சென்னை மாநகராட்சியில் மக்கள் பிரதிநிதிகளான கவுன்சிலர்கள் பதவியேற்று ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ளது. அந்தவகையில், சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ஜூலை 30 - ம் தேதி நடந்தது. இந்த கூட்டத்தில், 'ஆய்வுக்குச் செல்லும் அதிகாரிகள் எங்களிடம் எந்தவித தகவலும் தெரிவிப்பதில்லை. தன்னிச்சையாக ஆய்வுப்பணிகளில் ஈடுபடுகிறார்கள்' என்ற குற்றச்சாட்டை திமுக கூட்டணியைச் சேர்ந்த கம்யூனிஸ்ட், விசிக உறுப்பினர்கள் பதிவு செய்தனர். இதையடுத்து, 'ஒவ்வொரு வார்டிலும் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து மாமன்ற உறுப்பினர்களுக்கு அதிகாரிகள் தகவல் தெரிவிக்க வேண்டும். ஆய்வின் போது கவுன்சிலர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' என மேயர் பிரியா அறிவுறுத்தினார். ஆனால், மாமன்ற உறுப்பினர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் உரிய ஒத்துழைப்பு வழங்குவதில்லை எனச் சர்ச்சை தற்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்தச்சூழலில், ஆகஸ்ட் மாதத்திற்கான மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் நேற்று முந்தினம் நடந்தது. கூட்டத்தில், பள்ளிகளில் பெஞ்சுகள் தட்டுப்பாடு, மாமன்ற உறுப்பினர்களுக்கு ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை உறுப்பினர்கள் வைத்தனர். கூட்டத்தில், 174-வது வார்டு திமுக கவுன்சிலர் ராதிகா பேசும்போது, "பெசன்ட் நகர் சாஸ்திரி நகர் பகுதிகளில் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒரு இடத்தில் மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி ஆய்வுக்கு வந்துள்ளார். அவர் ஆய்வுக்கு வந்தது குறித்து எனக்கு எந்த தகவல்களும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் அதே பகுதியில் சமூக ஆர்வலர் எனப் பெயரில் உள்ள சிலருக்குத் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்படும் சூழல் உருவாகிறது. மக்கள் பிரதிநிதிகளைப் புறக்கணித்துத் தனி நபர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது வருத்தம் அளிக்கிறது" என்றார்.
அப்போது குறுக்கிட்ட துணை மேயர் மகேஷ்குமார், "அதிகாரிகள் அவ்வப்போது பணிகளை ஆய்வு செய்வது அவசியம் தான். ஆனால், மக்கள் பிரதிநிதிகளுக்கு உரிய தகவல் தெரிவிக்காத போது தான் வருத்தம் ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க வேண்டும்" என்றார். இந்த சம்பவம் குறித்து விளக்கமளித்த ஆணையர் ககன்தீப் சிங் பேடி, "பெசன்ட் நகர் பகுதியில் ஆய்வுக்குச் சென்றபோது மண்டல தலைவருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சமூக ஆர்வலர்கள் யாருக்கும் தகவல் தெரிவிக்கப்படவில்லை. நாங்கள் ஆய்வு செய்யும் போது அவர்களாகவே வந்திருக்கக்கூடும். மாநகராட்சியில் உள்ள அனைத்து அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது கட்டாயம்" என விளக்கமளித்தார்.
மேயர் பிரியா, "அதிகாரிகள் ஆய்வுக்குச் செல்லும் போதும், வார்டுகளில் மேற்கொள்ளப்படும் பணிகள் நிலை குறித்த தகவல்களையும் மாமன்ற உறுப்பினர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். ஏற்கனவே உறுப்பினர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உறுப்பினர்களுக்கு ஒத்துழைப்பு வழங்காத சம்பவம் மீண்டும் நடைபெற்றால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இதுவரை மாநகராட்சி அதிகாரிகள் மீது கவுன்சிலர்கள் புகார் தெரிவித்து வந்த நிலையில் மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் மீது திமுக கவுன்சிலர் ஒருவர் அதிருப்தி தெரிவித்தது மன்ற கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
source https://www.vikatan.com/government-and-politics/politics/dmk-councillor-complain-against-corporation-commisionar-gagandeep-singh-bedi
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக