Ad

திங்கள், 29 ஆகஸ்ட், 2022

நமக்குள்ளே...

பெண்களை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கிய வழக்குகளின் தீர்ப்புகளில் குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனைகள், பெரும்பாலும் இங்கு பாதிக்கப்பட்டவருக்கான நீதியாக அமைவதில்லை. சில வழக்குகளில், குற்றவாளிகளை ‘என்கவுன்டர்’ செய்யும் காவல்துறை சாகசங்களும், உண்மையான குற்றவாளிகள் வெளிவராமல் போகும் அவநம்பிக்கையையே ஏற்படுத்துவதாக இருக்கும். இந்நிலையில், பில்கிஸ் பானோ கூட்டுப் பாலியல் வழக்கில் 11 பேருக்கு குஜராத் அரசு தண்டனைக் குறைப்பு வழங்கி சமீபத்தில் விடுதலை செய்தது, நாடெங்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

2002-ல் குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு கோர சம்பவத்துக்குப் பிறகு ஏற்பட்ட கலவரத்தில், கர்ப்பிணியான பில்கிஸ் பானோவை ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தது. அவரின் குழந்தை உட்பட குடும்பத்தினர் 7 பேரை அக்கும்பல் படுகொலை செய்தது. நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில், 2008-ல் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. குற்றவாளிகளில் ஒருவர், குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவின் கீழ் தண்டனைக் குறைப்பு வழங்க, குஜராத் உயர் நீதிமன்றத்தை அணுகினார்; தொடர்ந்து வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. அதைப் பரிசீலிக்குமாறு குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. தண்டனை குறைப்பு கொள்கையின் கீழ் ஆகஸ்ட் 15 அன்று குஜராத் அரசு, குற்றவாளிகள் 11 பேரையும் விடுதலை செய்தது. அதற்கு நாடெங்கிலும் இருந்து எதிர்ப்பு எழுந்திருக்கிறது.

பில்கிஸ் பானோ, `என் குடும்பத்தையும் என்னையும் சிதைத்து, என் மூன்று வயதுக் குழந்தையை என்னிடமிருந்து பறித்துக்கொண்ட 11 குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். அரசின் முடிவு என்னை மரத்துப்போகச் செய்துள்ளது. நான் நம் நாட்டின் நீதிமன்றங்களை நம்பினேன். இப்போது நான் அனுபவிக்கும் துயரமும், அசைத்துப்போடப்பட்ட என் நம்பிக்கையும் எனக்கானது மட்டுமல்ல. நீதிமன்றங்களில் நீதிக்காகப் போராடிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு பெண்ணுக்குமானது’ என்று கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

செயற்பாட்டாளர்கள் முதல் போராளிகள் வரை நிரபராதிகள் தண்டனை அனுபவித்து வரும் எத்தனையோ வழக்குகள் முடிக்கப்படாமல் இருக்கின்றன. ஊழல், வரி ஏய்ப்பு, கடன் மோசடி செய்த நாட்டின் முதன்மை பணக்காரர்கள் குறித்த வழக்குகள் கோப்புகளாக மட்டுமே தேங்கிக்கிடக்கின்றன. அப்படியிருக்கும்போது, ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு கூட்டுப் பாலியல் வதை செய்தவர்களின் வழக்கை, `அக்கறையுடன்’ பரிசீலித்து விடுதலை செய்த நீதித்துறையும் அரசும், யாருக்கானவை? வழக்கமாக ஒரு பெண் வன்முறைக்கு உள்ளாகும் போது பஞ்சாயத்துகள் முதல் காவல் நிலையங்கள் வரை, ‘பொம்பளை இதுக்கெல்லாம் புகாரை தூக்கிட்டு வரலாமா? போம்மா...’ என்று அனுப்பப்படும் ஆணாதிக்கத்தின் அரச, நீதிமன்ற பிரதிபலிப்பு இது என்பது அவமானம்.

குஜராத் கலவரத்தின்போது, ஒரு சிறுபான்மையின கர்ப்பிணிப் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட குற்றத்தின் குரூர தன்மை, அந்தப் பெண்ணுடலை வெறியுடன் வேட்டையாடிய குற்றவாளிகளின் ஆணாதிக்க நோக்கம் எல்லாம் எந்த மன்னிப்புக்கும் அப்பாற்பட்டது.

`பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை தரும் சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறோம்' என்று பெருமை பேசுகிறது மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசு. ஆனால், குஜராத் மாநிலத்தை ஆளும் பி.ஜே.பி அரசோ... பாலியல் குற்றவாளிகளை விடுதலை செய்திருப்பதோடு, அந்தக் குற்றவாளிகளின் கால்களைத் தொட்டுவணங்கும் தொண்டர்களைப் பெருமையோடு பார்க்கிறது.

நாடு முழுக்கக் கடும் எதிர்ப்பு கிளம்பியிருப்பதைத் தொடர்ந்து, இந்த விடுதலைக்கு எதிரான வழக்கை விசாரணைக்கு ஏற்றிருக்கிறது உச்ச நீதிமன்றம். நம் நம்பிக்கை முழுமையாக சிதைக்கப்படாமல், உச்சபட்ச நீதி கிடைக்கும் என்று நம்புவோம் தோழிகளே!

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்



source https://www.vikatan.com/news/editorial/namakkulle-editorial-page-13-september-2022

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக