Doctor Vikatan: காலை உணவுக்கு கார்ன்ஃப்ளேக்ஸ் சாப்பிடுவது எந்த அளவுக்கு ஆரோக்கியமானது? அதை எப்படிச் சாப்பிடுவது சரியான முறை? பால், பழங்கள் சேர்த்துச் சாப்பிடுவது சரியானதா? எவ்வளவு எடுத்துக் கொள்ள வேண்டும்?
பதில் சொல்கிறார் ஜெர்மனியைச் சேர்ந்த ஃபிட்னெஸ் எக்ஸ்பர்ட்டும், ஊட்டச்சத்து ஆலோசகருமான கனி செல்வம்...
கார்ன்ஃப்ளேக்ஸ் எளிதில் கிடைக்கக்கூடிய உணவு மட்டுமல்ல, சமைக்கத் தேவையின்றி, இன்ஸ்டன்ட்டாக அப்படியே சாப்பிடக்கூடிய உணவும்கூட. வயிறும் நிரம்பும். கார்ன்ஃப்ளேக்ஸை தினமுமே காலை உணவாக எடுத்துக்கொள்ளும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது.
கார்ன்ஃப்ளேக்ஸை பால், ஃப்ரெஷ் பழங்கள் மற்றும் டிரை ஃப்ரூட்ஸ்,நட்ஸுடன் சேர்த்துச் சாப்பிடலாம். கார்ன்ஃப்ளேக்ஸில் 'ஹை ஃப்ரக்டோஸ் கார்ன் சிரப்' ( high fructose corn syrup) வடிவில் அதிக சர்க்கரை சேர்க்கப்பட்டிருக்கும். அதாவது அதில் கிளைசெமிக் இண்டெக்ஸ் அதிகமிருப்பதால் தினசரி பயன்பாட்டுக்கு உகந்த உணவல்ல. அதென்ன கிளைசெமிக் இண்டெக்ஸ்? ஓர் உணவை உண்ணும்போது ரத்தத்தில் சர்க்கரை அளவானது எவ்வளவு சீக்கிரம் அதிகரிக்கிறது என்பதைக் காட்டுவதே கிளைசெமிக் இண்டெக்ஸ். பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை சேர்த்த, மாவுச்சத்து நிறைந்த உணவுகள் அதிக கிளெசெமிக் இண்டெக்ஸ் கொண்டவை.
100 கிராம் கார்ன்ஃப்ளேக்ஸில் 368 கலோரிகள் இருக்கும். ஒவ்வொரு வேளை உணவுக்கும் நீங்கள் சரிவிகிதமாகவே சாப்பிட வேண்டும். அப்போதுதான் அன்றைய ஊட்டச்சத்து தேவை உடலுக்குப் போய்ச் சேரும். அந்த வகையில் கார்ன்ஃப்ளேக்ஸ் என்பது சரிவிகித உணவா என்றால் இல்லை என்பதுதான் உண்மை. எனவே அதைச் சாப்பிடுவதாக இருந்தால், அத்துடன் புரதச்சத்தும் நார்ச்சத்தும் இருக்கும்படி திட்டமிட்டுச் சாப்பிட வேண்டும்.
கார்ன்ஃப்ளேக்ஸில் புரதச்சத்துக்காக வே புரோட்டீன் பவுடரும், நார்ச்சத்துக்காக பழங்களையும், கொழுப்புச்சத்துக்காக நட்ஸையும் சேர்த்துச் சாப்பிடலாம். எதையுமே சாப்பிட நேரமில்லை என்பவர்கள், எதையாவது இன்ஸ்டன்ட்டாக சாப்பிட வேண்டும் என்ற நிலையில் கார்ன்ஃப்ளேக்ஸை கொஞ்சமாக எடுத்துக்கொள்ளலாம். அத்துடன் வே புரோட்டீன் பவுடரையும் பழங்கள் மற்றும் நட்ஸையும் சேர்த்துச் சாப்பிடலாம்.
கார்ன்ஃப்ளேக்ஸைவிடவும் முட்டை தோசை சிறந்தது. சைவ உணவுக்காரர்கள் என்றால் சீஸ் தோசை சாப்பிடலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
source https://www.vikatan.com/food/healthy/doctor-vikatan-is-it-okay-to-eat-cornflakes-for-breakfast-every-day
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக