இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு செய்வதை நாடே கொண்டாடுகையில், ஒட்டுமொத்த இந்தியாவும் வெட்கித் தலைகுனியச் செய்யும் நிகழ்வு ஒன்றும் நடந்தது. பில்கிஸ் பானோ என்னும் பெண் மீது நிகழ்த்திய பாலியல் வன்கொடுமைக்காக ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருந்த 11 பேரை விடுதலை செய்ய ஆகஸ்ட் 15 அன்று அரசாங்கம் ஒப்புதல் வழங்கியது.
குற்றவாளிகள் சிறையில் 14 வருடங்களைக் கழித்துவிட்டனர். மேலும் வயது, குற்றத்தின் தன்மை (nature of the crime), நடத்தை இதன் அடிப்படையில் அவர்களின் கோரிக்கை மனு ஏற்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
ஒரு பெண், அதுவும் 5 மாத கர்ப்பிணி கொடூரமாகக் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உள்ளானதில் குற்றத்தின் தன்மை என்னவாக இருக்கிறது? தண்டனைக் குறைப்பு செய்யும் வகையில் (அது மன்னிப்புக் கொடுப்பதுதானே?) உள்ளதாக ஒன்றிய அரசு கருதுகிறது. இதுதான் பெண்களுக்கு இந்த நாட்டில் உள்ள மதிப்பு. அதுவும் தலித், சிறுபான்மையினர் என்றால் கேட்கவே வேண்டாம்.
யார் இந்த பில்கிஸ் பானோ? 2002-ல் குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு வன்முறை சம்பவம் நடந்தது. இஸ்லாமியர்கள் மீதான மத வெறுப்பில் அரசியல் ஆதாயத்துக்காக அப்போது மதக் கலவரம் தூண்டப்பட்டு பாலியல் வன்கொடுமைகளும் நிகழ்ந்தன. அப்போது கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானவர்தான் பில்கிஸ் பானோ. அப்போது அவருக்கு 21 வயது. 5 மாத கர்ப்பிணி. அவர் குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொடூரமாகக் கொல்லப் பட்டனர். அவருக்கு மூன்றரை வயதில் அப்போது ஒரு மகளும் இருந்தார். கொடூரமான ஆயுதங்களோடு இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டனர். அதில் இவர் குடும்பமும் பாதிக்கப்பட்டு உறவுகளை இழந்தார். அவரும் தாக்குதல் மற்றும் பாலியல் கொடுமைக்கு உள்ளாகி மயங்கிக் கிடந்து, பின் நினைவு வந்தபின் அருகில் இருந்த ஆதிவாசி பெண்ணிடம் உடலை மறைக்க துணியைப் பெற்றுக்கொண்டு, காவல் நிலைத்துக்கு சென்று புகார் கொடுத்திருக்கிறார். வழக்கு பற்றி விரிவாக இணையத்தில் உள்ளது.
இவ்வாறு மத வெறுப்புக்கும், பாலியல் வன்கொடுமைக்கும் உள்ளான ஒரு பெண்ணுக்கு கிடைத்திருக்கும் நீதி என்ன? குற்றவாளிகளுக்கு தண்டனை குறைப்பு. மன்னிப்பு. ஆனால், ஸ்டேன் சாமி போல் மக்களுக்காக நீதி கேட்டு போராடுபவர்கள் வயதானவர்களாக இருந்தாலும் சிறையில் அடைத்து சாகடிப்பது. இரட்டை ஆயுள் தண்டனை அனுபவித்திருந்தாலும் அரசியல் கைதிகளை, ஆதாரங்கள் இல்லை என்று உறுதியானாலும் 30 வருடங்களுக்கும் மேலாக சிறையிலேயே வைத்திருப்பது.
தனியுடைமை சமூகத்தில் ஆளுக்கொரு நீதி என்பது எவ்வளவு உண்மை. ஆளும் வர்க்க நலன்களுக்காக இயங்குவதே அரசு இயந்திரங்கள் என்பதை சுட்டிக்காட்டினால் அத்தகையவர்கள் தேச துரோகிகள், தீவிரவாதிகள்.
பில்கிஸ் பானோ மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு மத வெறுப்பு காரணம் என்றால் ஆணாதிக்க திமிரும் அதில் ஆழமாக வேறூன்றி உள்ளது. மத வெறுப்பு, இந்துத்துவ ஆதிக்கம், தேர்தல் சமய polarization என்பது எந்தளவுக்கு ஆபத்தானதோ அதே அளவு ஆணாதிக்க சமூக அமைப்பு தரும் privilegeம் ஆபத்தானது. மதமும் ஆணாதிக்கமும் பின்னிப் பிணைந்தவை. பாலியல் வன்முறையை ஏவ, மன்னிப்பு வழங்க இந்த அமைப்பு இடம் கொடுக்கிறது.
மானம் என்கிற ஒன்றை பெண்ணின் உடலில் திணித்து, அதைக் குலைப்பதன் மூலம் ஆண்மையை நிறுவுதல், பழி வாங்க, அதிகாரத்தை நிலைநாட்ட பாலியல் வன்முறையை (Rape) தண்டனையாக வழங்குதல் என்பதெல்லாம் நம் சமூகத்தில் இன்றும் நடக்கிறது.
சாதிக் கட்டுப்பாட்டை மீறினால் அல்லது சமூக `ஒழுங்கை’ மீறினால் அந்தக் குடும்பத்தின் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்யச் சொல்லி தண்டனை வழங்கும் பஞ்சாயத்து தீர்ப்புகள் இன்னமும் உள்ளது. (திருமணமான ஒரு பெண்ணோடு ஒரு பையன் ஓடியதால், அவனின் அக்காக்களுக்கு இத்தகைய தண்டனை வழங்கப்பட்டது)
இனக்குழுவாக மக்கள் வாழ்ந்தபோது ஓர் இனக்குழு மற்றொரு இனக்குழுவை அடிமைப்படுத்த போர் தொடுக்கையில் அவ்வினத்து பெண்களை வல்லுறவு செய்யும். ராஜாக்கள் காலத்திலும் அது தொடர்ந்தது. கைப்பற்றி வரும் பெண்களை தம் ஆசை நாயகிகளாக, பாலியல் அடிமைகளாக, `பெருந்தன்மையோடு’ மனைவியாக ஆக்கிக்கொண்ட வரலாறு உலகெங்கும் உள்ளது.
பெண்களின் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமை என்பது நல்லவர், கெட்டவர், மத வெறுப்பு, அரசியல் ஆதாயம் என்பதாக மட்டும் கருதுவது அறியாமை. பெண்கள் மீதான ஆணாதிக்க அதிகாரமே பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு வழி வகுக்கிறது. பாலியல் குற்றம் என்பது சமூகக் குற்றம். Rape or Sexual violence is no more an Individual Crime, it’s a Social Crime. சாதியக் கொடுமை, மதக் கலவரம் போல் பாலியல் வன்கொடுமைகளும் சமூகக் குற்றமே. எந்த ஒரு குற்றத்திலும் ஒரு சமூக அமைப்புக்கு மிகப் பெரிய பங்கு உள்ளது. மனிதர்களிடையே எத்தகைய உறவு நிலவுகிறது, எப்படிப்பட்ட வாழ்க்கைத் தரம் நிலவுகிறது என்பதெல்லாம் சேர்ந்தே மனித உணர்வுகளைத் தீர்மானிக்கிறது.
ஆண் - பெண் உறவில், ஆண் மேலானவன் பெண் கீழானவள். பெண் என்பவள் குடும்பத்துக்காக உருவானவள். அவள் அடக்கி ஆளப்பட வேண்டியவள், அவளது திறமை எத்தகையதாக இருந்தாலும் அவள் மனைவியாக, அம்மாவாக, குடும்பத்துக்கு எப்படி கட்டுப்பட்டு இருக்கிறாள் என்பதைப் பொறுத்தே இந்த சமூகத்தில் ஒரு பெண்ணுக்கான மரியாதை கிடைக்கும். ஆனால், அதே சமூகம்தான் ஆண்களின் பாலியல் இச்சைக்காக பெண்களை கவர்ச்சிப் பண்டங்களாகவும் வேசியாகவும், பாலியல் தொழிலாளியாகவும் வகைப்படுத்தி பயன்படுத்திக்கொள்ளவும் செய்கிறது.
பெண் பற்றிய சமூகத்தின் மனநிலையே தனி மனிதனின் மனநிலையுமாகும். சமூகம் என்கையில் இதுகாரும் நிலவி வந்துள்ள கூட்டுச் சமூக ஏற்பாடுகள், பண்பாடு, வாழ்க்கை முறை எல்லாமும் சேர்ந்து பெண்களை என்னவாக வகைப்படுத்தி உள்ளது என்று புரிந்துகொள்ள வேண்டும். ஆணாதிக்கம் என்றதும் ஆண்களை கெட்டவர்கள் என்று சொல்வதாக பொருள் இல்லை. ஆணாதிக்கம் என்பது அனைத்து பாலினங்களிலும் ஊட்டி வளர்க்கப்பட்டுவிட்ட சிந்தனை. அதிலிருந்து விடுபட்டவர்கள் வெகு சிலர். மாற்று சிந்தனைகளை கற்று, பெற்று அவர்கள் அதிலிருந்து மீள்கின்றனர். ஆனால், பெரும்பான்மை சமூகம் ஆணாதிக்கமயமானதே. இந்த ஆணாதிக்க சமூகமானது ஆண்களுக்கு எல்லையற்ற அதிகாரத்தை வழங்குகிறது.
மேலோட்டமாகப் பார்த்தால் இது புரியாது. பெண்கள் முன்பை விட உயர்ந்துவிடார்கள். சுதந்திரமாக உலவுகிறார்கள் என்று தோன்றலாம். ஆனால், உண்மை அதுவல்ல. குறிப்பாக, எந்த ஒரு சமூகத்தில் பெண் மீதான பாலியல் வன்முறை, குடும்ப வன்முறை, பொருளாதார சுரண்டல், ஆணைச் சார்ந்து வாழ வேண்டிய நிலை இதெல்லாம் நிலவுகிறதோ அந்த சமூகம் ஆணாதிக்க சமூகமே. அது ஒரு குற்றச் சமூகமே. தவறான சமூகம் தவறான எண்ணங்களையும், தவறான அதிகாரங்களையும், கெட்ட மனிதர்களையுமே உருவாக்கும். நீதியும் அதற்கேற்ற வகையில் வளைந்து கொடுக்கும் வகையில் இயங்கும். நிர்பயா வழக்கு, வாச்சாத்தி வழக்கு, ராணுவம் செய்யும் பாலியல் வன்கொடுமைகள், தற்போது பில்கிஸ் பானு வழக்கு, தனி நபர்கள் செய்யும் பாலியல் சீண்டல் தொடங்கி வன்கொடுமைகள் எல்லாவற்றுக்கும் அடித்தளம் ஆணாதிக்க சமூகம்.
மதம், ஆணாதிக்கம் போன்றவை சொத்து சேர்க்கும் முறை உருவான போது உண்டான ஏற்பாடுகள். அதற்கேற்ற அதிகார அமைப்புகள் உருவானதும், அரசியல் என்பதில் இதெல்லாம் சகஜம் என்று கருதும் நிலைக்கு மக்களும் ஆளாகி விட்டனர். Violence, Religious Politics, Scandal everything is normalized here.
அதனால் தான் தனிப்பட்ட நிலையில் சிறுமிகள், பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் போது ஏற்படும் கொந்தளிப்பு, வெறுப்பு அரசியலால் ஏவப்படும் வன்முறையின் போது ஏற்படுவதில்லை. ஆதிக்க சமூகத்தை விடுத்து மற்ற பெண்களுக்கு அநீதிகள் நடக்கையில் ’அவர்களுக்கு அது தகும்’ என்று கருதும் அளவுக்கு இங்கே வெறுப்பரசியல் வளர்க்கப்பட்டுள்ளது.
பெண்கள் நிலை குறித்தும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும் இந்த சமூகத்தில் ஒரு மரத்துப்போன தன்மையே நிலவுகிறது. ராமர் கோவில், மாட்டுக்கறி உண்ணுதல், முருகனுக்கு வேல் எடுத்துச் செல்வது, எந்தக் கோயிலில் முதலில் எந்த சாமி இருந்தார் என்று மக்களுக்கு எல்லா நேரமும் மதம், பண்பாடு என்பது தான் இங்கு பெரும் பிரச்சினை. போலியான அடையாளங்கள் பற்றி கவலைப்படும் வகையில் மக்களை உணர்ச்சிகர அரசியலில் வைத்திருப்பதே ஆளும் அரசுகளின், மத அமைப்புகளின் வேலையாக இருக்கிறது.
பெண்களை மதிக்க வேண்டும் என்று பெண்களை பெண்மைக்குள்ளேயே வைத்துக் கொண்டு போற்றிக் கொண்டே அவளை சுரண்டும் போக்கு ஒரு பக்கம் என்றால், பெண் வெறுப்பை பற்றிக் கொண்டு பெண்களை இழிவுபடுத்தி, பெண்களையே குற்றம் சொல்லி, பெண்களை அடக்கி வைக்கச் சொல்லி இயங்கும் போக்கு மறுபக்கம்.
பில்கிஸ் பானோவுக்கு நிகழ்ந்திருக்கும் கொடுமை போல் எத்தனை கொடுமைகள் இந்த நாட்டில், உலகில் நடக்கின்றன? பெண் என்றாலே பாதுகாப்பு இல்லை, கூடுதலாக சாதி, மதம், இனம், நிறம் அடிப்படையில் இரண்டாம் நிலையில் இருக்கும் பெண்களின் நிலை அதைக் காட்டிலும் மோசமாக உள்ளது.
பெண் நிலை உயர்வதற்கான சமூக மாற்றம் தான் முழுமையானதொரு தீர்வு என்றாலும், தற்போதைக்கு குறைந்தபட்ச நீதியாவது காக்கப்பட வேண்டும் அல்லவா?
பாலியல் குற்றங்களை பதிவு செய்வது தொடங்கி, விசாரணை முறை, ஆதாரங்கள் கேட்கும் முறை, எடுக்கப்படும் முறை, பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்டவரை சமூகம் பார்க்கும் முறை என்று எல்லா நிலையிலும் பெண்களுக்கான நீதி என்பது மறுக்கப்பட்டே வருகிறது. பாலியல் குற்றவாளிகளுக்கு தண்டனையைக் குறைத்து மன்னிப்பு வழங்குவது, ஜாமீனில் விடப்படுவது, ஆதாரம் இல்லை என்று விடுதலை செய்வது, இவற்றின் மூலம் அரசும், நீதித் துறையும் சமூகத்திற்கு முன்வைக்கும் நீதி என்ன?
ஜாமீனில் வெளி வந்த ஒருவன் தனக்கு தண்டனை பெற்று தந்த பெண்ணை பழி வாங்க மீண்டும் கூட்டுப் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட செய்த சமீபத்தில் வந்தது. இவ்வளவு மோசமான சூழல் நிலவுகையில் பாலியல் குற்றவாளிகளுக்கு சுதந்திர தினத்தன்று மன்னிப்பு வழங்குகிறார்கள்/விடுவிக்கிறார்கள் என்றால் அரசும், நீதித்துறையும் பெண்களை என்னவாக பார்க்கிறது என்கிற கேள்வியை ஒட்டுமொத்த சமூகம் எழுப்ப வேண்டும்.
ஆங்காங்கே ஒரு சிலர் கோவப்படுவதால் ஏற்படும் மாற்றத்தை விட ஒரு அநீதி நடக்கையில் ஒட்டுமொத்த சமூகமும் சேர்ந்து கேள்வி எழுப்பினால் அது ஒற்றுமையின் வெளிப்பாடாக இருக்கும். நம்மின் ஒற்றுமையே பலம், அதிகாரத்தை ஆட்டம் காணச் செய்யும். ஒற்றுமை அல்லாத நிலையே மதவெறுப்புக்கும் அச்சாரமாக இருக்கிறது. அது பெண்களுக்கெதிரான வன்கொடுமைக்கு சாதகமாகவும் அமைகிறது. நம் கையைக் கொண்டு நம் கண்னையே குத்தும் ’ஜனநாயகம்’ மற்றும் பிரித்தாளும் அரசியல் எத்தகையது என்று மக்கள் இன்னும் ஆழமாக சிந்திக்க வேண்டும்.
பில்கிஸ் பானோவுக்கு நீதி கிடைக்கவில்லை. குற்றவாளிகளுக்கு தண்டனை மட்டுமே கிடைத்தது. அவர் இழந்த எதையும் சரி செய்ய இயலாது. இன்று அந்த தண்டனையும் குறைக்கப்பட்டு பாலியல் குற்றவாளிகளை விடுதலை செய்வது அநீதியின் உச்சம். தாய்நாடு, தாய்மொழி, பெண்களை போற்றும் ஒவ்வொரும் இந்த அநீதியை எதிர்க்க வேண்டும். அந்தக் குற்றவாளிகளை விடுதலை செய்யக் கூடாது. யாருக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்று ஓர் அறம் நிலவ வேண்டும். மன்னிப்பை சமூகம் தான் தீர்மானிக்க வேண்டும். அரசு எப்படி தீர்மானிக்க இயலும்? அரசு எப்படி ஒரு சாராரின் சார்பு எடுக்க இயலும்? அதுவும் பாலியல் குற்றவாளிகளின் சார்பு எடுக்கும் அரசு எத்தகையது?
பாலியல் குற்றவாளிகளுக்கு எந்தவித கருணையும், மன்னிப்பும் வழங்கலாகாது. அது தவறு செய்பவர்களை ஊக்கப்படுத்துவதற்கு சமம், பெண்களை தாழ்வாக கருதுவதாக அரசும், நீதித்துறையும் ஒப்புக்கொள்வதற்குச் சமம்.
பெண்களை காக்க இயலாத அரசு நாட்டை மட்டும் காத்துவிடுமோ?
- கொற்றவை
source https://www.vikatan.com/social-affairs/judiciary/bilkis-bano-case-all-convicts-are-freed-a-shameful-truth
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக