நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணியை அடுத்த தெற்குப் பொய்கைநல்லூர் கிராமத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள இடத்தில் நூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த பரவை காய்கறி சந்தை அமைந்துள்ளது. பிரசித்திப் பெற்ற இந்தக் காய்கறி சந்தையில் நாகப்பட்டினம், வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் விளைவிக்கின்ற காய்கறிகளை நேரடியாக விற்பனைசெய்து வருகின்றனர்.
இந்தக் காய்கறி சந்தையில் நாள்தோறும் கோடிக்கணக்கான ரூபாய்க்கு காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. சந்தை வியாபாரத்திற்கான இந்த இடம் இந்து அறநிலையத்துறை சார்பில் குத்தகை ஏலம் விடப்பட்டுள்ளது. இந்தக் குத்தகையை தெற்குப் பொய்கைநல்லூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் எடுத்துள்ளார்.
இந்த நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பரவை காய்கறி சந்தை அருகாமையிலுள்ள தனியார் இடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. காய்கறி சந்தையை மீண்டும் பழைய இடத்தில் செயல்படுத்த வேண்டும் என ரமேஷ் தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். அதேபோல, தெற்குப் பொய்கைநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட அரசுப் புறம்போக்கு பகுதியில் காய்கறி சந்தை அமைப்பதற்கான இடத்தினை தேர்வு செய்து, சந்தைக்கு தேவையான அடிப்படை வசதிகளை அரசு செய்து தரவேண்டுமென ஊராட்சி மன்றத் தலைவர் அப்பானு தலைமையில் ஒரு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ரமேஷின் சகோதரர் மனோகர் அப்பகுதியில் பைனான்ஸியராகவும், வேளாங்கண்ணியில் தங்கும் விடுதி ஒன்றும் சொந்தமாக நடத்தி வருகிறார். நேற்றிரவு மனோகர் வேளாங்கண்ணி முச்சந்தி அருகேயுள்ள அவரின் அலுவலகத்தில் நண்பர் மணிவேலுடன் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த மூன்று மர்ம நபர்கள் மனோகர் அலுவலகத்தின் உள்ளே புகுந்து அங்கிருந்த மனோகரை அரிவாளால் சரமாரியாக தலையில் வெட்டி சாய்த்துள்ளனர்.
இதனைத் தடுக்க முயன்ற மணிவேலையும் அரிவாளால் வெட்டியுள்ளனர். மனோகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததை தொடர்ந்து அவரின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக நாகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் படுகாயம் அடைந்த மணிவேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மனோகரன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அறிந்த அவரின் ஆதரவாளர்களும், உறவினர்களும், பரவை காய்கறி சந்தை அருகிலுள்ள தெற்குப் பொய்கைநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் அப்பானு வீட்டில் தீ வைத்து எரித்தனர். மேலும் அவரின் ஆதரவாளர்கள் 10 -க்கும் மேற்பட்டவர்களின் வீடுகளையும் அடித்து சேதப்படுத்தியுள்ளனர். இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் சேதம் அடைந்துள்ளன. நேற்று (18.08.2022) காலை மனோகரின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் நாகை - தூத்துக்குடி கிழக்குக் கடற்கரை சாலையில் குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக சில மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியலை கைவிட்டனர். மேலும் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் உத்தரவின் பேரில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கொலைக்கு காரணமாகச் சொல்லப்படும் பரவை காய்கறி சந்தையில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.
source https://www.vikatan.com/news/crime/velankanni-vegetable-market-dispute-financier-hacked-to-death
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக