Ad

வியாழன், 25 ஆகஸ்ட், 2022

சோனாலி: கோவா பார்ட்டியில் மர்ம மரணம்; பாஜக பெண் நிர்வாகி உடலில் காயங்கள் - கொலை வழக்கில் இருவர் கைது

ஹரியானாவை சேர்ந்த பாஜக பெண் பிரமுகரும், நடிகையுமான சோனாலி போகத், கடந்த திங்கள்கிழமை இரவு பார்ட்டியில் கலந்து கொண்ட போது மர்மமான முறையில் இறந்து போனார். சோனாலி மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக போலீஸார் தெரிவித்த போதிலும், அவரின் மரணத்தில் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர்.

சோனாலி கொலை செய்யப்பட்டதாக அவரின் சகோதரர் குற்றம் சாட்டியிருந்தார். இதனை தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் மற்றும் கேமரா உதவியுடன் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. ஆரம்பத்தில் சோனாலியின் உடம்பு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்தப்படவேண்டும் என்று அவரின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இறுதியில் கோவாவிலேயே பிரேத பரிசோதனைக்கு சம்மதித்தனர்.

இதில் சோனாலியின் உடம்பில் பல இடங்களில் காயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சோனாலியின் சகோதரர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சோனாலியுடன் கோவாவுக்கு வந்த அவரின் உதவியாளர் சுதிர், அவரின் நண்பர் சுக்விந்தர் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்கு முன்பு சுதிர், சுக்விந்தர் ஆகியோர் சோனாலியை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து அதனை காட்டி மிரட்டியதாக சோனாலியின் சகோதரர் ரிங்கு குற்றம் சாட்டியிருந்தார்.

தற்போது அவர்கள் இரண்டு பேரும் தான் சோனாலியை கொலை செய்திருப்பதாக ரிங்கு தெரிவித்தார். சோனாலியின் சாப்பாட்டில் எதையோ கலந்துவிட்டதாக சோனாலி எங்களிடம் தெரிவித்தார் என்றும் ரிங்கு தெரிவித்தார். சுதிர் எனது சகோதரியின் போன்கள், சொத்து ஆவணங்கள், ஏடிஎம் கார்டுகள், லேப்டாப், கண்காணிப்பு கேமரா, வீட்டுச்சாவி போன்றவற்றை பறித்துக்கொண்டதோடு, சோனாலியின் அரசியல் மற்றும் நடிப்பை அடியோடு அழித்துவிடுவதாக மிரட்டினர் என்றும் ரிங்கு தெரிவித்துள்ளார். பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் சுதிர் மற்றும் சுக்விந்தர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து கோவா டிஜிபி ஜெஸ்பால் சிங் கூறுகையில், ``இப்போதுதான் விசாரணையை தொடங்கி இருக்கிறோம். பிரேத பரிசோதனையில் சோனாலியின் உடம்பில் காயங்கள் இருக்கிறது. அவர் ஹோட்டலில் இருந்த போது இந்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த காயங்கள் மிகவும் பெரியது கிடையாது. அனைத்து அம்சங்கள் குறித்தும் விசாரித்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.

இது குறித்து போலீஸ் அதிகாரி தல்வி கூறுகையில், ``சோனாலி கொலை தொடர்பாக சுதிர், சுக்விந்தர் ஆகியோர் கொலை குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.

சோனாலி

சோனாலி தங்கி இருந்த ஹோட்டல் கண்காணிப்பு கேமரா பதிவுகள் பெறப்பட்டுள்ளது. அதோடு குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள இருவரின் மொபைல் போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சோனாலியின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை நேரில் கண்காணித்து வருவதாக கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். சோனாலி தானாக கோவாவுக்கு வரவில்லை என்றும், திட்டமிட்டு அழைத்து வரப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சோனாலி பார்ட்டியில் இருந்து ஹோட்டல் சென்ற பிறகு அங்கிருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. பிரேத பரிசோதனைக்கு பிறகு சோனாலியின் உடல் அவரின் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. சோனாலியின் மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று அவரின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.



source https://www.vikatan.com/government-and-politics/crime/bjp-woman-activist-sonali-dies-mysteriously-at-goa-party-with-injuries-two-arrested

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக