Ad

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2022

`கொடைக்கானல் - மூணாறு எஸ்கேப் சாலை என்ன ஆனது?’ - போராட தயாராகும் தமிழ்நாட்டு விவசாயிகள்

மலைகளின் இளவரசியான ​கொடைக்கானல் கோக்கர்ஸ் வாக் பகுதியில் இருந்து 6 கிலோ மீட்டர் ​தூரத்தில் மோயர் வியூ பாய்ன்ட் என்ற பகுதி​ உள்ளது. இப்பகுதிக்கு பாதை ​உருவாக்கியதாகக் கூறி​ ஆங்கிலேயர் தாமஸ் மோயர் என்பவ​ருக்கு ​​​ நினை​வு தூண் அமைத்து அவரின் பெயரையே இப்பகுதிக்கு சூட்டிவிட்டனர்.

கொடைக்கானல்

இதேபோல கொடைக்கானலை ஆங்கிலேயேர்கள் தான் கண்டறிந்து அதிகமாக குடியேறினர், பல்வேறு பகுதிகளுக்கு பாதை உருவாக்கினர் எனக் கூறப்படுகிறது. ஆனால் ஆதிகுடியான தமிழர்கள் ஏற்கெனவே கொடைக்கானலுக்கு பாதை அமைத்து அங்கு வாழ்ந்தது மட்டுமில்லாது கொடைக்கானலில் இருந்து மூணாறு செல்வதற்கான பாதையும் அமைத்துள்ளனர்.

இந்தப் பாதை மூடப்பட்டதால் பெரும்பாதிப்பை சந்தித்துவருகிறார்கள் விவசாயிகள். தமிழக - கேரள எல்லையில் தமிழர்களுக்காக போராடும் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கத்திடம் பேசினோம்.

``கடந்த 1944-ல், ​இரண்டாம் உலகப் போ​ர் காலகட்டத்தில் கொடைக்கானலில் ஆங்கிலேயர்கள் அதிக எண்ணிக்கையில் ​வசித்து வந்துள்ளனர். ​உலகப்​ போர் உச்சக்கட்டத்தில் இருந்த நேரத்தில், சென்னை மீது ஜப்பான் அணுகுண்டு வீசப்போவதாக எழுந்த வதந்தியை அடுத்து, அன்றைக்கு சென்னையில் இருந்த ஆங்கிலேய அதிகாரிகள், உடனடியாக தங்கள் நாட்டுக்கு தப்பி ஓடுவதற்கு ஒரு பாதையை தேர்ந்தெடுத்தார்கள்.

அன்வர் பாலசிங்கம்

​அந்தப் பாதை கொடைக்கானல் வழியாக பூம்பாறை, மன்னவனூர், பூண்டி வழியாக கிளாவரை சென்று, அங்கிருந்து 11 கிலோமீட்டர் குதிரையில் பயணித்து, டாப் ஸ்டேஷனை அடையவேண்டும்.​ ​​அங்கிருந்து எல்லப்பட்டி, மாட்டுப்பட்டி, குண்டல, கிராம்ஸ்லேண்ட் வழியாக மூணாறை அடைந்து, அங்கிருந்து அடிமாலி கோதமங்கலம் வழியாக கொச்சிக்கு சென்று, கப்பல் மார்க்கமாக இங்கிலாந்துக்கு​ச் செல்வது அவர்களின் திட்டமாக இருந்தது.

இறுதியில் அந்த வழியாக கொச்சிக்கு சென்று இங்கிலாந்து தப்பி ஓடினார்கள் பிரிட்டிஷ் அதிகாரிகள் பலர். அவர்கள் சென்ற அந்த பாதைக்கு பெயர், தப்பி ஓடிய பாதை என்பதால் எஸ்கேப் ரோடு என்று ஆனது.

​இந்தப் பாதை உருவாவதற்கு முன்னாலேயே, வட்ட வடை, கோவிலூர், கொட்டக்கம்பூர் உள்ளிட்ட 28 மலை கிராமங்களில் வாழ்ந்த தமிழ் விவசாயிகள், தங்கள் விளைபொருள்களை குதிரை மற்றும் கழுதைகளில் ஏற்றிக்கொண்டு, கொடைக்கானலுக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள்​. கரடுமுரடாக இருந்த அந்தப் பாதையைப் பயன்படுத்தி தான் ​ஆங்கிலேயர்கள் இங்கிலாந்துக்குத் தப்பி ஓடியிருக்கிறார்கள்.

மூணாறு

​நாடு விடுதலை அடைந்த பிறகும் கூட அந்தப் பாதை பயன்பாட்டிலேயே இருந்து வந்திருக்கிறது. ஆனால் 1956 மொழிவழிப் பிரிவினை துரதிஷ்டவசமாக வட்டவடை, கோவிலூரை கேரளாவோடு இணைத்தது.​ ​இந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக்கொண்ட மலையாளிகள், உடனடியாக களத்தில் இறங்கி எஸ்கேப் ரோட்டை தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்கள். தேவிகுளம் தாலுகாவில் ஏற்கனவே தமிழர்கள் பெரும்பான்மையாக இருப்பதை மனதில் கொண்ட மலையாளிகள், எந்த வகையிலும் கொடைக்கானல் பகுதியில் இருந்து தமிழர்கள் மேற்கு நோக்கி நகர்வதை அனுமதிக்கவில்லை.

​தேவிகுளம், உடுமஞ்சோலை, பீர்மேடு தாலுகாவில் உள்ள தமிழர்களை, தேயிலைத் தோட்டங்களில் செயற்கையாக நடத்தப்பட்ட கதவடைப்பு போரட்டங்கள் மூலமாக கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றிய மலையாள அரசு, கடந்த 2003 ஆம் ஆண்டு எஸ்கேப் ரோட்டை மறித்து,​ ​அதை பாம்பாடும் சோலை தேசிய பூங்காவாக அறிவித்தது.

கொடைக்கானல்

முன்பு இருதரப்பு பயணத்திற்கு ஓரளவு முட்டுக்கட்டை போட்ட கேரள மாநில அரசு,​ ​இப்போது டாப் ஸ்டேஷன் தாண்டியதும் கிளாவரை வரை சென்று தமிழகத்தை இணைக்கும் எஸ்கேப் ரோட்டில் சங்கிலியைப் போட்டு இழுத்துப் பூட்டியது.​ ​ஜிப் களில் ஓரளவு பயணித்து வந்த இரண்டு பக்கமும் உள்ள தமிழர்கள், இப்போது கேரள மாநில வனத்துறையால் கடும் அவதியை​ச்​ சந்தித்து வருகிறார்கள்.

​கேரள அரசு​ ​​வெறும் 11 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த பண சாலையை இழுத்துப்பூட்டியதன் மூலம், மிகப்பெரிய பொருளாதார தாக்குதலை வட்ட வடை கோவிலூர் உள்ளிட்ட 28 மலை கிராமங்களில் வாழும் தமிழர்கள் மீது திணித்திருக்கிறது​.​ எஸ்கேப் ரோட்டை இழுத்து பூட்டியது மனித உரிமைகளை மீறும் செயல்”​ என்றார்.

கேரள தலைமைச்செயலகம்

​இறுதியாக, ``​இரண்டு மாநில அரசுகளும் இதற்கு ஒரு முன் முயற்சியை எடுக்க வேண்டும். இல்லையேல் ​​வட்டவடை, கோவிலூர் உள்ளிட்ட 28 மலை கிராம மக்களையும், கிளாவரை, மன்னவனூர்,​ ​பூண்டி உள்ளிட்ட 16 கிராம மக்களையும் ஒன்றாக திரட்டி திருவனந்தபுரத்தில் உள்ள கேரள மாநில தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம்​” என்றார். ​



source https://www.vikatan.com/news/protest/what-happened-to-kodaikanal-munnar-escape-road

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக