? எம்.ஜி.ஆர் கெட்டப்பையும் ரஜினி நடையையும் கலந்து அசத்தும் (?) லெஜண்ட் சரவணன் எந்த எம்.ஜி.ஆர்/ரஜினி படத்தை ரீமேக் செய்து நடிக்கலாம்?
எம்.ஜி.ஆரின் ரகசிய போலீஸ் 115 படத்தையும், ரஜினியின் தர்பார் படத்தையும் ரீமேக் செய்து நடிக்கலாம்.
ப.சோமசுந்தரம்
எந்திரன். ஓவர் மேக்கப்ல சிட்டி ரோபோ மாதிரி அவர் முகம் தெரிவதால்..!
வி.சி.கிருஷ்ணரத்னம்
ரஜினியின் லிங்கா படத்தை ரீமேக் செய்து சூப்பர் ஸ்டாரின் ஃப்ளாப்பை இவர் ஹிட்(?) ஆக்கிக் காட்டலாம்.
அ.ரியாஸ்
நாளை நமதே கறுப்பு எம்.ஜி.ஆர் வேடமும், முரட்டுக்காளை ரஜினி வேடமும் கொடுத்துப் பார்க்கலாம். எவ்வளவோ கஷ்டப்பட்டுட்டோம், இதையும்தான் பார்த்திடலாமே.
அ.ஜோசப் செல்வராஜ்
உலகம் சுற்றும் வாலிபனுக்கு அடுத்து எம்.ஜி.ஆர் எடுப்பதாக இருந்த ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு.’
க.பொன்சந்தர்
30 நாளில் 30 கோடி செலவு செய்ய ரஜினிகாந்த் செந்திலை வைத்து சினிமா எடுப்பது போலத்தான் லெஜண்ட் செய்துவருகிறார், அதனால் அருணாச்சலம் படத்தையே ரீமேக் செய்து செலவு மேல் செலவு செய்து வரவு வைக்கலாம்!
நா.இரவீந்திரன்
எஜமான் படத்தை ரீமேக் செய்து நடிக்க வைக்கலாம். அவரது கடையில் பணிபுரியும் ஊழியர்களைத் துணை நடிகர்களாக்கிவிட்டால் தலைப்பும் பொருத்தமாக இருக்கும்.
SowThanishka
பாபாவை ரீமேக் செய்யலாம். ஏனெனில், இந்தப் படத்திற்குப் பெரிய நடிப்பெல்லாம் ஒன்றும் தேவையில்லை. படம் ஃபெயிலியர் ஆனபின்பு, ஒரிஜினலே ஃபெயிலியர் படம்தானே என்று சொல்லி எஸ்கேப்பும் ஆகிவிடலாம்.
IamUzhavan
ரஜினியின் நான் சிவப்பு மனிதன். நவீன ராபின் ஹூட்டாக மாறி அராஜகத்தை அழிக்கலாம். அண்ணாச்சி அவதரித்துவிட்டார் என புரொமோஷன் செய்யலாம்.
urs_venbaa
ரஜினியோட அண்ணா மலை படத்தைப் பண்ணலாம்.சாதா சரவணன் சவால் விட்டு லெஜண்ட் சரவணா ஸ்டோர ஓப்பன் பண்ற மாதிரி காட்டலாம். இந்தக் கதைக்குப் பொருத்தமான நடிகர் இவரைத் தவிர யாரும் இல்லை.
isanthakumar
எம்.ஜிஆரின் அடிமைப் பெண். தலைவருக்கு இரட்டை வேடம் என்பதால், பல கதாநாயகிகளுக்கும் நல்ல வாய்ப்பு.
எம்.காஞ்சனாகரண், சென்னை
? க்ரிஞ்ச் என்பதற்கு தமிழ் சினிமா, அரசியலில் இருந்து ஒரு உதாரணம்...
சினிமாவில், ‘இரவின் நிழல்' படத்தில் வரும் கொச்சை வார்த்தைகள். அரசியலில், அ.தி.மு.கவின் தடுமாறும் தலைமை!
எம்.சேவியர் பால்
சினிமா: விசுவின் படங்கள்
அரசியல்:தமிழருவி மணியன்.
கொ.மூர்த்தி
உற்ற நண்ப அமைச்சரும், மற்ற அமைச்சர்களும் சட்டமன்றத்திலும் பொதுவெளியிலும் தன்னைப் புகழும்போதெல்லாம் அமைதியாக இருந்துவிட்டு, அவர்கள் தனக்கு அமைச்சர் பதவி கொடுக்கவேண்டும் என்று தலைமைக்குத் தொடர் கோரிக்கை வைத்தபோது, ‘தலைமைக்கு தர்மசங்கடத்தை உருவாக்க வேண்டாம், தலைவர் சரியான சமயத்தில் சரியானதைச் செய்வார்' என்று உதயநிதி தன்னடக்கத்துடனும் பெருந்தன்மையுடனும் கூறியது!
ஜெ.நெடுமாறன்
நான் எப்படி வருவேன் எப்ப வருவேன்னு தெரியாது... ஆனா வர வேண்டிய நேரத்தில கண்டிப்பா வருவேன்னு 30 வருஷத்த ஓட்டுனதவிடவா..?
bommaiya
‘அண்ணாத்தே' படத்தில் ரஜினி, தன் தங்கையிடம் அழும் காட்சிகளெல்லாம் ‘முள்ளும் மலரும்' படம் போல குறிஞ்சிப் பூவாகப் பூத்திருக்க வேண்டியது. ஆனால், க்ரிஞ்ச் ஆக மாறிப்போனதுதான் சோகம்.
IamJeevagan
?ஸ்டாலினின் செஸ் ஒலிம்பியாடுக்குப் போட்டியாக எடப்பாடி பழனிசாமி என்ன விழா நடத்தலாம்?
வேறென்ன? கபடித் திருவிழாதான். அதில்தான் காலைப் பிடிக்கவும் செய்யலாம், காலை வாரவும் செய்யலாம்.
ஹெச்.உமர் பாரூக்
உலகளவிலான வாட்டர் பாட்டில் வீசும் போட்டி நடத்தலாம்.
அஜித்
ஆட்சிக்கு வந்தால் இ.பி.எஸ் செஸ் ஒலிம்பியாடையே மீண்டும் நடத்தலாம். ஓ.பி.எஸ், சசிகலா, தினகரன் அணியினருக்கு எதிராகக் காய் நகர்த்துவதில் கில்லாடியாக இவர் இருப்பதால்.
பர்வீன் யூனுஸ்
டிசம்பர் மாதத்தில் நடக்கும் இசைக்கச்சேரி விழா போல ஜெயக்குமார், சி.வி.சண்முகம் இவர்களை வைத்து எதிரணியைத் திட்டும் ‘வசைக் கச்சேரி விழா' நடத்தலாம்.
ப. இராஜகோபால்
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்று பம்பரம் விடுதல். அதனால் ‘பம்பரத் திருவிழா' நடத்தித் தமிழர்கள் மத்தியில் ஒரு எழுச்சியை உண்டாக்கினால் அடுத்த தேர்தலுக்கு உபயோகமாகும். முக்கியமா மோடிஜியை அழைத்து வந்து ‘பம்பரம் விடுவது போல் சிற்பம் கோயிலில் கிடைத்தது’ எனலாம்.
JaNeHANUSHKA
குழி பறிச்சான் போட்டி: அனைவரையும் கூட்டமாக நிற்க வைத்து, குழி பறிக்கச் சொல்ல வேண்டும். யார் குழியில் யார் விழுகிறார்கள் என்பதை வைத்து பாயின்ட் கொடுத்து வெற்றி பெற்றவர் யாரென அறிவிக்கப்படும்.
KRavikumar39
உள்ளே வெளியே விளையாட்டான ‘மங்காத்தா' ரொம்பப் பொருத்தமான விளையாட்டு.
h_umarfarook
உலகளவிலான ஒரு பட்டிமன்றம். ‘கட்சிக்குத் தேவை ஒற்றைத் தலைமையா...ரெட்டைத் தலைமையா' என்ற தலைப்பில் நடத்தி, ஒற்றைத் தலைமைக்கு சாதகமா தீர்ப்பு சொல்ல சி.வி.சண்முகத்தை நடுவராகப் போடலாம்.
ZY1KtAKuv5F0Ktl
? கமல் தயாரிப்பில் உதயநிதி நடிக்கும் படத்துக்கு உடன் பிறப்புகளையும் மய்யத்துக் காரர்களையும் திருப்திப்படுத்துவது போல் ஒரு டைட்டில் சொல்லுங்க பார்ப்போம்!
சேப்பாக்கத்து ஆண்டவர்
ஆர்.பிரசன்னா
ஏஜென்ட் உதயா
செந்தில்வேல்
அபூர்வ உடன்பிறப்பே
பெ.பாலசுப்ரமணி
இருவருக்கும் மச்சம் உச்சத்தில் இருப்பதால், ‘வெற்றி விழா’ டைட்டிலையே மீண்டும் உபயோகித்துக்கொள்ளலாம்.
சா.செல்வராஜ்
ராஜ்கமல் ஜெயின்ட்
அ.பச்சைப்பெருமாள்
சலங்கையொலியும் முரசொலியும்
வெங்கட்
ஒரு கைதியின் செங்கல்
எம்.கல்லூரி ராமன்
களத்தூர் முதல் கொளத்தூர்
வழி சேப்பாக்கம்
manipmp
நெஞ்சுக்கு நீதி மய்யம்
krishmaggi
இது சிங்காரவேலன் காதல்
LAKSHMANAN_KL
நம்மவர் ஒரு உடன்பிறப்பே
வண்ணை கணேசன்
டார்ச்லைட்டும் தங்கமீனும்
இ.மஹபூப்ஷெரிப்,
ஈரோடு
? டி.வி செய்தி வாசிப்பில் நீங்கள் க்ளிஷே என்று கருதும் விஷயம்?
‘மீண்டும் தலைப்புச் செய்திகள்’ என்று சொல்வது.
வி.பஞ்சாபகேசன்
நேரலைச் செய்தி வாசிப்பில் நிருபருக்குத் தொடர்பு கிடைக்காதபோது செய்தி வாசிப்பாளர் திண்டாடுவதும், நிருபர் பேசி முடித்ததும் ‘அழகாக, தெளிவாக, விளக்கமாகச் சொன்னதற்கு நன்றி’ என்று செய்தி வாசிப்பாளர் கூறுவதும்.
ப.கீதா
செய்தி வாசிப்பாளர் கோட் சூட்தான் போடணுமா? இயல்பான உடையில் வந்தாலென்ன?
. மல்லிகா குரு
ஒரு சாதாரண செய்தியைத் திரும்பத் திரும்பச் சொல்வதால் அந்தச் செய்தி பார்ப்பவர்களின் மூளையைச் சலவை செய்து அதை முக்கியச் செய்தியாக மாற்றிவிடுதல்.
க.ரவீந்திரன்
செய்தி வாசிப்பவர்களிடம் தமிழ் எழுத்துகளின் சரியான உச்சரிப்பு படுகிற பாடுதான்.
கே.ஆர்.அசோகன்
செய்திகள் அதிகம் கிடைக்க வில்லையெனில், பிரபல நடிகர்கள் அரசியல் வாதிகளுக்கு ஜுரம், தலைவலி என்றால்கூட அதனையும் செய்தியாக வாசிப்பது.
ப.சீனிவாசன்
விளம்பர இடைவேளை, செய்திகளைவிட அதிக நேரத்தை எடுத்துக்கொள்வது.
balebalu
‘பரபரப்பு' என்ற சொல்லை மலினப்படுத்துமளவு பயன்படுத்துவது. அடிக்கடி ‘அங்கே பரபரப்பான சூழல் நிலவுகிறது...’ என்பது. அடுத்து ‘இதனிடையே' என்ற சொல்லை தேவையற்ற இடங்களிளெல்லாம் பயன்படுத்திக் கடுப்பேற்றுவது.
mekalapugazh
1. ரத்தம், அரிவாள் என இயக்குநர்களிடம் மாட்டிக்கொண்டு முழிக்கும் மதுரை வட்டாரத்தைக் காப்பாற்ற சில ஐடியாக்கள் ப்ளீஸ்!
2. போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களை தண்டிக்க ஜாலியான யோசனை தரவும்!
போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களை தண்டிக்க ஜாலியான யோசனை தரவும்!
4. மினிபஸ் பற்றிய உங்களின் நாஸ்டாலஜியா நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்.
5. ‘இவர் மட்டும் இந்தக் கட்சில இல்லாம அந்தக் கட்சில இருந்திருந்தா பெரிய ஆளா வந்திருப்பார்' என நீங்கள் நினைக்கும் தமிழக அரசியல்வாதி யார், ஏன்?
உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. இங்கே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!
உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி : வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002. இ-மெயிலில் அனுப்ப: vasagarmedai@vikatan.com
source https://www.vikatan.com/news/general-news/vasagar-medai-august-24-2022
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக