்கு வல்லரசு பற்றிப் பேச என்ன அருகதை இருக்கிறது... வரும் தேர்தலில் பா.ஜ.க-வுக்குப் பொதுமக்களே சரியான பாடம் புகட்டுவார்கள்.”
சி.சரஸ்வதி, சட்டமன்ற உறுப்பினர், பா.ஜ.க.
“உண்மையைச் சொல்லியிருக்கிறார். இந்தியாவை வல்லரசாக மாற்ற வேண்டும், உலக அரங்கில் இந்தியா முதன்மையான நாடக மாற வேண்டும் என்பதற்காகத்தான் பிரதமர் அல்லும் பகலும் அயராது உழைத்துக்கொண்டிருக்கிறார். பிரதமர் வெளிநாடுகளுக்குப் பயணம் செல்லும்போது, எதிர்க்கட்சியினர் எத்தனை எதிர்மறை கருத்துகளை முன்வைத்தார்கள்... ஆனால், இன்று உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவின் கருத்தை உற்றுநோக்குகின்றன. உக்ரைனில் போரின்போது இந்தியர்களை வெளியேற்ற, போர் நிறுத்தப்பட்டது. அதற்கு அனைத்து நாடுகளுடனும் பிரதமர் ஏற்படுத்திய நட்புறவுதான் காரணம். கடந்த ஆட்சியில் ராணுவ வீரர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள்கூட செய்துகொடுத்தது கிடையாது. ஆனால், இன்று நாட்டின் ராணுவக் கட்டமைப்பு மேம்படுத்தப் பட்டிருக்கிறது. தேசத்தின் ஏற்றுமதி அதிகரித்திருக்கிறது. `அனைவருக்கும் வீடு’ திட்டம் தொடங்கி ஸ்மார்ட் சிட்டி திட்டம் வரை இந்தியா முழுவதும் தொடர்ந்து செயல்படுத்தப் பட்டுவருகின்றன. பா.ஜ.க ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள். இதை வரும் தேர்தலில் மக்கள் உறுதிப்படுத்துவார்கள்!”
source https://www.vikatan.com/government-and-politics/politics/discussion-about-modi-talks-about-superpower-india
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக