Ad

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2022

Doctor Vikatan: தாம்பத்திய உறவுக்கு பின் ஏற்படும் ப்ளீடிங்... சாதாரணமானதா, பிரச்னையின் அறிகுறியா?

Doctor Vikatan: என் வயது 35. கடந்த சில மாதங்களாக தாம்பத்திய உறவுக்குப் பிறகு எனக்கு ப்ளீடிங் இருப்பதை உணர்கிறேன். அதற்கு என்ன காரணமாக இருக்கும்? சிகிச்சை உண்டா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்..

மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்

உங்களுடைய பிரச்னையை 'போஸ்ட் காயிட்டல் ப்ளீடிங்' (Postcoital Bleeding) என்று சொல்வோம். முதல்முறை தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ளும்போது சிறிதளவு ரத்தப்போக்கு இருப்பது நார்மல்தான். அதாவது அந்த ப்ளீடிங், ஸ்பாட்டிங் போன்று இருந்தால் பரவாயில்லை. ஆனால் அதைத் தாண்டியும் ப்ளீடிங் ஆகிறது என்றால் அதை சாதாரணமானதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

முதல்முறை தாம்பத்திய உறவின்போது ப்ளீடிங் ஆகக் காரணம், பெண்ணின் வெஜைனா பகுதியில் உள்ள ஹைமன் எனும் மெல்லிய, டிரான்ஸ்பரன்ட் திசு காயமடைவதுதான். முதல்முறை உறவின்போது இப்படி இந்த சவ்வு கிழிந்து ரத்தம் வந்தால்தான் அந்தப் பெண் கன்னித்தன்மை உள்ளவள் என்கிற மூடநம்பிக்கை இன்னும் நம் சமுதாயத்தில் இருக்கிறது. அதையெல்லாம் நம்ப வேண்டாம். பல்வேறு காரணங்களால் அந்த ஹைமன் சவ்வு கிழிய வாய்ப்புகள் உள்ளன. எனவே அதைவைத்து ஒரு பெண்ணின் நடத்தையை எடைபோடுவது தவிர்க்கப்பட வேண்டும்.

'போஸ்ட் காயிட்டல் ப்ளீடிங்' பாதிப்பானது திருமணமான புதிதில் சில பெண்களை பாதிக்கலாம். அதேபோல மெனோபாஸ் வயதில் இருக்கும் பெண்களுக்கும் வரலாம். பெண்தன்மைக்கு காரணமான ஹார்மோன்கள் குறைவதால், வெஜைனா பகுதியானது வறண்டுபோய், அதன் தொடர்ச்சியாக ப்ளீடிங் வரலாம்.

Representational Image

இப்போதுதான் குழந்தை பெற்றவராக இருக்கலாம் அல்லது ஆறு மாதங்களுக்குள் பிரசவமாகி, தாய்ப்பால் கொடுக்கும் பெண்ணாக இருக்கலாம். அந்த நேரத்தில் பெண் உடலில் ஆக்ஸிடோசின் எனும் ஹார்மோன் அதிகம் இருக்கும். மற்ற பெண் ஹார்மோன்கள் குறைவாகச் சுரப்பதாலும் வெஜைனா பகுதி வறண்டுபோய், அதன் காரணமாக தாம்பத்திய உறவின்போது ப்ளீடிங் ஏற்படலாம்.

மிகவும் வேகமாக, ஆக்ரோஷமாக தாம்பத்திய உறவு வைத்துக்கொள்வதாலும் வெஜைனா பகுதி காயமடைந்து, ப்ளீடிங் வரலாம். கர்ப்பப்பை, கர்ப்பப்பை வாய் அல்லது வெஜைனா பகுதியில் ஏதேனும் தொற்று பாதிப்பு இருந்தாலும் தாம்பத்திய உறவுக்குப் பிறகான ப்ளீடிங் இருக்கும்.

கணவருக்கு ஏதேனும் தொற்று பாதிப்பு இருந்து, அவரிடமிருந்து மனைவிக்கும் அந்தத் தொற்று பரவியிருக்கலாம். அதாவது பாலியல் ரீதியாகப் பரவக்கூடிய தொற்றுகள்... இந்த விஷயத்தில் கணவன், மனைவி இருவருக்கும் சிகிச்சைகள் அளிக்க வேண்டியிருக்கும்.

கர்ப்பப்பையிலோ, கர்ப்பப்பையின் வாயிலோ 'பாலிப்' எனப்படும் சதை வளர்ச்சி இருக்கலாம். அதுவும் தாம்பத்திய உறவுக்குப் பிறகான ரத்தப் போக்குக்கு காரணமாக இருக்கலாம்.

கர்ப்பப்பை வாயில் புற்றுநோய் பாதிப்பு என்பது அரிதானது என்றாலும் அந்த பாதிப்புடன் வரும் பெண்களையும் பார்க்கிறோம். இதுவும் தாம்பத்திய உறவுக்குப் பிறகான ப்ளீடிங் ஏற்பட காரணமாகலாம்.

Woman (Representational Image)

இப்படி உங்கள் பிரச்னைக்கு பல காரணங்கள் இருக்கலாம். ப்ளீடிங் ஆவதை நினைத்து மிரளாதீர்கள். பெரும்பாலும் இது குணப்படுத்தக்கூடிய பாதிப்பாகவே இருக்கும். புற்றுநோய் பாதிப்பின் காரணமாக இப்படி ஏற்படுவதெல்லாம் மிகவும் அரிதானது.

எதுவானாலும் உங்கள் மகப்பேறு மருத்துவரை அணுகி, ஆலோசனை பெறுங்கள். அவரது அறிவுரையின் பேரில் சரியான சிகிச்சையை மேற்கொள்ளுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



source https://www.vikatan.com/news/healthy/doctor-vikatan-bleeding-after-intercourse-is-it-normal-or-a-problematic

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக