Ad

திங்கள், 29 ஆகஸ்ட், 2022

Motivation Story: `நீ ஜெயிச்சுட்டே டெபி’ - சவாலை வென்று உலகப் புகழ்பெற்ற டெபி ஃபீல்ட்ஸ்!

`நல்ல உணவைச் சாப்பிடுவதற்கு வெள்ளி ஸ்பூன் தேவையில்லை!’ - பால் புருதாம் (Paul Prudhomme), பிரபல அமெரிக்க சமையற்கலைஞர்.

அம்மாவைப் பார்க்க வெகு தூரத்திலிருந்து அவருடைய தோழி வந்திருந்தார். வீட்டுக்குள் நுழைந்ததுமே அம்மா, அவரின் இரு கைகளையும் பற்றி இழுத்து மார்போடு அணைத்துக்கொண்டார். இருவரும் வரவேற்பறையில் உட்கார்ந்து ``எப்படியிருக்கே?’’ என்கிற விசாரிப்போடு உரையாடலைத் தொடங்கினார்கள். பேச்சில் உலகையே மறந்துபோனார்கள். அவர்களையே சற்று நேரம் பார்த்துக்கொண்டிருந்த டெபி அவர்களுக்கு அருகே வந்தாள்.

``அம்மா... ஆன்ட்டிக்கு ஏதாவது சாப்பிடக் கொண்டு வரட்டுமா?’’

``நீ ஏன் கண்ணு சிரமப்படுறே... அப்புறம் பார்த்துக்கலாம்’’ என்றார் தோழி.

``அட நீ வேற... வீட்டுக்கு யார் வந்தாலும் டெபி கையால சாப்பிடாமப் போக மாட்டாங்க. அது இந்த வீட்டுல ஒரு பழக்கம். நீ போ டெபி... ஆன்ட்டி பாராட்டுற மாதிரி ஏதாவது செஞ்சு எடுத்துக்கிட்டு வா...’’

துள்ளிக் குதித்து சமையலறைப் பக்கம் ஓடினாள் டெபி. அப்போது அந்தச் சிறுமிக்கு 14 வயது. பலருக்கும் சாப்பிடப் பிடிக்கும்; சமைக்கப் பிடிக்காது. சிலருக்கோ சமைக்கப் பிடிக்கும்; தான் சமைத்ததைப் பிறர் ருசித்துச் சாப்பிடுவதை ரசிப்பது மிகவும் பிடிக்கும். இதில், டெபி இரண்டாவது ரகம். ருசி என்பது உணவில் சேர்க்கப்படும் மசாலா, வாசனைப் பொருள்களில், செய்முறையில் இருப்பதில்லை. உணவை மனமார ரசித்துச் செய்பவரின் கரங்களில் இருக்கிறது. இந்த உண்மை அந்தச் சிறுமிக்கு சிறு வயதிலேயே புரிந்திருந்தது.

Mr. Fields Bakery

அன்றைக்குத்தான் ஒரு வார இதழில் ஒரு புது ரெசிப்பியின் செய்முறையைப் படித்திருந்தாள் டெபி. ஆனால், அதையே ஈயடிச்சான் காப்பிபோல அடிக்காமல், அதன் மூலப்பொருள்களை எப்படியெல்லாம் மாற்றியமைக்கலாம், இன்னும் வேறு என்னென்ன உணவுப்பொருள்களையெல்லாம் சேர்க்கலாம் என்பதை ஏற்கெனவே மனதளவில் ஒத்திகை பார்த்துவைத்திருந்தாள். அதன்படி செய்தாள். சுடச்சுட, மணக்க மணக்க அவள் செய்திருந்த புது ரெசிப்பியை அம்மாவுக்கும், அவருடைய தோழிக்கும் இரண்டு தட்டுகளில் கொண்டு வந்து வைத்தாள். ஒரு வாய் சாப்பிட்டுப் பார்த்த அம்மாவின் தோழி அந்த ருசியில் மயங்கிப்போனார். உடனே எழுந்து எதையும் யோசிக்காமல் டெபியை வாரி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டார்.

``அடடா... அற்புதம் கண்ணு... இப்படி ஒரு ருசியான ஒண்ணை நான் சாப்பிட்டதே இல்லை. நீ நல்லா இருக்கணும்மா... நான் சொல்றேன், எழுதிவெச்சுக்கோ... நீ பெரிய ஆளா வருவே.’’

இந்த வாழ்த்தைக் கேட்ட அம்மாவின் கண்களில் நீர் திரண்டது. அந்த வாழ்த்து பலிக்கவும் செய்தது.

டெபி ஃபீல்ட்ஸ் (Debbie Fields)... இந்தப் பெயர் இன்றைக்கு உலகம் முழுக்கப் பிரபலம். கலிஃபோர்னியாவில் இருக்கும் ஓக்லாண்டில் பிறந்தார் டெபி. அப்பா சாதாரண வெல்டிங் தொழிலாளி. அம்மா வீட்டு நிர்வாகி. இவர்களுக்குப் பிறந்த ஐந்து பெண் குழந்தைகளில் கடைக்குட்டி டெபி. பிஸ்கெட், கேக், ரொட்டி... எதுவாகவும் இருக்கட்டும். புதுசு புதுசாக செய்து பார்த்தார் டெபி. `அடடே... நல்லா இருக்கே. இதை எப்படி செஞ்சே?’ என்கிற ஒரு பாராட்டு போதும். அவரின் உச்சி குளிர்ந்துவிடும். பாராட்டுதானே பலரை வாழவைத்துக்கொண்டிருக்கிறது?

ஒருநாள் அம்மாவிடம் வந்து ஒரு யோசனையைச் சொன்னார் டெபி.

``அம்மா... நாமளே சொந்தமா ஒரு பேக்கரி ஆரம்பிக்கலாம்மா. நானே ஒவ்வொண்ணையும் பார்த்துப் பார்த்து செய்யறேனே...’’

Mrs.Fields bakery

ஒரு கணம்கூட தாமதிக்கவில்லை அம்மா. ``பேக்கரியா... என்ன விளையாடுறியா... ஒரு பேக்கரி வைக்க எவ்வளவு செலவாகும் தெரியுமா... அவ்வளவு பணத்துக்கு நாம எங்க போறது... சரி, பேக்கரி நடத்துற அளவுக்கு இப்போ என்ன அனுபவம் உனக்கு இருக்கு... இப்போதான் ஜூனியர் காலேஜை முடிச்சிருக்கே. மேற்கொண்டு படிச்சு நல்ல வேலைக்குப் போற வழியைப் பாரு. அப்புறம் இன்னொண்ணு... நம்ம பரம்பரையில யாருமே வியாபாரம் செஞ்சது கிடையாது. அதெல்லாம் நமக்குச் சரிப்பட்டு வராது...’’

இந்த பதிலைக் கேட்டு கூனிக் குறுகிப்போனார் டெபி. ஆனால், அந்தக் கனவு மட்டும் உள்ளுக்குள் கனன்றுகொண்டே இருந்தது.

தினம் தினம் புதுப்புது ரெசிப்பிகளை செய்து பார்ப்பது; அதைப் பிறருக்குச் சாப்பிடக் கொடுத்து அவர்களின் பாராட்டைப் பரிசாகப் பெறுவது... என்று டெபியின் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது. அதிலும் ஒரு திருப்பம் வந்து சேர்ந்தது. 1976-ம் ஆண்டு, தன் 19-வது வயதில் ஃபீல்ட்ஸ் (Randall Keith Fields) என்பவரைத் திருமணம் செய்துகொண்டார் டெபி. ஃபீல்ட்ஸ், பொலிட்டிக்கல் சயின்ஸ் படித்தவர். பிறரின் மனதைப் புரிந்துகொள்ளக்கூடிய பக்குவம் வாய்ந்தவர். அவருக்கு டெபியின் கனவு பிடித்திருந்தது. அதற்கு அவர் தடை போடவே இல்லை.

``பேக்கரி ஆரம்பிக்கப்போறியா... தாராளமா செய். உன்னுடைய முயற்சியிலயோ, வேலையிலயோ நான் தலையிடவே மாட்டேன்.’’

அந்தக் காலத்தில் மனைவியை இப்படி ஊக்கப்படுத்துகிற கணவர்கள் வெகு அரிதானவர்கள். அவரின் உயர்ந்த குணம் டெபிக்கு மேலும் ஊக்கம் கொடுத்தது. தன் திறமையை முன்னிலைப்படுத்தி, ஒரு பேக்கரி தொடங்குவதற்காகக் கடனும், நிதி உதவியும் கேட்டு வங்கி வங்கியாக ஏறி இறங்கினார்.

டெபி ஃபீல்ட்ஸ் |Debbi Fields

``உங்ககிட்ட இன்வெஸ்ட்மென்ட் பண்றதுக்கு எவ்வளவு பணம் இருக்கு, உங்களுக்கு சொத்து ஏதாவது இருக்கா, பெரிய பணக்காரங்க யாராவது உங்களுக்காக ஷ்யூரிட்டி போடுவாங்களா?’’ என்று கேள்விகளை அடுக்கின வங்கிகள். சோர்ந்து போய்விடவில்லை டெபி. அவருக்கும் ஒரு கதவு திறந்தது. ஒரு வங்கி அவரின் திறமையை மதித்து கடன் கொடுத்தது, ஆனால் பல நிபந்தனைகள். எல்லாவற்றுக்கும் ஓகே சொன்னார் டெபி.

1977, ஒரு சுபயோக சுபதினத்தில் அது நடந்தது. கலிஃபோர்னியாவிலிருக்கும் பாலோ ஆல்டோவில் ஒரு பேக்கரிக் கடையைத் திறந்தார் டெபி. கடையின் பெயர் `மிஸஸ் ஃபீல்ட்ஸ் (Mrs. Fields).’ காலை 8 மணிக்குக் கடை திறந்தாகிவிட்டது. 11 மணி. சாலையில் போகும் ஒரு மனிதர்கூட அந்தக் கடையைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. டெபியின் கணவர் ஃபீல்ட்ஸ் நொந்துபோனார்.

``இதோ பாரு டெபி... இது என்னமோ எனக்கு வேலைக்காகும்னு தோணலை. ஒண்ணு பண்ணு... இன்னிக்கி ராத்திரிக்குள்ள ரொம்ப வேணாம், 50 டாலருக்கு இந்தக் கடையில வியாபாரம் நடந்துச்சுன்னா, உன் திறமையை நான் ஏத்துக்குறேன். இன்னிக்கு நைட் ஒரு ஹோட்டல்ல உனக்கு பிரமாதமான டின்னர் வாங்கித் தர்றேன். அப்படி இல்லைன்னா, நாளைக்கே கடையை மூடிட்டு நம்ம வேலையைப் பார்க்கப் போயிடலாம். சரியா..?’’

சொல்லிவிட்டு ஃபீல்ட்ஸ் கிளம்பிப் போய்விட்டார். மதியம் 3 மணி. அதுவரை ஒருவர்கூட கடைக்கு வரவில்லை. `கடைவிரித்தோம்... கொள்வாரில்லை’ என்று நொந்துகொள்ளவில்லை டெபி. வெளியே வந்தார். காத்திருந்தார். நடந்து வந்த ஒரு மனிதரை நிறுத்தினார்.

டெபி ஃபீல்ட்ஸ் |Debbi Fields

``ஐயா... புதுசா கடை தொறந்திருக்கேன். நீங்க பணம் கொடுத்து எதையும் வாங்க வேணாம். நான் செஞ்ச ஒரே ஒரு கேக்கைச் சாப்பிட்டுட்டு எப்படி இருக்குன்னு மட்டும் சொல்லுங்க போதும்.’’

அந்த மனிதர் ஒரு கணம் யோசித்தார். பிறகு தலையாட்டினார். கடைக்குள் வந்தார். கேக்கைச் சாப்பிட்டார். அசந்துபோனார். காசு கொடுத்து வீட்டுக்கு சில கேக்குகளை பார்சல் வாங்கிக்கொண்டு போனார். இப்படி வாசலில் நின்று பல பேரை அழைத்து வியாபாரம் செய்தார் டெபி. அன்றைக்கு அவர் அழைத்து சாப்பிட்டுப் பார்த்த எல்லோருக்குமே டெபியின் பேக்கரியில் இருந்த எல்லாமே பிடித்துப்போனது. அன்றைக்கு அவருடைய விற்பனை 75 டாலர்.

வெறும் வாய்மொழி விளம்பரம்... கடை விரிந்தது. கிளைகள் பிறந்தன. ஆனால், ருசியிலும் தரத்திலும் மட்டும் டெபி எந்தக் காலத்திலும் சமரசம் செய்துகொண்டதில்லை. முதல் நாள் உணவையும், ருசியில்லாதவற்றையும் தூக்கி எறிவதை ஒரு வழக்கமாகவே வைத்திருந்தார் டெபி. இன்றைக்கு `மிஸஸ் ஃபீல்ட்ஸ்’ உலகப் புகழ்பெற்ற உணவகம்.

டெபியின் வாழ்க்கை நமக்கு உணர்த்துவது ஒன்றைத்தான். ரசனையோடுகூடிய உண்மையான உழைப்பு தருவது `வெற்றி’ என்கிற பரிசைத்தான்!


source https://www.vikatan.com/business/news/motivation-story-about-entrepreneur-debbi-fields

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக