விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம் ஆன்லைன் கடன் ஆப் மூலமாக 18 லட்சத்து 15 ஆயிரத்து 991 ரூபாயை மர்மகும்பல் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இரண்டு பேரை போலீஸ் கைது செய்துள்ளது. இந்த குறித்து போலீஸிடம் பேசினோம், "விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தொழில் விரிவாக்கத்திற்காக சிலரிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால், அவருக்கு வேண்டியத்தொகை கிடைக்காததால் ஆன்லைனில் உடனடி கடன் ஆப் மூலமாக தொழில்கடன் பெற முயற்சித்துள்ளார். இதற்காக கடந்த 31.03.2022-ம் தேதி கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து 27 இன்ஸ்டன்ட் லோன் ஆப்களை டவுண்லோடு செய்து அதன் மூலமாக 28 லட்சத்து 93 ஆயிரத்து 643 ரூபாயை கடனாக பெற்றுள்ளார்.
தொடர்ந்து 04.04.2022-ம் தேதியிலிருந்து அவருக்கு பல்வேறு நபர்கள் வெவ்வேறு நம்பர்களிலிருந்து போன் செய்து கடனை திரும்பக் கேட்டுள்ளனர். கடனைத்திரும்ப தராவிட்டால் குடும்பத்துடன் இருக்கும் போட்டோவை ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் வெளியாடுவோம் என மிரட்டியுள்ளனர். இதனால் பயந்துப்போன அவர், குற்றவாளிகள் சொன்னபடி பல்வேறு யு.பி.ஐ.நம்பருக்கு மொத்தம் 47 லட்சத்து 9 ஆயிரத்து 634 ரூபாய் வரை திரும்பக் கொடுத்துள்ளார். ஆனாலும், அவரை விடாமல் தொடர்ந்து பணம் கேட்டு குற்றவாளிகள் மிரட்டியுள்ளனர். அதற்கு அவர், பணம் தர மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த குற்றவாளிகள், தொழிலதிபரின் படத்தை ஆபாசமாக சித்தரித்து அவரின் நண்பர்களுக்கு ஆன்லைனில் அனுப்பியுள்ளனர். இதனால் மனவேதனையடைந்த அவர், சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் உத்தரவின் பேரில், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை பிடிக்க பணிகள் தொடங்கியது.
அதன்படி, போலீஸ் விசாரணை நடத்தியதில் கோயம்புத்தூரை சேர்ந்த புரோக்கர் ஒருவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை கைதுசெய்து விசாரணை நடத்தினோம். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மாஞ்சேரி மற்றும் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த அப்துல் ரஹ்மான், முகமது சாதிக் ஆகியோர் தான் சாத்தூர் தொழிலதிபரிடம் பேசி பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, அப்துல் ரஹ்மான், முகமது சாதிக் இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து, 65 சிம்கார்டுகள், 17 செல்போன்கள், 10 வங்கி காசோலை புத்தகங்கள், 6 ஏ.டி.எம்.கள், 1 லேப்டாப், மோர்டம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்களின் வங்கி கணக்கிலிருந்த பணம் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபர்கள் அடிமட்ட ஆட்கள் மட்டுமே. இந்த கும்பலின் தலைவன் வெளிநாட்டில் இருந்துக்கொண்டு மூளையாக செயல்படுவதாக சொல்லப்படுகிறது. எனவே இந்த சங்கிலித் தொடரில் உள்ளவர்கள் குறித்து தொடர் விசாரணை நடத்தி வருகிறோம். இந்த நெட்வொர்க்கில் உள்ளவர்கள் இதுபோன்று பல நபர்களிடம் பணத்தை மோசடி செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதுகுறித்தும் விசாரணை நடத்துகிறோம்.
மோசடி கும்பல்கள் பெரும்பாலும் தமிழகத்தை குறிவைத்தே களத்தில் இறங்கியுள்ளது. எனவே, ஆன்லைனில் இன்ஸ்டன்ட் லோன் சம்பந்தமாக எந்த அப்ளிகேஷன்களையும் பதிவிறக்கம் செய்து ஏமாற வேண்டாம். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மோசடி அப்ளிகேஷன்கள் குறித்து புகாரளிக்கப்பட்டு அவை தற்போது பிளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. மேலும் மோசடி கும்பல்கள், ஏமாற்றி சேர்த்த பணத்தை கிரிப்டோ கரன்சிகளாக மாற்றி பல்வேறு நாடுகளில் முதலீடு செய்து வைத்துள்ளதாக தெரியவருகிறது. இதன் உண்மைதன்மை குறித்து ஆராய்ந்து வருகிறோம். விரைவில் வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றவர்களையும் கைது செய்வோம்" என்றனர்.
source https://www.vikatan.com/news/crime/virudhunagar-online-loan-app-frauds-2-kerala-people-arrested
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக