பூட்டு என்பது ஆதிக்கம்
திறப்பது வழிமுறை
உடைப்பது வன்முறை
கடந்த வாரம் சிங்கப்பூர் சென்றிருந்தேன் . அங்கு நான் கேள்விப்பட்ட ஒரு செய்தி ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருந்தது .
அங்கே நீதித்துறையில் அதிகபட்சமாக வழங்கப்படும் தண்டனை போதைப் பொருள் வைத்திருப்பவர்களுக்குத்தான். தூக்கு அல்லது எலெக்ட்ரிக் ஷாக் மரணம் !
இது தெரிந்திருந்தும் ஒரு தாய் , தன் மகன் போதைப் பொருள் வைத்திருந்ததாகச் சொல்லி அவனை போலீஸில் ஒப்படைத்தாள் . அதற்குமுன் அந்தத் தாய் , தன் மகனைத் திருத்த எவ்வளவோ முயற்சி செய்திருக்கிறாள் . கடிந்தும் நயந்தும் எப்படிச் சொல்லியும் மகன் திருந்திய பாடு இல்லை . வேறுவழியின்றி தான் போலீஸில் ஒப்படைத்தாள் .
வழக்கு விசாரணைக்கு வந்தது . நாடே இந்த வழக்கை ஆர்வத்தோடு கவனித்தது .
நீதிபதி கேட்டார் : “ உங்கள் மகனுக்குத் தூக்குத் தண்டனை கிடைக்கும் என்று தெரிந்திருந்தும் போலீஸில் ஒப்படைத்தீர்களே , ஏன் ? "தாய் சொன்னாள் : “ போதைப் பொருள் அதை உண்பவனை மட்டும்தான் கெடுக்கும் . அதை விற்றவனோ சுற்றுப்புறத்தையும் சூழ்நிலையையும் சமூகத்தையும் பாழ்படுத்துகிறான் . என் மகனால் அவன் நண்பர்களும் அந்த நண்பர்களால் பள்ளிக் கூடமும் கெடுகிறது . இவனால் நாட்டுக்கு நஷ்டம் என்பதால் , இவன் இருப்பதைவிட இல்லாமல் போவதே நாட்டுக்கு நல்லது என்று போலீஸில் ஒப்படைத்தேன்."
அந்த நீதிபதி வெறும் சட்டத்தை மட்டுமே வைத்துக்கொண்டு தீர்ப்பு சொன்னால் மகனுக்குத் தூக்குத் தண்டனையும் அந்தத் தாய்க்கு கோர்ட்டாரின் பாராட்டும் கிடைத்திருக்கும் .
ஆனால் , சட்டத்துக்கு மேலே வழக்கில் மனிதநேய உணர்வு இழையோட , நாட்டின் பிரதமரே இதில் தலையிட்டு , ' இதுபோல ஒரு தாய் , தன் மகன் போதைப் பொருளால் கெட்டுப்போகிறான் என்று போலீஸில் ஒப்படைத்தால் , அவனுக்குத் தூக்குத் தண்டனையிலிருந்து ரத்து கிடைக்கும் ' என்று சட்டத்தையே திருத்தி அமைத்து விட்டார்கள் .
தீர்ப்பு சட்டதிருத்தமாக அமைந்த அன்று தன் மகனை அந்தத் தாய் கட்டிப்பிடித்து அழ . . . .
மகனோ இனிமேல் ஜென்மத்துக்கும் போதைப் பொருளை நினைத்துக்கூடப் பார்க்கமாட்டேன் ' என்று சத்தியம் செய்த காட்சியைக் கண்டவர்கள் கலங்கினார்கள் . ஏன் . . . கேள்விப்பட்ட நானும்தான் கலங்கினேன் . ஒழுங்காக வழிநடக்கும் மனமே இன்பத்தின் திறவுகோல் !
ஒரு நாட்டின் நலத்துக்கும் முன்னேற்றத்துக்கும் அதன் கலை , கலாசாரம் , சட்டம் - ஒழுங்குதான் திறவுகோல் . இருக்கும் நல்லவற்றை ஏன் பூட்டி வைக்க வேண்டும்! இல்லை... இல்லை.... மூடிக்கிடக்கும் நல்லவற்றைத் திறந்து வைக்க ஒரு மனித நேயத் திறவு கோல் வேண்டும் .
- பொன்.சந்திரமோகன்/ இளையராஜா
(13.06.1999 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)
source https://cinema.vikatan.com/tamil-cinema/rajavin-parvaiyil-ilaiyaraaja-9
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக