Ad

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2022

மெட்ராஸ் தினம்: சுயமரியாதை கொண்ட மக்களின் புகலிடமாக மாறிய மதராஸும் தொலைந்துபோன அதன் அடையாளங்களும்!

ஆகஸ்ட் 22 - மெட்ராஸ் தினம். இந்தத் தருணத்தில் அன்றைய மெட்ராஸ் பட்டணத்தின் பாரம்பரிய சின்னங்கள் மறைந்துவருகின்றன என்பதை விட 'மெட்ராஸ்' என்கிற வார்த்தையே காணாமல் போய்விட்டது என்பதே துயரமான ஒன்றுதான். நகரம் தனது 383வது வயதைக் கொண்டாடப்போகிறது என்ற மகிழ்ச்சிதான் என்றாலும், நகரம் எதைக் கொண்டாடப்போகிறது எதற்காகக் கொண்டாடுகிறது என்ற கேள்வியும் எட்டிப் பார்க்கிறது. வரலாற்றின்படி, இது வெள்ளையர்களால் உருவான நகரம் என்றாலும் அதற்கும் முன்பு இங்கு ஊர்களே இல்லையா என்கிற குரல்கள் இப்போது நிறையக் கேட்கின்றன. ஆமாம் வெள்ளையர்கள் வருவதற்கு முன்பே இங்கே சின்ன சின்ன ஊர்கள் இருந்தது உண்மைதான். ஆனால் அவை அனைத்தும் நகரமாகப் பரிணமித்தது வெள்ளையர்கள் வருகைக்கு பின்புதான் என்பது மிக உண்மையான வரலாறு.
மெட்ராஸ்

இயேசுவின் பன்னிரண்டு சீடர்களில் ஒருவரான தாமஸ் இந்த கடற்கரை பகுதிக்கு வந்திருக்கிறார் தாமஸ் மலையில் அவரது ரத்த சுவடுகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். அவரது சடலம் சாந்தோம் சர்ச்சின் நிலவறையில் அடக்கம் செய்யப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இங்கே மார்க்கோபோலோ வந்து போயிருக்கிறார். ஆங்கிலேயர்களுக்கு முன்பாகவே பதினாறாம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியர்கள் வந்து சாந்தோம் பகுதியில் தமது குடியிருப்பை உருவாக்கியிருக்கிறார்கள். சாந்தோமுக்கு வடக்கே மாதரசன் பட்டிணமென்ற மீனவ கிராமமும் இருந்திருக்கிறது. இவ்வளவும் இருந்த கடற்கரை ஊர்தான் இது!

பிரான்சிஸ் டே

பிரான்சிஸ் டே என்கிற ஆங்கிலேயர் கிழக்கிந்திய கம்பெனிக்கு ஒரு நல்ல கடற்கரையோரம் தோதான நிலத்தைத் தேடியலைந்தார். அதாவது ஏற்கெனவே பழவேற்காட்டில் நிலை கொண்டிருந்த டேனீஷ் வர்த்தகர்களுடன் தொழில் சச்சரவு ஏற்படாதபடி தெற்கே எவ்வளவு தூரம் தள்ளிப் போக முடியுமோ அவ்வளவு நல்லது என எண்ணி இடம் தேடினார். மிகச் சுத்தமான தெளிந்த நீர்கொண்ட கூவம் நதி, கடலில் கலக்கும் பகுதி அவருக்குள் தேம்ஸ் நதியை நினைவுபடுத்தியிருக்கலாம். ஆனால் கம்பெனியின் தொழிலுக்கு லாபகரமான நிலமொன்றைக் கண்டுபிடித்ததாக உள் மனம் சொன்னது. கடல் வழியே வரும் பொருள்களைக் கூவத்தின் வழியே நிலமெங்கும் கொண்டு போகவும் கொண்டு வரவுமான திட்டங்கள் அவர் மனதில் தோன்றின. என்றாலும் அவர் பாண்டிச்சேரி கடற்கரை வரை தனக்கான இன்னும் ஆதாயமான நிலத்தைத் தேடிக்கொண்டே இருந்தார். ஒரு சமயம் கூனி மேட்டருகே இருந்த நிலம் அவருக்கு நல்ல இடமாகத் தோன்றியது. பிறகு பல கணக்குகளுக்குப் பிறகு சாந்தோமுக்கும் ராயபுரத்துக்கும் இடையில் கடற்கரைக்கு மேற்கே இருந்த மேட்டு நிலமே அவரது தேர்வாக இருந்தது.

தற்போது கோட்டையுள்ள நிலம், இந்தியாவின் முதல் பாதுகாப்பான வெள்ளையர் குடியிருப்பு கோட்டையாக கொத்தளங்களுடன் நிறுவப்பட்டு, பின்னர் அதுவே வெள்ளையர் நகரமாக மாறிப்போனது. அவர்களுக்குச் சேவகம் செய்வோர் மிக அருகிலேயே இருப்பதற்காகக் கோட்டைக்கு வடக்கே ஒரு பகுதி உருவாக்கப்பட்டது. அதுவே 'கறுப்பர் நகரம்' என்றானது. இது இரண்டுக்கும் சேர்ந்து ஒரு நிரந்தர பெயர் தேவைப்பட்டது. அந்த பெயர் 'மதராசபட்டணம்' என்றும் 'சென்ன பட்டணம்' என்றும் இரண்டு பெயர்களிலும் அழைக்கப்பட்டது. ஆம், பல்வேறு ஆவணங்களில் இரண்டு பெயர்களும் பயன்படுத்தப்பட்டன. 'மதராஸ்' எனப் பெயர் வரக் காரணம் முன்பே காசி மேடு, ராயபுரம் பகுதிகளிலிருந்த 'மாதரசன் பட்டிணம்' என்ற மீனவப் பட்டிணத்தின் பெயரும் ஒரு காரணமாக இருக்கலாம். இப்படியாக இன்னும் பதினாறு, பதினேழு பெயர் காரணங்கள் இருக்கின்றன. அந்தச் சிக்கல் இன்னும் தீர்க்கப்படவில்லை.

மெட்ராஸ் வரலாறு

ஏற்கெனவே சாந்தோம் பகுதியிலிருந்த கடற்கரையோர போர்த்துகீசிய குடியிருப்பில் 1520களிலேயே அங்குச் செல்வாக்குடன் இருந்த போர்த்துகீசிய தர்மகர்த்தா பெயரான 'மதெஇரோஸ்' என்கிற பெயராக இருக்கவும் அதிக வாய்ப்புண்டு. வெள்ளையர்கள் தங்களுக்குள் சமரசம் செய்துகொள்ள இப்படிச் செய்திருக்கலாம்.

ஏற்கெனவே இருந்த தமிழ்ப் பெயரான மாதரசன் பட்டிணம், மதெஇரோஸ் என்ற போர்த்துகீசிய பெயர் மற்றும் இஸ்லாமியர்களின் மதராஸாக்கள் நிறைந்தப்பகுதி எனப் பல கூட்டுக் காரணங்களாகவும் இருக்கலாம். எது எப்படியோ, அந்த `மெட்ராஸ்' என்ற பெயர் இப்போது இல்லாமலே போய்விட்டது என்பது ஒரு பெருந்துயரமே!
மெட்ராஸ்

இந்த நகரம் அழகிய கட்டடங்களால் தனது கவர்ச்சியை உருவாக்கிக்கொண்டது. கூம்புகளுடன் கூடிய அழகிய மாதா கோயில்கள், பூங்காக்கள், கல்லறைகள், மொழிகள், மானுட நிறங்கள், அதன் கடற்கரை, அதில் வரும் கொடி மரங்கள் தாங்கிய பாய்மரக் கப்பல்கள், வெள்ளை நிற அழகிகள், பாதிரியார்கள் அவர்களது குழந்தைத் தனமான ஆரம்பக்கால தமிழ் உச்சரிப்புகள் என நிலத்துக்கு அந்நியமான பலவும் இங்கே இருந்தன. இவையெல்லாம் ஆச்சரியமானதொரு நம்பிக்கையான தோற்றத்தை மக்களுக்குத் தர, அவர்கள் பிழைப்புக்காகக் கடற்கரையை நோக்கி வந்ததற்கு முக்கிய காரணம், அவர்களுக்கு ஊதியங்கள் பணமாகக் கையில் தரப்பட்டதுதான். கூழையும், கஞ்சியையும் கையில் வாங்கி குடித்து, தானிய பதர்களைக் கூலியாகப் பெற்ற உழைக்கும் மக்களுக்கு இது ஒரு புதிய அனுபவமாக இருந்தது.

கிராம ஆண்டைகளின் கொடுமைகளிலிருந்து தப்பி நகரை நோக்கி வரும் சுயமரியாதையுள்ள மக்களின் எண்ணிக்கை கூடியது. அதில் குறிப்பிட்ட சதவிகிதத்தினர் அடக்குமுறைகளை எதிர்த்து கிராமங்களில் வாழ முடியாமல் ஓடி வந்தவர்கள். அவர்களுக்குச் சிலம்பம், குஸ்தி, சுருள் எனப் பல தற்காப்புக் கலைகளும் தெரிந்திருந்தன. இப்படி குஸ்தி வாத்தியார்கள் சுதந்திரமாக கட்டுப்பாடு இல்லாமல் நகரில் திரிந்து கொண்டிருந்த காலமது! 1750-களுக்குப் பிறகு வெள்ளையர்களின் நகரம் செல்வாக்குடன் மிளிர்ந்தது. அவர்களிடம் பணி செய்யும் கறுப்பர் நகர மக்களோ நகரில் ஒரு நிரந்தர இடத்தைப் பிடித்துக்கொண்டு சமாதானமான வாழ்வுக்கு நகர்ந்தனர்.
அந்தக்கால மெட்ராஸ்! #Classics

ஆனால், 1746லிருந்து பிரிட்டிசாருக்கும் பிரஞ்சுப் படைகளுக்கும் நடந்த சண்டை, நகரின் உழைக்கும் மக்களின் வாழ்க்கை போக்கில் மிகப்பெரிய மாற்றங்களை உண்டு பண்ணியது. பறையர் ரெஜிமென்ட் என்கிற ராணுவப் படையை உருவாக்கி பிரஞ்சுகாரர்களை விரட்டியது பிரிட்டிஷ். அது உழைக்கும் மக்களின் வாழ்வில் மிகப்பெரிய நம்பிக்கையையும் பொருளாதார பலத்தையும் உண்டு பண்ணியது. குஸ்தி வாத்தியார்கள், பாடகர்கள், கூத்து கலைஞர்கள், தங்கள் சிறப்பான வாழ்க்கையை வாழத் துவங்கக் காரணம் பிரஞ்சுகாரர்களுக்கும், பிரிட்டிசாருக்குமான அதிகார போட்டியில் பிரிட்டிஷ் படை வென்று உறுதியாக நிலை கொண்டதுதான். ஆங்கிலேயரின் வெற்றிக்கு தாங்கள்தான் காரணம் என்கிற கருத்தும்கூட அவர்களுக்கு உவப்பான நம்பிக்கை மிக்க ஒன்றாக இருந்திருக்கக் கூடும். 1759 ஜனவரியில் பிரஞ்சுகாரர்களை நிரந்தரமாக விரட்டியது பிரிட்டிஷ் படை.

மெட்ராஸ்

நகரிலிருந்த உழைக்கும் மக்களில் சாதி பேதமற்ற குஸ்தி ஆட்டக்காரர்களில் புகழ்பெற்ற ஆட்கள் அந்த நாள்களில் வலம் வந்துகொண்டிருந்தார்கள். அது தமிழ் வழியிலான குஸ்தி முறை! தொடையைத் தட்டிக்கொண்டு எதிரியின் முகத்தில் குத்துவது மற்றும் குத்து படாமல் தப்பிக்கும் முறைகளைக் கொண்டது. அந்தப் பாவனை தொண்ணூறுகள் வரை நகரத்தில் பார்க்கக் கூடிய ஒன்றாக இருந்தது. அதே நேரம் ஆங்கிலேயர்களும் ஆங்கில குத்துச் சண்டையைப் பொழுதுபோக்காகக் கொண்டிருந்தனர். தங்களுக்குள் மோதிக்கொள்வது, பிறகு பணம் வைத்து விளையாடுவது போன்றவை அன்றைய நாள்களில் நடந்துகொண்டிருந்தன. அவர்களுடன் மோதிய தமிழ் குத்துச் சண்டைக்காரர்கள் பெற்ற அனுபவத்தில் ஆங்கில குத்துச்சண்டை மெல்ல வளர்ந்து, தமிழ் குஸ்தி வாத்தியார்களிடம் பரவ... தமிழ் குத்துச் சண்டை என்பதே மறைந்துவிட்டது. இதில் உள்ள பெரிய சோகம் என்னவென்றால் நிறைய வீரர்கள் மெட்ராஸில் இருந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களைப் பற்றிய ஆவணங்கள் எதுவுமே இல்லாமல் வாய் மொழி செய்திகள் மட்டுமே ஏராளமாக இருக்கின்றன.

சூளை, பட்டாளம், சுந்தரபுரம், சிவராஜபுரம், வியாசர்பாடி, ஒத்தவாடை, ஜமரா தோட்டம் - இவையெல்லாம் குத்துச் சண்டை வீரர்கள் அதிகம் இருந்த பகுதிகளாக இருந்தன. வீழ்த்த முடியா வீரனாக சிவராஜபுரத்திலிருந்த சமரன் என்கிற குத்துச் சண்டை வீரரைப் பற்றிய கதைகள் இப்போது எவ்வளவு பேருக்குத் தெரியுமோ! சூளை அப்போரா கார்டன் பாதுகாவலர் மற்றும் டிமலஸ் ரோட்டிலுள்ள இ.ஒ.ஆ. பள்ளி காவலர் என அவர் காலத்தில் எப்பேர்பட்ட ரவுடியும் அவரது குஸ்திக்கு முன் ஒன்றுமில்லை என்ற நிலையை உருவாக்கியவர். இன்னும் பல வீரர்கள் நகரில் பெருமிதத்தோடு உலவிய காலமொன்று இருந்தது.

மதராஸ்

1970களில் சினிமா போஸ்டருக்கு இணையாகக் குத்துச் சண்டை போஸ்டர்கள் கறுப்பு வெள்ளையில் ஒட்டப்பட்டிருக்கும். சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்குக் குத்துச் சண்டை ஜுரம் போலப் பரவியிருந்த காலமது! குத்துச் சண்டை கற்க முதலில் மூக்கு தண்டை உடைத்துக்கொள்ள வேண்டும் என்ற சொல் கேட்காத பையனே நகரில் இருக்க மாட்டான். ஒவ்வொரு பகுதியிலும் குத்துச் சண்டை வஸ்தாதுகள் இருப்பார்கள். ஆனால் அவர்கள் போக்கிரிகளாக இருக்கமாட்டார்கள். நேர்மையான பஞ்சாயத்து செய்பவர்களாக அல்லது தானுண்டு தன் வேலையுண்டு என்பதாகவே அவர்கள் இருந்தனர். ஒருசிலர் விதி விலக்கு போல ரவுடித்தனங்கள் செய்திருக்கலாம். ஆனால், அந்தக் காட்சிகளெல்லாம் தொண்ணூறுகளுக்கு முன்பாகவே முடிந்துவிட்டன.

மெட்ராஸ்

அந்த அழகிய கட்டுக்கோப்பான அமைதியான தண்ணீர் சத்திரங்கள், அழகிய மணிக்கூண்டுகளுடன் பசுமையாக இருந்த பூங்காக்களைக் கொண்ட விசாலமான சாலைகள், ஜட்கா வண்டிகள், அழகிய ஆங்கிலோ இந்தியர்கள் - இன்னும் எத்தனையோ இந்த நகரில் இன்று அரிதாகிவிட்டன.

வரலாற்றில் மிகச் சமீபத்தில் உருவாகிப் புகழ்பெற்ற நகரங்களில் ஒன்றாகிவிட்டது சென்னை என்பது பெருமையான விஷயம்தான். ஆனால் அதன் அழகிய நதிகள் இன்று நாறிக்கொண்டிருக்கின்றன.

மெட்ராஸ் குறித்து உங்களுக்கு எந்தளவு தெரியும்? சுவாரஸ்யமான ஒரு குவிஸ் உங்களுக்காக... இங்கே க்ளிக் செய்யவும்!



source https://www.vikatan.com/lifestyle/miscellaneous/madras-day-a-nostalgic-look-back-at-the-citys-vast-history

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக